Lok Sabha Election 2024: சூரத் மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக வேட்பாளர் போட்டியின்றி வெற்றி:
லோக்சபா தேர்தலில் சூரத் மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளரான முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சி சார்பிலான இரண்டு வேட்பாளர்களை முன்மொழிந்தவர்களின் கையொப்பமும் செல்லாது என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவரை எதிர்த்து போட்டியிட்ட மற்ற வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர். இதனையடுத்து பாஜக வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. சட்டமன்ற தேர்தலில் போட்டிய்ன்றி வெற்றி பெறுவதை எளிதாக காண முடியும். ஆனால், மக்களவை தேர்தலில் இது எளிதானதல்ல.
பாஜகவிற்கு அரிதான வெற்றி:
சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றது அக்கட்சிக்கு கிடைத்த அரிதான வெற்றியாக பார்க்கப்படுகிறது. இத்தகைய வெற்றி என்பது பாஜகவிற்கு மட்டுமே புதியது. அதேநேரம், பல கட்சிகள் சார்பில் ஏற்கனவே பலர் மக்களவைக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, ஆந்திரா, அசாம், ஒடிசா, தமிழ்நாடு, உத்தரபிரதேசம் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட எட்டு மாநிலங்கள் மட்டுமே ஒன்றுக்கும் மேற்பட்ட எம்பிகளை போட்டியின்றி நாடாளுமன்றத்திற்கு அனுப்பியுள்ளன என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 30-க்கும் மேற்பட்டோர் போட்டியின்றி மக்களவை உறுப்பினர் ஆகியுள்ள நிலையில், அதிகபட்சமாக ஜம்மு & காஷ்மீரில் 4 பேர் நாடாளுமன்றத்திற்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
போட்டியின்றி எம்.பி., ஆனவர்கள் விவரம்..!
- முன்னதாக 2012 ஆம் ஆண்டு சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த டிம்பிள் யாதவ், கன்னோஜ் மக்களவை தொகுதியில் போட்டியின்றி வெற்ற் பெற்றார். அவரது கணவர் அகிலேஷ் யாதவ் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக , தனது கன்னோஜ் தொகுதி எம்.பி., பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
- ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதியில் 1989 இல் தேசிய மாநாட்டின் முகமது ஷஃபி பட் போட்டியின்றி வெற்றி பெற்றார்.
- 1951 இல் நடைபெற்ற முதல் தேர்தலில் பிலாஸ்பூரில் இருந்து ஆனந்த் சந்த், கோயம்புத்தூரில் இருந்து டி.ஏ. ராமலிங்கம் செட்டியார், ஹலார் தொகுதியில் சவுராஷ்டிராவை சேர்ந்த மேஜர் ஜெனரல் ஹெச்.எஸ்.ஹிம்மாசின்ஜி, ராயகடா-புல்பானியில் இருந்து டி.சங்கனா மற்றும் ஐதராபாத் யாதகிரியில் இருந்து கிருஷ்ணா சார்யா ஜோஷி ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
- நாசிக்கில் இருந்து முன்னாள் துணைப் பிரதமரும், மகாராஷ்டிர முதலமைச்சருமான ஒய்.பி.சவான், ஸ்ரீநகரில் இருந்து என்.சி தலைவர் ஃபரூக் அப்துல்லா, முன்னாள் நாகாலாந்து முதலமைச்சரும், நான்கு மாநிலங்களின் முன்னாள் ஆளுநருமான எஸ்.சி.ஜமீர் மற்றும் அங்கூலில் இருந்து ஒடிசாவின் முதல் முதலமைச்சரான ஹரே கிருஷ்ணா மஹதாப் ஆகியோரும் மக்களவைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற எம்.பி.க்கள் ஆவர்.