Post Office Schemes: 2024-25 நிதியாண்டு இன்று தொடங்கிய நிலையில்,  அஞ்சல் அலுவலகங்களில் உள்ள பல்வேறு சேமிப்பு திட்டங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டங்கள்:


வருமானத்தின் ஒரு சிறுபகுதியை சேமிப்பது என்பது நடுத்தர வர்கத்தினரின் பெரும் கனவாகும். அப்படிப்பட்ட சேமிப்பிற்கும் வரி விதிப்பு என்பது அவர்களுக்கு பெருஞ்சுமையாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டே குறைந்த வரிவிதிக்கப்படும் பல்வேறு சேமிப்பு திட்டங்களை, அஞ்சல் அலுவலகங்கள் வழங்கி வருகின்றன. அப்படி பிரபலமான தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்கள் மற்றும் அவற்றின் முக்கிய அம்சங்கள் முதலீட்டாளர்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக விவரிக்கப்பட்டுள்ளது.


தபால் அலுவலக சேமிப்பு கணக்கு (SB):



  • தனிநபர் / கூட்டுக் கணக்குகளில் ஆண்டுக்கு 4.0 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது

  • திறப்பதற்கு குறைந்தபட்சம் ரூ.500 முதலீடு செய்ய வேண்டும்

  • ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும் வட்டி கணக்கில் வரவு வைக்கப்படும்

  • வருமான வரிச் சட்டத்தின் U/S 80TTA விதியின்படி, அனைத்து சேமிப்பு வங்கிக் கணக்குகளிலிருந்தும் ஒரு நிதியாண்டில் சம்பாதித்த ரூ.10,000 வரையிலான வட்டிக்கு  வருமானத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.


ரெகரிங் டெபாசிட் திட்டம்:



  • தற்போதைய வட்டி விகிதம் ஆண்டுக்கு 6.7 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது (காலாண்டிற்கு  கூட்டு வட்டி)

  • மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ.100 முதலீடு செய்யலாம்

  • 12 தவணைகளை வெற்றிகரமாக முடித்த பிறகு, உங்கள் கணக்கில் இருக்கும் வைப்புத் தொகையில் 50% வரை கடனைப் பெறலாம்.


தபால் அலுவலக நேர வைப்பு கணக்கு (TD):



  • குறைந்த பட்சம் 1000 ரூபாய் செலுத்தி கணக்கை தொடங்கலாம்

  • முதலீட்டுக்கு அதிகபட்ச வரம்பு இல்லை

  • வட்டி காலாண்டிற்கு ஒருமுறை கணக்கிடப்பட்டாலும் ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே பயனாளருக்கு செலுத்தப்படும்

  • கணக்கை 1 வருடம், 2 வருடம், 3 வருடம், 5 வருடங்கள் விகிதத்தில் தொடரலாம்

  • 5 வருட கணக்குகளுக்கு வட்டி விகிதம் 7.5 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது


தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டக் கணக்கு (MIS):



  • குறைந்த பட்சம் ரூ.1000 செலுத்தி கணக்கு தொடங்கலாம்.

  • தற்போதைய வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.4 சதவிகிதம் ஆக உள்ளது

  • அதிகபட்ச முதலீட்டு வரம்பாக தனிநபர் கணக்கிற்கு ரூ. 9 லட்சமாகவும், கூட்டுக் கணக்கிற்கு ரூ.15 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது

  • பயனாளரின் கைக்கு கிடைக்கும் முதிர்ச்சி தொகைக்கு வரி விதிக்கப்படும்.


மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS):



  • குறைந்தபட்ச வைப்புத்தொகையாக ரூ.1000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • அதிகபட்ச வரம்பாக ஒரு தனிநபர் கணக்கிற்கு ரூ.30 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது

  • ஆண்டுக்கு 8.2 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது

  • டெபாசிட் செய்த நாளிலிருந்து 31 மார்ச்/30 செப்டம்பர்/ டிசம்பர் 31 தேதிகளில் முதல் வட்டிப்பணம் பயனாளர்களுக்கு செலுத்தப்படும். அதைதொடர்ந்து, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் வட்டி செலுத்தப்படும்.

  • இந்தத் திட்டத்தின் கீழ் செய்யப்படும் முதலீடு, வருமான வரிச் சட்டம், 1961ன் பிரிவு 80C-ன் பலனைப் பெறத் தகுதிபெறுகிறது


5 வருட தேசிய சேமிப்புச் சான்றிதழ்:



  • வட்டி விகிதம் ஆண்டுதோறும் 7.7 சதவிகிதம் கூட்டு வட்டியாக வழங்கப்படுகிறது.

  • திட்டத்தின் முடிவின்போது மட்டுமே தொகை பயனாளருக்கு வழங்கப்படும்

  • குறைந்தபட்சம் ரூ. 1000 முதலீடு செய்யலாம், அதிகபட்ச வரம்பு இல்லை

  • வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வரிவிலக்கு பெறலாம்