தஞ்சாவூர், கும்பகோணம் மாநகராட்சிகள், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் நகராட்சிகள் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 20 பேரூராட்சிகளில் தேர்வு செய்யபட்ட உறுப்பினர்கள்  பொறுப்பேற்றுக் கொண்டனர். நகர்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22 ஆம் தேதி எண்ணப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு அன்றைய தினம் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதை அடுத்து வெற்றிப் பெற்றவர்கள் காலை பொறுப்பேற்றுக் கொண்டனர். அதன்படி தஞ்சாவூர் மாநகராட்சியில் திமுக, அதிமுக உள்ளிட்ட 51 வார்டு உறுப்பினர்களுக்கும் மாநகராட்சி ஆணையர் க.சரவணக்குமார் பதவி பிரமாணம் செய்து செய்து, அனைவருக்கும் புத்தங்களை பரிசாக வழங்கி, குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.




இதே போல் கும்பகோணம் மாநகராட்சியில் நேற்று காலை மொத்தமுள்ள 48 வார்டுகளில் அதிமுக உறுப்பினர்கள் மூவரை தவிர 45 பேருக்கு ஆணையர் செந்தில்முருகன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பின்னர்  மாலை அதிமுக உறுப்பினர்கள் மூவரும் ஆணையரை அவரது அலுவலக அறையில் சந்தித்து, தனியாக பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர். பட்டுக்கோட்டை நகராட்சியில் தேர்வு செய்யப்பட்ட 33 பேருக்கும் ஆணையர் சுப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதிராம்பட்டினம் நகராட்சியில் 27 பேருக்கும் ஆணையர் சசிக்குமார்  பதவி பிரமாணம் செய்து வைத்தார்.




அதே போல் மாவட்டம் முழுவதும் உள்ள 20 பேரூராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 299 உறுப்பினர்களுக்கும்  அந்தந்த பேரூராட்சி செயல் அலுவலர்கள் நேற்று காலை பதவிப் பிரமாணம் செய்து வைத்தனர். தஞ்சாவூர்  மாவட்டத்தில் தஞ்சாவூரில் 51 உறுப்பினர்களும், கும்பகோணத்தில் 48 உறுப்பினர்களும், பட்டுக்கோட்டையில் 33 உறுப்பினர்களும், அதிராம்பட்டினத்தில் 27 உறுப்பினர்களும், 20 பேரூராட்சிகளில் 299 உறுப்பினர்களும் என மொத்தம் 458 பேர் நேற்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். பட்டுக்கோட்டை  நகராட்சி, பேராவூரணி, பெருமகளூர், ஒரத்தநாடு, ஆடுதுறை, சுவாமிமலை ஆகிய பேரூராட்சிகளில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களை, பதவி ஏற்க  அந்தந்த கட்சியினர் பாதுகாப்பாக வாகனங்களில் அழைத்து வந்தனர். பதவி ஏற்றுக் கொண்டதும் அவர்களை அதே வாகனங்களில் அழைத்துக் கொண்டு வெளியூருக்கு சென்று தங்களது பாதுகாப்பில் தங்க வைத்துள்ளனர்.




இதுகுறித்து அரசியில் கட்சியினர் கூறுகையில்,  தலைவர்  தேர்தல்  முன்பு நேரடியாக நடைபெற்றது. தற்போது தலைவர் தேர்தல் மறைமுகமாக நடைபெறவுள்ளது. பல இடங்களில் தலைவர் தேர்தலின் போது, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களை விலை பேசி ஆதரவு பெறும் நிலை ஏற்படும் என்பதால், அதனை தடுக்க அந்தந்த அரசியல் கட்சியினர் தங்களது கட்சி சார்பில் வெற்றி வெற்றவர்களை பாதுகாப்பான இடத்துக்கு வெளியூருக்கு அழைத்துச் சென்று தங்க வைத்துள்ளனர். நாளை 4 ஆம் தேதி நடைபெறும் தலைவர் தேர்தலின்போது பதவி ஏற்றுக் கொண்ட உறுப்பினர்கள் வந்து தலைவரை தேர்வு செய்வார்கள். அதுவரை அரசியல் கட்சியினரின் பாதுகாப்பில் உறுப்பினர்கள் இருப்பார்கள் என்றனர்.


தஞ்சாவூர் மாநகராட்சியில், 32 வது வார்டு உறுப்பினர் கருணாநிதி மீது ஆணையாகவும், 32 ஆவது வார்டு உறுப்பினர் செந்தில், தலைவர் முக.ஸ்டாலின் மீது ஆணையாகவும், 7 வது வார்டு உறுப்பினர் விஜயபாபு, பதவிப்பிரமானம் செய்யும் போது, தனது தகப்பனார் மீது ஆணையாகவும், 27 வது வார்டு உறுப்பினர் வாழ்க வளமுடன், வாழ்க வையகம், 31 வது வார்டு ஜெய்சதீஷ்,பாரத் மாதாகீ ஜெ, தமிழகம் செழித்து வளரவேண்டும் என உறுதி மொழி எடுத்து கொண்டனர். முன்னதாக 21 வது வார்டு உறுப்பினர் சந்திரலேகா, பதவி பிரமாணம் செய்து கொள்ள நடந்து வந்த போது, கால் இடறி விழுந்தார். அதனால் அவர் மயக்க நிலையில் அமர்ந்திருந்தார்.


இதனை அறிந்த ஆணையர் சரவணகுமார், அவருக்கு பதிலாக உறுதி மொழியை வாசித்தார். ஆணையர் சரவணகுமார், ஒவ்வொரு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை அழைத்து விட்டு, அவரது இருக்கைக்கு சென்று அமர்ந்து கொண்டார். பதவிப்பிரமாணம் செய்து கொள்ளும் அறைக்கு உறுப்பினர்களை தவிர யாரையும் அனுமதிக்கவில்லை. பின்னர், நிகழ்ச்சி முடிந்த பிறகு, அனைத்து உறுப்பினர்களும் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர்.