தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியை ஆதரித்து பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் செய்தார். இலக்கியம்பட்டி பேருந்து நிலையத்தில் வாக்கு சேகரித்தார்.

 

அப்போது பேசிய அன்புமணி, “வெற்றியோ, தோல்வியோ எப்பொழுது உங்களோடு இருப்பவன் நான். தருமபுரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டங்கள் மிகக் குறைவு. அந்த திட்டங்கள் வர பாமகதான் காரணம். 20 ஆண்டுகள் போராடி காவிரி தண்ணீரை கொண்டு வந்தோம். இந்த மண்ணை ஆட்சி செய்தவர்களால், இந்த மண்ணுக்கு எந்த பயனும் இல்லை. தருமபுரி மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பிறகு சௌமியா பெண் வேட்பாளராக போட்டியிடுகிறார். பெண் வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்தால் போதும். சௌமியா வெற்றி பெறுவார். அதிமுக வேட்பாளர் மருத்துவர். ஆனால் அவரை யாருக்கும் தெரியாது. அவர் அப்பாவை தான் தெரியும். முன்னாள் அமைச்சர் அன்பழகன் சொன்னால் போதும், அதைக் கேட்பார். திமுக வேட்பாளர் பற்றி யாருக்கு தெரியும். திமுக வேட்பாளர் எ.வ.வேலு சொல்வதை கேட்பார். அவருடைய ரிமோட் எ.வ.வேலுவிடம் உள்ளது. உங்களுக்கு ரிமோட் கன்ட்ரோல் வேட்பாளர் தேவையா? ஐ.நா. மன்றம் வரை சென்று பெண்களுக்கான உரிமையை பேசுபவர் வேண்டுமா? முனைவர் சௌமியாவை பார்த்து வாக்களியுங்கள். சின்னத்தை பார்த்து வாக்களித்தீர், சாதி, கட்சி பாரத்து வாக்களித்தீர்கள். ஆனால் வேட்பாளரை பார்த்து வாக்களியுங்கள்.



 

இன்று தம்பி உதயநிதி தருமபுரி பகுதியில்  பிரச்சாரம் செய்கிறார். தேர்தல் நேரத்தில் மட்டும் தான் வருவார். அவரது தந்தை செய்ததும், அப்பா செய்ததும் பற்றி பேசுவார். அய்யாவை பற்றி பேசுவார். கடந்த தேரத்லில் உதயநிதியும், அவரது அப்பாவும் தருமபுரி மாவட்டத்திற்கு மட்டும் 44 வாக்குறுதிகளை கொடுத்தார்கள். இதில் எதையும் செய்யவில்லை. ஆனால் இங்கு வசனம் பேசுவார். நான் கலைஞர் பேரன், ஸ்டாலின் மகன் என பேசுவார். இந்த மாவட்டத்திற்கு வந்தால், சமூகநீதி மற்றும் வன்னியர்களை பற்றி பேசுவார். தேர்தல் காலத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. ஆனால் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றால், நீங்கள் திமுகவை தோற்கடிக்க வேண்டும். அப்போது தான் அடுத்த மாதமே எங்கள் கோரிக்கை நிறைவேறும்.

 

கடந்த தேர்தலில் நீங்கள் சிறு தவறு செய்து, ட்விட்டர் அரசியல் செந்தில்குமாரை தேர்ந்தெடுத்தீர்கள். ஆனால் அவர் எந்த திட்டத்தையும் இந்த தொகுதிக்கு கொண்டு வரவில்லை. நான் கொண்டு வந்த திட்டங்களுக்கு, செந்தில்குமார் ஸ்டிக்கர் ஓட்டுகிறார். நான் அரசியலுக்காக வரவில்லை. உங்கள் வாழ்க்கை தரம் உயர வேண்டும் என்று வந்திருக்கிறேன். ஓசூர் நான்கு வழிச்சாலை, ஓமலூர்-ஓசூர் இருவழி ரயில்பாதை கொண்டு வந்தது தேசிய ஜனநாயக கூட்டணி. இதற்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டுக் கொள்கிறது. இந்த முறை சௌமியாவை தேர்ந்தெடுங்கள். நானும் இணைந்து தேவையான திட்டங்களை கொண்டு வருவேன்” என்று தெரிவித்தார்.