நகர்புற உள்ளாட்சித்தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறுகின்றது. இதனை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் 2ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. வேட்பு மனு பரிசீலனை முடிந்து 7ஆம் தேதி வேட்பு மனுவை திரும்ப பெறுதல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, தேர்தல் தேதி அறிவித்தவுடன், திமுக தேர்தல் பொறுப்பாளர்கள், கூட்டணி கட்சி தேர்தல் பொறுப்பாளர்களுடன் இட ஒதுக்கீடு தொடர்பாக பேசி வந்தனர். இதில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் எத்தனை சீட் வழங்குவது பேச்சு வார்த்தை நடைபெற்றது.இந்நிலையில், கும்பகோணம் மாநகராட்சி 7 வது வார்டில் சிபிஐ மாவட்ட செயலாளர் முஅ.பாரதி, கூட்டணி கட்சி சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்ட வார்டில் கடந்த 3 ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார். அதன் பின்னர், வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.ஆனால், 7 வது வார்டில், இறுதி நாளான 4 ஆம் தேதி திமுகவை சேர்ந்தவர் திடீரென வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதனால் அதிர்ந்து போன பாரதி, தான் போட்டியிட்டால். திமுகவினர் ஒத்துழைப்பு தரமாட்டார்கள்,  தோற்று விடுவோம் என போட்டியிடுவதிலிருந்து விலகி விட்டார். இதே போல், பேராவூரணி பேரூராட்சியில் சிபிஎம் ஒன்றிய குழு உறுப்பினர் ஜகுபர்அலி, தனது மனைவிக்கு 5 வது வார்டில் சீட் கேட்டார். இதே போல் மற்றொரு சிபிஎம் நிர்வாகி ராஜா முகம்மது, தனது சகோதரி அப்ரோஸ், 11 வது வார்டில் போட்டியிடுவதற்காக, திமுக கூட்டணி கட்சியினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.




இதில் 5 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் சாந்தி தலைவர் வேட்பாளர் என்பதால், அவருக்காக விட்டு கொடுங்கள் என்று திமுகவினர் கேட்டு கொண்டதற்கிணங்க, சிபிஎம் கட்சியினர் விட்டு கொடுத்து விட்டனர்.அதன் பின்னர் 11 வது வார்டு தருவதாக கூறியதால், வேட்பு மனு தாக்கல் செய்தனர். கம்யூனிஸ்ட் கட்சிக்கு சீட் கொடுத்து விட்டு, திடீரென திமுகவை சேர்ந்தவரும், திமுகவை சேர்ந்த மற்றொருவரும் சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தனர்.இதனால் கூட்டணி தர்மத்தை நிலை நிறுத்துவதற்காக கம்யூனிஸ்ட் கட்சியினர் வேட்பு மனுவை திரும்ப பெற்றனர்.


இதே போல் பெருமகளூர் பேரூராட்சியில் 6 வது வார்டு சிபிஎம் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று கேட்டிருந்தோம். ஆனால் திமுகவினர், 10 வது வார்டு தருவதாக தெரிவித்தனர். அதன் பிறகு மற்ற வார்டுகளை கேட்ட போது, 10 வது வார்டில் தருகின்றோம் என திமுகவினர் பிடிவாதமாக இருந்தனர். அதன் பிறக விசாரித்த போது, 10 வது வார்டில் உள்ள கிராம மக்கள், ஒன்றிணைந்து ஒருவரை ஒரு மனதாக தேர்ந்தெடுத்து அவரை, வெற்றி பெறச்செய்வார்கள் என தகவல் அறிந்ததும், சிபிஎம் கட்சியினர், திமுகவினர் வேண்டும் என்றே சீட்  தருகின்றது என்று கம்யூனிஸ்ட் கட்சியினை ஏமாற்றியதால், 10 வது வார்டை தருகின்றோம் சொன்னதை வேண்டாம் என்று கூறி விட்டனர்.




பேராவூரணியில் ஒரு சீட் வாங்குவதற்காக சிபிஐ கட்சியின் மாநில பொருளாளர் பாலகிருஷ்ணன், திமுக எம்பி பழநிமாணிக்கம் மற்றும் திமுக பொறுப்பாளர்கள் பேசியும் பிரயோஜனமில்லாமல் போய் விட்டது.தஞ்சை மாவட்டம் முழுவதும் திமுகவினர்கள், கம்யூனிஸ்ட் கட்சியினரை ஏமாற்றியுள்ளதால், நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் பணியாற்றுவார்களா என்பது கேள்வி குறியாகியுள்ளது.


இது குறித்து சிபிஐ மாவட்ட செயலாளர் பாரதி கூறுகையில்,எங்கள் கட்சி சார்பில் முன்னாள் எம்எல்ஏ பழனிச்சாமி மற்றும் திமுக மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி வரை 5 கட்டமாக பேச்சு வார்த்தை நடைபெற்றது. முதலில் நாங்கள் 7 வார்டு கேட்டோம். இதனை தொடர்ந்து நாங்கள் 3 வார்டு கேட்டோம். திமுகவினர் 7 வது வார்டு மட்டும் தருவதாக கூறினர். அதற்கு சம்மதித்து நானும், திமுக மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரமும் உடன் படிக்கையில் கையெழுத்திட்டோம்.




அதன் பின்னர் நான், வார்டில் உள்ள திமுக வார்டு செயலாளர் ரமேஷ்குமார் சென்று பார்த்த போது, நானும் வேட்பு மனு தாக்கல் செய்வேன் என்றார். இது தொடர்பாக நான், திமுக மாவட்ட செயலாளர், நகர செயலாளர் தமிழழகனை சந்தித்து கூறினேன். இவர்கள் இருவரும் நாங்கள் கண்டிக்கின்றோம் என்று கூறியதால், நான் கடந்த 3 ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்தேன். மறுநாள் 4 ந்தேதி ரமேஷ்குமார் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதனால்  அதிர்ந்து போன நான், திமுக நிர்வாகிகளிடம் கூறிவிட்டு, சிபிஐ மாவட்ட செயலாளர் முத்தரசனிடம் தெரிவித்தேன். அவர், திமுக தலைமைக்கு தகவலை தெரிவித்தார். தலைமையும், கூட்டணி தர்மத்தை மீறி வேட்பு மனு தாக்கல் செய்தால், உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என கடிதம் அனுப்பினார். திமுக கட்சி மேலிடம் உத்தரவிட்டும், திரும்ப பெறவில்லையே என்று, திமுக மாவட்ட செயலாளரிடம் கேட்டதற்கு, அவர் எங்கள் பேச்சை கேட்கமாட்டேன் என்கிறார் என்று பதில் கூறினர்.


ஆனாலும் ரமேஷ் வேட்பு மனுவை திரும்ப பெறவில்லை. இதற்கிடையில், ரமேஷிற்கு சுயேட்சை சின்னம் வழங்கப்பட்டதால், நான் எங்கள் கட்சியின் தலைமை கூறியதின் பேரில் வேட்பு மனுவை திரும்ப பெற்றேன் என்றார்.சிபிஐ மாவட்ட செயலாளர் பாரதி, மறைந்த முன்னாள் எம்எல்ஏ மன்னை மு. அம்பிகாபதியின் மகன் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.