Arakkonam Lok Sabha constituency: அரக்கோணம் மக்களவைத் தொகுதியின் தேர்தல் வரலாறு கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024:
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே தேசிய கட்சிகள் தொடங்கி, லெட்டர் பேட் கட்சிகள் வரை அனைத்துமே தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.
இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில், எதில் எந்த கட்சி அதிகம் ஆதிக்கம் செலுத்தியுள்ளது, செலுத்தி வருகிறது என்பதை தொடர்ந்து அலசி வருகிறோம். அந்த வகையில் அரக்கோணம் மக்களவைத் தொகுதியின் தேர்தல் வரலாற்றை இந்த தொகுப்பில் அறியலாம்.
அரக்கோணம் மக்களவைத் தொகுதி உருவான வரலாறு:
தமிழ்நாட்டின் 7வது மக்களவைத் தொகுதியான அரக்கோணத்தில் கடந்த 1977ம் ஆண்டு முதல் தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பிற்கு முன்பாக இதில் பள்ளிப்பட்டு, அரக்கோணம் (தனி), சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு மற்றும் செய்யார் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இருந்தன. தொகுதி மறுசீரமைப்பிற்குப் பிறகு திருத்தணி, அரக்கோணம் (தனி), சோளிங்கர், காட்பாடி, ராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு ஆகிய சட்டமன்ற தொகுதிகள் அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் இடம்பெற்றுள்ளன.
அரக்கோணம் மக்களவைத் தொகுதி எப்படி?
108 திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் மலைக் கோயிலும், முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோயிலும் அரக்கோணம் தொகுதியில் தான் அமைந்துள்ளன. வேளாண் மற்றும் தொழில் துறையைப் பின்னணியாகக் கொண்ட தொகுதி அரக்கோணத்தில் நெல், கரும்பு, வாழை, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் அதிகம் பயிரிடப்படுகின்றன.
விசைத்தறித் தொழில், தோல் தொழில், சிட்கோ, சிப்காட் வளாகங்கள் உடன் எம்.ஆர்.எப்., டி.வி.எஸ். பிரேக்ஸ் இந்தியா லிமிடெட் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களும் அமைந்துள்ளன. சர்வதேச அளவில் இந்தியாவின் தோல் பொருட்கள் ஏற்றுமதியில், அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட ராணிப்பேட்டை மற்றும் மேல்விஷாரம் ஆகிய நகரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வன்னியர்கள், பட்டியலினத்தவர்கள், முதலியார்கள் மற்றும் நாயுடு சமூகத்தினர் பெரும்பான்மை வாக்காளர்களாக உள்ளனர். வன்னியர்களின் பெரும்பான்மை வாக்குகள் பாமகவுக்குச் சாதகமாக இருக்கலாம்.
அரக்கோணம் தொகுதியின் முக்கிய பிரச்னைகள்:
திருத்தணி, அரக்கோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து, தொழில், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளுக்காகத் தினமும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சென்னைக்குச் சென்று வருகின்றனர். அவர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருப்பது 10 நிமிடங்களுக்கு ஒரு மின்சார ரயில், அரக்கோணம், திருத்தணி ரயில் நிலையங்களில் விரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என்பதுதான். மோசமான சாலைகள், குடிநீர்ப் பிரச்சினை போன்றவை தேர்தல் நேரத்தில் எதிரொலிக்கக் கூடும்.
அரக்கோணம் - சென்னை இடையிலான மூன்றாவது நான்காவது ரயில் பாதை திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக தொடர்கின்றன. பாலாறு மாசடையக் காரணமாக இருக்கும் ராணிப்பேட்டை குரோமிய தொழிற்சாலையில் தேங்கியுள்ள குரோமியக் கழிவுகளை அகற்ற வேண்டும் என்பது இன்னொரு முக்கியக் கோரிக்கை. ராணிப்பேட்டை சிப்காட்டில் மூடப்பட்ட தொழிற்சாலைகளைத் திறக்க சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றும் கோரி வருகிறார்கள்.
