கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 15 இடங்களில் ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தல் நடைபெறுகிறது அதிலும் குறிப்பாக தான்தோன்றி ஒன்றியத்திற்குட்பட்ட எட்டாவது வார்டு பகுதிகளிலும் க. பரமத்தி பகுதிக்குட்பட்ட எட்டாவது வார்டு பகுதியிலும் திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் இன்று வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் என்பதால் அதிமுக வேட்பாளர் தானேஷ் என்கின்ற முத்துக்குமார் தான்தோன்றி ஒன்றிய அலுவலகத்தில் முன்னாள் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக கழகச் செயலாளருமான எம். ஆர். விஜயபாஸ்கர் உடன் தனது வேட்பு மனு தாக்கல் செய்தார்.




அதிமுக வேட்பாளரை ஆதரித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் தான்தோன்றி ஊராட்சி ஒன்றிய அலுவலக வாசலில் திரண்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு இழந்த நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய 5 பேருக்கு மட்டுமே அனுமதி என தகவல் கூறியதை அடுத்து முன்னாள் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் வேட்பாளர் மற்றும் வழக்கறிஞர் மற்றும் முகவரி உள்ளிட்ட 5 பேர் மட்டுமே உள்ளே வந்தனர். அதைத் தொடர்ந்து வேட்பு மனு அளிக்கும் அலுவலகம் சென்ற அதிமுக வேட்பாளர் அங்கு தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் முருகேசனிடம் தனது வேட்புமனுவை வழங்கினார்.


அதைத்தொடர்ந்து வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக கழகச் செயலாளர் எம். ஆர். விஜயபாஸ்கர் பேசுகையில் நமது  கட்சியின் வேட்பாளர் முன்பு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி கண்டவர் பின்னர் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை கண்டவர். மீண்டும் இந்த எட்டாவது வார்டு பகுதிக்கு அவர் போட்டியிடுகிறார். 



தமிழக அரசு அம்மா ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாது. தெரிவித்தார். பின்னர் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க வரும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிக்காக அயராது உழைக்க வேண்டும் என கூறினார். அதைத்தொடர்ந்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய தமிழ்நாடு முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பின்னர் அங்கிருந்து வேட்பாளருடன் ஒரே காரில் கிளம்பினார்.


அவர் செய்தியாளர் சந்திப்பின் போது தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க தேர்தலில் அயராது பாடுபடுவோம் என கூறிய வார்த்தைகள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது திமுக தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்து வரும் நிலையில் முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி தேர்தல் வெற்றிக்கு பாடுபடுவோம் என கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




அதிமுகவை தொடர்ந்து தேமுதிக வேட்பாளர்களும் பட்டாசு வெடித்து ஆரவாரத்துடன் தங்களது வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதைத்தொடர்ந்து மிகவும் எளிய முறையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தனது வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 9 வேட்பாளர்கள் இன்று மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். தாந்தோன்றிமலை பகுதியிலுள்ள தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தில் இன்று கடைசி நாள் வேட்புமனுத்தாக்கல் என்பதால் காலை முதல் போலீசார் பலத்த பாதுகாப்புடன் தங்களது பணியை மேற்கொண்டனர். இரண்டு நாட்களுக்கு முன் சத்தமின்றி திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்ததைத் தொடர்ந்து இன்று பிற கட்சிகள் தங்களுடைய வேட்பு மனு தாக்கல் செய்தனர்.




இதே போல் க. பரமத்தி பகுதியில் அதிமுக வேட்பாளர் செல்வராஜ் அவர்கள் தனது வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை தொடர்ந்து நாம் தமிழர், மக்கள் நீதி மையம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தேமுதிக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் தங்களது வேட்பு மனு தாக்கல் செய்தனர். இன்று ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள் என்பதால் மாலை 5 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே இன்று இரவு அல்லது நாளை காலை ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் அதிகாரபூர்வ தகவல் வெளியாகும்.