நெல்லை மாவட்டத்தில் களக்காடு பேரூராட்சியாக இருந்த நிலையில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது, நெல்லை மாவட்டத்தில் உள்ள மூன்று நகராட்சிகளில் களக்காடு மூன்றாவது நகராட்சியாக உள்ளது, தற்போது இந்த நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளது, குறிப்பாக 12,579 ஆண் வாக்காளர்களும், 13,575 பெண் வாக்காளர்களும், இதர வாக்காளர்கள் 2 பேர் என மொத்தம் 26,156 வாக்காளர்கள் உள்ளனர்,
இந்த சூழலில் களக்காடு பேரூராட்சியாக இருந்த போது, கீழப்பத்தையில் உள்ள பெருமாள் சன்னதி தெரு, தெற்குத் தெரு, பெரிய தெரு, விநாயகர் சன்னதி தெரு, வடக்கு தெரு, கீழத் தெரு, நடுத்தெரு, பண்டிதன் குறிச்சி கீழத்தெரு, மேலத்தெரு ஆகிய தெருக்களில் பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த 860-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் பேரூராட்சியாக இருந்தபோது, 19 வது வார்டில் (தனி) வாக்காளர்களாக இருந்தனர். நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் தற்போது இவர்கள் அனைவரும் 2, 3, 4, 5 ஆகிய நான்கு வார்டுகளில் வாக்காளர்களாக சிதறடிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கீழபத்தையில் உள்ள வாக்குச்சாவடியில் நீண்ட காலமாக வாக்களித்து வந்த இவர்கள் தற்போது சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள மஞ்சுவிளை கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க வகை செய்யப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் முடிவு செய்து நேற்று எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் தங்கள் வீடுகளின் முன்பு கருப்பு கொடியேற்றினர்.
ஏற்கனவே தனி வார்டாக இருந்த எங்கள் வார்டு மீண்டும் அதே போல அறிவிப்பதுடன், வார்டு மறுவரையறையில் நான்கு வார்டுகளில் சிதறிக்கிடக்கும் எங்களை மீண்டும் ஒரே வார்டில் கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை பலனளிக்கவில்லை. ஆகவே கருப்பு கொடி கட்ட கூடாது என போலீசார் கூறியதை தொடர்ந்து கருப்பு கொடி அகற்றப்பட்டது. இருப்பினும் இன்று நடைபெற்று வரும் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி கீழபத்தை கிராமத்தில் 5 தெருக்களை சேர்ந்த 860 வாக்காளர்கள் இதுவரை யாரும் வாக்களிக்க மஞ்சுவிளை வாக்கு மையத்திற்கு செல்லவில்லை.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்