அரக்கோணம் மக்களவைத் தொகுதி தேர்தல் வரலாறு:
அரக்கோணம் மக்களவைத் தொகுதி தேர்தலில் சமூகம் சார்ந்த வேட்பாளர்கள் வெற்றி பெறுவது என்பது தொடர்கதையாகி வருகிறது. ஆரம்பத்தில் நாடார்கள் அதிகம் வெற்றி பெற்ற இந்த தொகுதியில் தற்போது வன்னியர்களின் வெற்றி என்பது தொடர்கதையாகி வருகிறது. அதிகபட்சமாக காங்கிரஸ் நான்கு முறை வெற்றி பெற்றுள்ளது.
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி |
1977 | அழகேசன் | காங்கிரஸ் |
1980 | ஏ.எம். வேலு | காங்கிரஸ் |
1984 | ஜீவரத்தினம் | காங்கிரஸ் |
1989 | ஜீவரத்தினம் | காங்கிரஸ் |
1991 | ஜீவரத்தினம் | காங்கிரஸ் |
1996 | ஏ.எம். வேலு | தமாகா |
1998 | கோபால் | அதிமுக |
1999 | ஜெகத்ரட்சகன் | திமுக |
2004 | வேலு | பாமக |
2009 | ஜெகத்ரட்சகன் | திமுக |
2014 | ஹரி | அதிமுக |
2019 | ஜெகத்ரட்சகன் | திமுக |
வாக்காளர்கள் விவரம் (2024):
ஆண் வாக்காளர்கள் - 7,56,194
பெண் வாக்காளர்கள் - 7,97,632
மூன்றாம் பாலினத்தவர் - 163
மொத்த வாக்காளர்கள் - 15,53,989
சட்டமன்ற தொகுதிகள் யார் வசம்?
திருத்தணி - எஸ்.சந்திரன் (திமுக)
அரக்கோணம் (தனி) - ரவி (அதிமுக)
சோளிங்கர் - முனிரத்தினம் (காங்கிரஸ்)
காட்பாடி - துரைமுருகன் (திமுக)
ராணிப்பேட்டை - காந்தி (திமுக)
ஆற்காடு - ஈஸ்வரப்பன் (திமுக)
ஜெகத்ரட்சகன் எம்.பி., சாதித்தாரா? சறுக்கினாரா?
அனைத்து கிராமங்களிலும் குடிதண்ணீர் பிரச்னை தீர்க்கப்பட்டிருப்பதாகவும், அனைத்து ஊர்களிலும் பள்ளிகள் கட்டிக் கொடுத்திருப்பதாகவும் ஆறேழு இடங்களில் பெரிய பேருந்து நிலையங்களை உருவாக்கி இருப்பதாகவும் எம்.பி., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின்கீழ் அரக்கோணம், திருத்தணி ரயில் நிலையங்களை நவீனமயப்படுத்தும் பணிகள் நடைபெற்றுவருகின்றன என கூறப்படுகிறதுது.
அதேநேரம், பரப்புரையின் போது பணத்தை கொட்டிய ஜெகத்ரட்சகன் வெற்றிக்கு பிறகு தொகுதியை மறந்துவிட்டார் என்றே பெரும்பாலான வாக்காளர்கள் தெரிவிக்கின்றனர். மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனை அமைந்திருக்கும் வாலாஜாபேட்டை பகுதியில் மேம்பாலம் அமைத்துத்தருவதாக வாக்குறுதி அளித்தார். அந்தப் பணி ஆமை வேகத்தில் நகர்கிறது.
மேல்விஷாரம் நகராட்சி அலுவலகம் அமைந்திருக்கும் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் ஒரு மேம்பாலம் வேண்டும் என்ற நீண்டா நாள் கோரிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சரியான வேளாண் கட்டமைப்பும் உருவாக்கப்படவில்லை. உலர் கள வசதியில்லை. நேரடி நெல் கொள்முதல் மையங்களுக்கான நிரந்தர கட்டடங்களும் கிடையாது. மாதம்தோறும் இலவச மருத்துவ முகாம் நடத்தப்படும், வேளாண் கல்லூரி அமைக்கப்படும் மற்றும் ஆண்டுக்கு 1,200 மாணவர்களுக்கு எனது கல்வி நிறுவனங்களில் இலவச கல்வி வழங்கப்படும் உள்ளிட்ட எந்த வாக்குறுதியையும் ஜெகத்ரட்சகன் நிறைவேற்றவில்லை என்பது வாக்காளர்களின் குமுறலாகவே உள்ளது.