தஞ்சாவூர்: தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் 12 பேர் போட்டியிடுகின்றனர். ஒருவர் வேட்புமனுவை வாபஸ் பெற்றார். தொடர்ந்து வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


36 பேர் மனுத்தாக்கல்


தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் மார்ச் 20 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை யாருமே வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. மார்ச் 25 ஆம் தேதி 4 பேரும், 26ம் தேதி 8 பேரும் என மொத்தம் 12 பேர் தாக்கல் செய்தனர். தொடர்ந்து, திமுக, பாஜக வேட்பாளர்கள், தேமுதிக மாற்று வேட்பாளர் எஸ். பவளக்கொடி, சுயேச்சை வேட்பாளர்கள் அரு.சீர். தங்கராசு, எம்.அப்துல் ஹமீது, எஸ்.ராஜேந்திரன், என்.செந்தில்குமார், வி.குணசேகரன், எஸ்.ராஜா, எஸ்.எழிலரசன் உள்பட மொத்தம் 19 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இத்தொகுதியில் மொத்தம் 31 பேர் 36 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.




வேட்பு மனுக்கள் பரிசீலனை


தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கியது. 24ம் தேதி வரை ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. ஆனால் 25ம் தேதியில் இருந்து 27ம் தேதி வரை 31 பேர் 36 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். 28ம் தேதி வேட்பாளர்கள் முன்னிலையில் வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அப்போது 18 பேரின் 23 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மீதமுள்ள 13 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.


வேட்புமனுவை திருப்ப பெறுவதற்கான கடைசி நாளில் சுயேட்சை வேட்பாளர் சங்கர் தனது வேட்புமனுவை திரும்ப பெற்றார். இதையடுத்து இறுதிவாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் 12 பேர் போட்டியிடுகின்றனர்.


சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது


பின்னர் இவர்களுக்கு சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளான தி.மு.க. வேட்பாளர் முரசொலி உதய சூரியன் சின்னத்திலும், தே.மு.தி.க. வேட்பாளர் சிவநேசன் முரசு சின்னத்திலும், பா.ஜனதா கட்சி வேட்பாளர் முருகானந்தம் தாமரை சின்னத்திலும், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ஜெயபால் யானை சின்னத்திலும், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியை சேர்ந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹிமாயூன் கபீர் மைக் சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.


சுயேட்சை வேட்பாளர்கள் பொறி.அர்ஜூனுக்கு திராட்சையும், எழிலரசனுக்கு சிறு உரலும், உலக்கையும், கரிகாலசோழனுக்கு செயற்கை நீரூற்றும், சந்தோசிற்கு தர்பூசணியும், சரவணனுக்கு மின்கல விளக்கும், செந்தில்குமாருக்கு கப்பலும், ரெங்கசாமிக்கு பலாப்பழமும் சின்னங்களாக ஒதுக்கீடு செய்யப்பட்டது.