ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் ஆடிய கொல்கத்தா அணி சென்னை சுழலில் சிக்கி வெறும் 137 ரன்கள் மட்டுமே எடுத்தது.


இதையடுத்து, களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் அதிகபட்சமாக 67 ரன்கள் எடுத்தார். சென்னை அணிக்காக தொடக்க வீரர் ரவீந்திரா 15 ரன்களில் ஆட்டமிழந்தாலும், டேரில் மிட்செல் 25 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த ஷிவம் துபே 18 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்ஸருடன் 28 ரன்கள் எடுத்தார்.


ஷிவம் துபே ஆட்டமிழந்த போது, சென்னை அணியின் வெற்றிக்கு 3 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அப்போது, சென்னை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த முன்னாள் கேப்டனும், நட்சத்திர பேட்ஸ்மேனுமாகிய தோனி களமிறங்கினார். வழக்கமாக தோனி எங்கு சென்றாலுமே அவரை காண்பதற்கு ரசிகர்கள் கூட்டம் குவிவது வழக்கம். அதுவும் மைதானத்தில் தோனி களமிறங்குகிறார் என்றால் ரசிகர்கள் ஆர்ப்பரிப்பது தவிர்க்கவே முடியாதது ஆகும்.






நேற்றைய போட்டியில் தோனி களமிறங்கியபோது மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்கள் அனைவரும் தோனி, தோனி என்று ஆர்ப்பரித்தனர். அப்போது, மைதானத்தில் 125 டெசிபல் அளவிற்கு சத்தம் எழும்பியது. அப்போது, பவுண்டரி அருகே ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த கொல்கத்தா வீரர் ரஸல் தனது இரு காதுகளையும் சத்தம் தாங்காமல் மூடிக்கொண்டார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது, தோனி மீது சென்னை ரசிகர்கள் காட்டும் என்பது அளப்பரியது என்பதற்கு இந்த வீடியோவும் தற்போது ஒரு உதாரணமாக மாறியுள்ளது.


நேற்றைய போட்டியில் தோனி 3 பந்துகளை சந்தித்து 1 ரன்கள் எடுத்தார். முன்னதாக, தோனி களமிறங்கும் முன்பு ரவீந்திர ஜடேஜா பேட் மற்றும் ஹெல்மெட்டுடன் மைதானத்தில் களமிறங்குவது போல தோனியிடம் விளையாடினார். பின்னர், தோனி பேட்டுடன் களமிறங்கினார்.