தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான மனுதாக்கல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், தேர்தலில் போட்டியிட மொத்தம் 73,000 த்திற்கு மேற்பட்ட வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்  தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் இன்று வேட்புமனு மீது பரிசீலனை செய்யப்படுகிறது.




2022- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பங்கேற்க இளம்பெண்கள் மற்றும் பட்டதாரிகள் அதிகளவு ஆர்வம் காட்டி வருகின்றனர். அதே போல் அதிகளவு திருநங்கைகளும் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் திருநங்கைகளுக்கு தேர்தல் அரசியல் எந்த அளவிற்கு முக்கியத்துவம் என்பது குறித்து எழுத்தாளரும், திருநங்கையுமான பிரியா பாபுவிடம் ஏபிபி நாடு இணையளம் சார்பில் பேசினோம்,  அரசியலை கையில் எடுக்காத எந்த சமூகமும் முன்னேற்றத்தை நோக்கி போகாது' என்பது அம்பேத்கர் சொன்ன வார்த்தை. அதனால் திருநங்கைகள் பலரும் தேர்தலை நோக்கி நகர ஆரம்பித்துள்ளனர். அதற்கு முன்னர் தி.மு.க., அ.தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சிகளில்  திருநங்கைகள் சிறிய, சிறிய பதவிகளை பெற்று தங்களது பங்களிப்பை செய்து வருகின்றனர். தற்போது தேர்தலில் போட்டியிட துவங்கியுள்ளனர்.




இதில் முதல்படியாக திருச்செங்கோட்டில் கவுன்சிலர் தேர்தலில் வெற்றிபெற்ற ரியாவை தான் சொல்ல வேண்டும். அது ஒரு முக்கியமான நகர்வாக பார்க்கப்பட்டது. அதற்கு பின் திருநங்கைகள் அரசியல் களத்தை அலங்கரிக்க ஆரம்பித்து விட்டனர். குறிப்பாக உள்ளாட்சி தேர்தலில் முனைப்பு காட்ட ஆரம்பித்துவிட்டனர். வேலூரில் கங்கா அம்மா, சென்னையில் ஜெயதேவி, ராஜம்மாள், தேஜா, ராதிகா உள்ளிட்ட பல திருநங்கைகள் அரசியல் கட்சி சார்பாக தேர்தலில் களம் காண்கின்றனர். இது ஆரோக்கியமான ஒன்றாகும். இதனால் பொதுமக்களிடம் வரவேற்பும், விழிப்புணர்வு ஏற்படும். திருநங்கைகளுக்கு சாதி, மதம் இல்லை என்பதனால் பொதுவான நபராக பார்க்கப்படுகிறார். அதே போல் குடும்ப உறவிகள் இல்லை என்பதால் வாரிசு அரசியலில் இருந்தும் விலகுகிறார்கள்.




இதனால் மக்களிடம் எளிமையாக நம்பிக்கையை ஏற்படுத்த முடியும்.  உள்ளாட்சி தேர்தலில் மக்களோடு மிகநெருக்கமான நபர்கள் மட்டுமே வெற்றிபெற முடியும். அதனால் கட்சி சார்ந்தோ சுயேச்சையோ களப்பணி செய்பவர்களை தான் மக்கள் ஆதரிப்பார்கள். அதனை திருநங்கைகள் உணர்ந்து வெற்றியை தக்க வைக்கவேண்டும். இப்படியாக மக்களுக்கு ஆதரவாக திருநங்கைகள் இருப்பததால் அடுத்த கட்டங்களையும் எளிமையாக நகரமுடியும்" என தெரிவித்தார்.






முதல் டாக்டர், முதல் போலீஸ், முதல் ஓட்டுநர் என திருநங்கைகள் எல்லாதுறையிலும் மலர்ந்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு போட்டிகளில் கீர்த்தனா, சிந்தாமணி உள்ளிட்ட திருநங்கைகள் வாடிவாசல் வழியாக காளைகளை கொண்டு செலுத்துகின்றனர். மதுரை கோரிப்பாளையத்தில் டிரான்ஸ் கிச்சன் என்ற உணவகம் திருநங்கைகள் முன்னெடுத்து நடத்தப்படுகிறது. இப்படியான வெற்றி வரிசையில் திருநங்கைகள் தேர்தல் களத்தில் அதிகளவு களம் காண்பது ஆரோக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.