அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெண் குரலில் பேசி என் மனைவியிடம் சிக்க வைத்தார் என திமுக மாநிலங்களவை எம்.பி., எம்.எம். அப்துல்லா தெரிவித்த காணொளி வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 


தமிழக அரசின் விளையாட்டுத்துறை அமைச்சராகவும், திமுகவின் இளைஞரணி செயலாளராகவும் இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். அவரை ஒரு நடிகராக தமிழக மக்கள் நன்கு அறிந்துள்ளனர். தயாரிப்பாளராக தனது சினிமா பணியை தொடங்கிய உதயநிதி, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படம் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். தொடர்ந்து 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் 2018 ஆம் ஆண்டுக்குப் பின் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 


2021 சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்றார். தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். தனது கிண்டலான மற்றும் நகைச்சுவையான பேச்சுத் திறமையால் அனைத்து தரப்பினரையும் கவர்ந்திழுத்த உதயநிதி, தற்போது மக்களவை தேர்தலுக்காக தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இப்படியான நிலையில் திமுக மாநிலங்களவை எம்.பி., எம்.எம். அப்துல்லா நேர்காணல் ஒன்றில் உதயநிதியின் மிமிக்ரி திறமையை பற்றி பேசியுள்ளார். 


அதில், “எனக்கு திருமணமாகி 2 மாதங்கள் இருக்கும். ஏதோ ஒரு வேலையாக சென்னை வந்திருந்தேன். அப்போது அன்பில் மகேஷ் தனது அரும்பாக்கத்தில் உள்ள வீட்டில் இருந்தார். இரவு ஒரு 7 மணி இருக்கும். நான் அவரை பார்க்கப் போயிருந்தேன். அப்போது உதயநிதி ஸ்டாலின் அங்கு இருந்தார். நாங்கள் 3 பேரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த போது திடீரென எனக்கு போன் வந்தது. அது செல்போன் வந்திருந்த காலக்கட்டம். நான் என் போனை எடுத்துக் கொண்டு தனியாக பேசுவதற்கு சென்றேன். என் வீட்டிலிருந்து போன் வந்திருப்பதை உதயநிதி உணர்ந்து கொண்டார்.


சட்டென்று எழுந்து என் பின்புறமாக வந்த அவர், “ஏய் அப்துல்லா என்ன திடீர்ன்னு அங்க போய் நிக்குற..இங்க வா” என பெண் குரலில் மிமிக்ரி செய்து பேசினார். எனக்கு அந்த குரலை கேட்டு மிகவும் அதிர்ச்சியாகி விட்டது. உதயநிதி சிறப்பாக மிமிக்ரி செய்தார். அந்த குரலை கேட்ட என் மனைவி, யாருங்க அது என்னிடம் கேட்க, நான் உதயநிதி என சொல்லியும் நம்பவில்லை. பின் அவரிடன் போனை கொடுத்து பேச சொன்ன பிறகு தான் என் மனைவி நம்பினார். இப்படி நிறைய ஜாலி, கேலி எல்லாம் உதயநிதி பண்ணுவார்” என எம்.எம்.அப்துல்லா எம்.பி., கூறியுள்ளார்.