தருமபுரி மாவட்டத்தில் செங்கல்மேடு, செம்மாண்டம்குப்பம், பாப்பாரப்பட்டி, பாப்பிரெட்டிபட்டி, பாலக்கோடு, அரூர், தீர்த்தமலை உள்ளிட்ட பகுதிகளில் செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. இங்கிருந்து உற்பத்தி செய்யப்படுகின்ற செங்கல்கள் சென்னை, சேலம், ஈரோடு, தஞ்சை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. சமீபகாலமாக சூளைக்கு தேவையான மண்ணை எடுக்க அனுமதிப்பதில்லை. இதனால் பட்டா நிலத்தில் எடுத்து வரும் மண்ணை கூட அதிகாரிகள் தடுத்து பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்கின்றனர்.

 



 

இந்த சூழலில் செங்கல் சூளைக்கு தேவையான தண்ணீரை விலை கொடுத்து வாங்கி வந்து செங்கல் உற்பத்தியில், தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டத்தில் செங்கல் உற்பத்தி பரபரப்பாக நடந்து வந்தாலும், தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழையால் செங்கல் உற்பத்தி செய்து, உலர்ந்த மற்றும் சூளை அடுக்க முடியாத நிலை இருந்து வருகிறது. மேலும் உற்பத்தி செய்து உலர்த்தப்பட்ட செங்கற்கள் மழையில் நனைந்து வருகிறது. இதனால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக செங்கல் உற்பத்தி   கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  இதனால் செங்கல் சூளையில் பணியாற்றும் ஆயிரக் கணக்கானோர் வேலை வாய்ப்பு மற்றும் வருவாய் இல்லாமல் தவித்து வருகின்றனர். ஏற்கனவே கடந்த ஓராண்டுக்கு மேலாக செங்கல் உற்பத்தி தொழிலாளர்கள் வருவாய் மற்றும் வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் செங்கல் சூளைகள் இயங்க தொடங்கியது.
  

 



 

ஆனால் தற்பொழுது தருமபுரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் செங்கல் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்டுள்ள செங்கற்கள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளது. கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதிலிருந்து செங்கல் விற்பனை கடுமையாக பாதித்தது. ஒரு செங்கல் விலை வாடகையுடன் 7 வரை விற்பனையானது. ஆனால் ஊடரங்கிற்கு பிறகு செங்கல் வாங்க யாரும் முன் வராததால், குறைவான விலைக்கு கேட்க கூட ஆட்கள் வருவதில்லை. இதனால் செங்கல் விற்பனை பாதிக்கப்படுவதால், கிடைத்த விலைக்கு, கடனுக்கு விற்பனை செய்து வருகின்றனர். மேலும் வாங்கி செல்பவர்கள், கொரோனவை காரணம் காட்டி  மாதக் கணக்கில் பணம் கொடுப்பதில்லை. இதனால் வருவாய் இன்றி செங்கல் உற்பத்தியாளர்கள் தவித்து வருகின்றனர்.

 

ஆனாலும் கையில் இருக்கின்ற மூலப் பொருட்களை வைத்து, தொழிலாளர்கள் செங்கல் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வருவதால், செங்கல் உற்பத்தி செய்ய முடியவில்லை. கடந்த ஓராண்டாகவே செங்கல் தொழிலில் போதிய வருவாயும் இல்லை, உற்பத்தியும் இல்லை என செங்கல் உற்பத்தியாளர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.