தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்த 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிவடைந்த நிலையில். தமிழகத்தின் எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் கட்ட பட்டியல் ஆனது வெளியிடப்பட்டிருக்கிறது. மற்றும் திமுகவிலும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுவிட்டது.
இதை அடுத்து திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தொடந்து வேட்புமனுத்தாக்கல் செய்தனர். மேலும் சுயேட்சை வேட்பாளர்களும் தங்களது வேட்பு மனுவை ஆர்வத்துடன் தாக்கல் செய்தனர். இதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் களப்பாகுளம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு களப்பாகுளத்தை சேர்ந்த சண்முக பிரியா என்பவர் போட்டியிடுகிறார். இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய சங்கரன்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு வந்தார்.
அப்போது அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட வேனில் வந்திருந்த இரண்டாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்ய வந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் வேட்புமனு தாக்கல் செய்யும் பகுதியை சுற்றி 100 மீட்டருக்கு கூட்டம் கூட அனுமதி இல்லை என கூறினார். இதனைத் தொடர்ந்து சண்முகபிரியாவின் ஆதரவாளர்கள் கலைந்து சென்றனர். பின்னர் சண்முகபிரியா அவருடைய உறவினர்கள் இரண்டு பேருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதே போன்று கடந்த 17 ஆம் தேதி இதே இடத்திற்கு இதே பதவிக்கு போட்டியிடும் சிவசங்கரி என்ற சுயேட்சை பெண் வேட்பாளர் ஒருவர் தனது ஆதரவாளர்கள் மற்றும் உறவினர்கள் என 1000 பேருடனும் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தது குறிப்பிடத்தக்கது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் மக்கள் செல்வாக்கை காண்பிக்க புது புது யுக்திகளை கையாள்வது வழக்கம்.
ஆனால் உள்ளாட்சி தேர்தலில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் பெண் சுயேட்சை வேட்பாளர்கள் இருவர் இவ்வளவு பெரிய மக்கள் படையுடன் வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தது தென்காசி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு பெற்ற நிலையில் வரும் 23 ஆம் தேதி அன்று பரிசீலனை நடக்கிறது மனுக்களை திரும்பப் பெற வரும் 25ஆம் தேதி கடைசி தேதியாகும் அன்று மாலையே வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.