மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாவது வேட்பாளர் பட்டியலை மத்தியில் ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 72 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் ஸ்டார் வேட்பாளர்களாக ஷிமோகா தொகுதியில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா போட்டியிடுகின்றார். இந்த பட்டியலில் தமிழ்நாட்டினைச் சேர்ந்த தொகுதிக்கான வேட்பாளர்கள் பெயர் எதுவும் இல்லை.
இந்த பட்டியலில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிடுகின்றார். அதேபோல் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் இமாச்சல பிரதேசத்தின் ஹமிர்பூரிலும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மஹாராஸ்ட்ரா மாநில நாக்பூரிலும் போட்டியிடுகின்றனர். கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை ஹாவேரியில் போட்டியிடுகின்றார். பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா பெங்களூரு தெற்கு தொகுதியில் களமிறங்குகின்றார். மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி வரும் மக்களவைத் தேர்தலில் கர்நாடகா மாநிலம் தார்வாட்டில் போட்டியிடுகிறார். ஹரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார் லோக்சபா தேர்தலில் கர்னால் தொகுதியில் போட்டியிடுகிறார். உத்தரகாண்ட் மாநிலம் கர்வால் தொகுதியில் அனில் பலுனி போட்டியிடுகிறார்.
இந்த வேட்பாளர்கள் பட்டியலில் டையு டாமன், டெல்லி, ஹரியானா, குஜராத்இமாச்சல பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம், மஹாராஷ்ட்ரா, தெலுங்கானா, திரிபுரா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் டையு டாமனில் உள்ள ஒரு தொகுதிக்கும், டெல்லியில் இரண்டு தொகுதிகளுக்கும், குஜராத்தில் ஏழு தொகுதிகளுக்கும், ஹரியானாவில் 6 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், இமாச்சல பிரதேசத்தில் இரண்டு தொகுதிகளுக்கும், கர்நாடகாவில் 20 தொகுதிகளுக்கும், மத்திய பிரதேசத்தில் 5 தொகுதிகளுக்கும் மஹாராஷ்ட்ராவில் 20 தொகுதிகளுக்கும், தெலுங்கானாவில் ஆறு தொகுதிகளுக்கும் திரிபுராவில் ஒரு தொகுதிக்கும் மற்றும் உத்தரகாண்டில் இரண்டு தொகுதிக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பாஜக ஏற்கனவே தனது முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் மொத்தம் 195 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்திருந்தது.
முதற்கட்ட அறிவிப்பில் அதிகமாக உத்தர பிரதேசம் மாநிலத்தில் 51 வேட்பாளர்களும் மத்திய பிரதேசத்தில் 24 தொகுதிகளுக்கும் மேற்கு வங்கத்தில் 20 தொகுதிகளுக்கும் வேட்பாளார்களை பாஜக தலைமை அறிவித்தது.
அதன் பின்னர் குஜராத் மாநிலத்தில் 15 தொகுதிகளும், கேரளா மாநிலத்தில் 12 தொகுதிகளும், அசாம், ஜார்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தலா 11 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது. அதேபோல் தெலுங்கானாவுக்கு 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். டெல்லியில் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டர். உத்தரகாண்ட் மாநிலத்தில் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் மற்றும் அருணாசால பிரதேசத்தின் இரண்டு தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்களை அறிவித்தது. யூனியன் பிரதேசங்களில் கோவா, அந்தமான் மற்றும் டையூ டாமனுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது. அதேபோல் திரிபுரா மாநிலத்தில் ஒரு தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட்டிருந்தார்.