மயானப் பணியாளரைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். நம் அனைவரின் இறுதிப் பயணமும் அவர்கள் துணை இல்லாமல் முடியப்போவதில்லை.
பல இடங்களில் ஆண்கள் இந்த வேலையைச் செய்கிறார்கள். ஆனால் நம் தமிழ்நாட்டில் ஒரு பெண் மயானப் பணியாளர்கள் இருக்கிறார்கள். அப்படி ஒருவர்தான் ஜோதி. ராமநாதபுரம் மாவட்டம் அல்லிக்கண்மாயில் உள்ள ஒரு சுடுகாட்டில் வேலை செய்யும் ஜோதி பற்றிய கதை தான் இது. வாழ்க்கை பற்றி புட்டுப்புட்டு தத்துவம் பேசுகிறார் ஜோதி.
அவருடைய பேட்டியிலிருந்து:
என் பெயர் ஜோதிங்க. நான் இங்க 6 வருஷமா வேலை பார்க்குறேன். அதுக்கு முன்னால என் கணவர் இங்க வேலை பார்த்தார். அவர் இறந்த பிறகு நான் நிறைய வேலைக்குப் போனேன் எதுவும் செட் ஆகல. அதனால இந்த வேலைக்கே வந்துவிட்டேன். எனக்கு கல்யாணம் ஆன புதுசுல எல்லாம் இங்க உள்ள வரவே பயப்படுவேன். என் வீட்டுக்காரர் தான் எனக்கு தைரியம் வரவழைத்தார். அப்புறம் அவர் கூட நானும் பிணத்தை எரிக்கும் போது நிற்பேன். அப்படியே என் பயம் போயிடுச்சு. ஆனால் நானும் இதே வேலைக்கு வருவேன் என எதிர்பார்க்கவே இல்லை. என் பிழைப்பு அடுத்தவர்கள் இறப்பில் இருக்கிறது. ஒரு சாவு விழுந்து பிணத்தை எரித்தால் தான் சாப்பாடு. ஆனால் எல்லாரும் என் தொழில் நல்லா இருக்கனும்னு சாமி கும்பிடுற மாதிரி நான் ஒரு நாளும் கும்பிட மாட்டேன். அப்படி கும்பிடவும் முடியாது.
சாவு விழுந்தா சம்பாத்தியம். இல்லைன்னா அப்படியே இருப்போம். எங்களால வேற வேலைக்கெல்லாம் போக முடியாது. வேற வேலைக்கு போன நேரத்தில் பிணம் வந்துவிட்டால் பாதியில் வர முடியாதுல. அதனால வேற வேலைக்கும் போறதில்லை. முந்தியெல்லாம் சம்பளம் ரொம்ப ரொம்ப கம்மி. இப்போ ஏதோ கொஞ்சம் பரவாயில்லை. இந்த கொரோனா காலத்துல நிறைய பிணம் எரிச்சேன். ஒரு நாளைக்கு 10 பிணம் கூட எரிச்சிருக்கேன். அப்பெல்லாம் பெத்த பிள்ளைகளே, இல்ல உறவுகளே பிணத்தை இறக்கிவைத்துவிட்டு நீங்களே எல்லாம் செய்யுங்கன்னு சொல்லிட்டுப் போயிடுவாங்க. அப்ப ரொம்ப மனசு பாரமா இருந்துச்சு. அது போல் சின்னக் குழந்தைங்க நோய்ல போயிருக்கும், படிக்கிற புள்ளைங்க எக்ஸாம் தோல்வி, காதல் தோல்வின்னு செத்து கொண்டு வருவாங்க, சின்ன வயசுல விபத்துல செத்துருவாங்க, அந்த சடலங்களை எரிக்கும் போதே நானே சில நேரம் அழுதிருக்கேன். ஆனால் அதை அப்பவே மறந்துடுவேன். எதையுமே மனசுல தேக்கி வைக்கிறது இல்லை.
அப்புறம் நல்லா வாழ்ந்திருப்பாங்க. வயசு 90 இருக்கும். காசு, பணம் நிறைய வச்சிருந்தவங்களா இருப்பாங்க. அவுங்க கட்ட வேகவே செய்யாது. இதுக்கெல்லாம் நாங்கதான் சாட்சி.
அப்புறம் சுடுகாட்டுல பேய் இருக்கு, பிசாசு இருக்கு, அமாவாசைல ஆத்மா வெளியே வரும் அப்படி இப்படின்னு சொல்வாங்க. அப்படியெல்லாம் எதுவுமே இல்லை. எல்லாம் மனசுல இருக்க பயம்தான்.
எனக்கு இந்த இடம் கோயில், செத்து வரவங்கதான் தெய்வம். நான் பிணத்தை வைக்கும் வண்டியை தொட்டுக் கும்பிட்டுத்தான் வேலையை செய்றேன். இத்தனை வருஷம் இங்க வேலை பார்க்குறேன். தனியே இருப்பேன். இங்கேயே கொஞ்ச நேரம் தூங்குவேன். ஏன், மாதவிடாய் காலத்துலயும் பிணம் எரிப்பேன். எந்தப் பேயும், பிசாசும் வந்ததில்லை. சுடுகாட்டு காளி, முனியும் இருக்காங்க. அவுங்கதான் எங்களுக்கு துணை. பணம், காசு, வீடு, காரு எல்லாம் பெருசில்லங்க. நிம்மதியா நல்லபடியா சாவு அமைஞ்சு போய் சேர்ந்திடனும். அதுதான் பெரிசு.
எனக்கு அரசாங்கத்திடம் ஒரே ஒரு கோரிக்கைதான் இருக்கு. எனக்கு வயசாயிடுச்சு. இன்னும் வயசாயிட்டா இந்த வேலையை செய்ய முடியாது. அப்புறம் நான் யாரிடமும் கையேந்தி நிற்காமல் இருக்க என்னைப் போன்றோருக்கு ஏதாவது பென்ஷன் கொடுத்தாங்கன்னா போதும்” என்றார்