தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய இரண்டு மாநகராட்சிகள், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் ஆகிய இரண்டு நகராட்சிகள், ஆடுதுறை, அம்மாபேட்டை, அய்யம்பேட்டை, சோழபுரம், மதுக்கூர், மேலத்திருப்பூந்துருத்தி, மெலட்டூர், ஒரத்தநாடு, பாபநாசம், பேராவூரணி, பெருமகளூர், சுவாமிமலை, திருக்காட்டுப்பள்ளி, திருநாகேசுவரம், திருப்பனந்தாள், திருபுவனம், திருவையாறு, திருவிடைமருதூர், வல்லம், வேப்பத்தூர் ஆகிய 20 பேரூராட்சிகள் ஆகியவற்றில் உள்ள 459 வார்டு உறுப்பினர் பதவிகள் உள்ளன. இதில், பெருமகளூர் பேரூராட்சியில் இரு வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றித்  தேர்வு செய்யப்பட்டனர். மேலும், அய்யம்பேட்டை பேரூராட்சியில் 9 ஆவது வார்டு திமுக வேட்பாளர் அனுசுயா மாரடைப்பால் காலமானதால், அந்த வார்டின் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, மாவட்டத்தில் 456 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு  தேர்தல் நடைபெற்று வருகிறது.




தஞ்சாவூர் மாநகராட்சியில் 51 வார்டுகளில் 282 பேரும், கும்பகோணம் மாநகராட்சியில் 48 வார்டுகளில் 275 பேரும், பட்டுக்கோட்டை நகராட்சியில் 33 வார்டுகளில் 134 பேரும், அதிராம்பட்டினம் நகராட்சியில் 27 வார்டுகளில் 121 பேரும், 20 பேரூராட்சிகளில் 297 வார்டுகளில் 1,220 பேரும் என மொத்தம் 2,032 பேர் போட்டியிடுகின்றனர். இதற்காக தஞ்சை மாவட்டத்தில் 750 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், தஞ்சாவூர் மாநகராட்சியில் 196 வாக்குச் சாவடிகளிலும், கும்பகோணம் மாநகராட்சியில் 139 வாக்குச் சாவடிகளிலும், பட்டுக்கோட்டை நகராட்சியில் 66 வாக்குச் சாவடிகளிலும், அதிராம்பட்டினத்தில் 33 வாக்குச் சாவடிகளிலும், 20 பேரூராட்சிகளில் 316 வாக்குச் சாவடிகளிலும் வாக்களிக்கின்றனர்.


இந்த வாக்குச் சாவடிகளில் 905 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. இந்த இயந்திரங்கள் தொடர்புடைய மாநகராட்சிகள், நகராட்சிகள், 20 பேரூராட்சிகளிலிருந்து காவல் துறையினரின் பாதுகாப்புடன் வேன்களில் வாக்குச் சாவடிகளுக்கு 18 ஆம் தேதி  கொண்டு சென்றனர். இதனுடன் வாக்குப் பதிவுக்குத் தேவையான இதர பொருள்களும் அனுப்பி வைக்கப்பட்டன. மாவட்டத்தில் 138 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளதால், இச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்புடனும், சிசிடிவி கண்காணிப்பில் வாக்கு பதிவு நடைபெற்று வருகின்றது.




நடைபெற்று வரும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தஞ்சாவூர் மாநகராட்சியில் 1,99,506 வாக்காளர்களும், கும்பகோணம் மாநகராட்சியில் 1,28,627 வாக்காளர்களும், பட்டுக்கோட்டை நகராட்சியில் 62,477 வாக்காளர்களும், அதிராம்பட்டினம் 27,245 வாக்காளர்களும், 20 பேரூராட்சிகளில் 2,15,885 வாக்காளர்களும் என மொத்தம் 6,33,740 வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர். இத்தேர்தல் பணியில் மாவட்டத்தில் 3,600 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில், தஞ்சாவூர் மாநகராட்சியில் 940 பேரும், கும்பகோணம் மாநகராட்சியில் 668 பேரும், பட்டுக்கோட்டை நகராட்சியில் 316 பேரும், அதிராம்பட்டினம் நகராட்சியில் 160 பேரும், 20 பேரூராட்சிகளில் 1,516 பேரும் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் இன்று காலையில் தொடங்கிய வாக்கு பதிவில் ஆண்களும் பெண்களும் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.




இதே போல் 85 வயது தள்ளாத மூதாட்டி புஷ்பாவள்ளி, நடக்க முடியாமல், கண்கள் தெரியாத நிலையில் வாக்களிக்க வந்தார். ராமு என்ற மாற்றுத்திறனாளியும் வாக்களித்தார். 80 வயது முதியவர் கலியமூர்த்தி, நடக்க முடியாததால், சக்கர வாகனத்தில் வந்து வாக்களித்தார். தஞ்சை எம்பி எஸ்எஸ்.பழநிமாணிக்கம், சீனிவாசபுரம், வெங்கடேஸ்வரர் பள்ளியிலும், தஞ்சை எம்எல்ஏ டிகேஜி நீலமேகம், வடக்கு வீதியிலுள்ள துாய பேதுரு  மேல்நிலைப்பள்ளியிலும் வாக்களித்தனர். தஞ்சை மாநகராட்சியில் 51 வார்டுகளில் நடைபெறும் வாக்கு பதிவினை கண்காணிப்பு கேமராவில் பதிவாகுவதை, தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள டிவி மூன்பு அமர்ந்து, ஆணையர் சரவணகுமார் கண்காணித்து வந்தார்.




கரந்தை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் திமுக வேட்பாளரின் மகன், வாக்கு பதிவு செய்யும் வளாகத்திற்குள் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த எஸ்ஐ சசிரேகா, வாக்கு பதிவு செய்பவர்களை தவிர மற்றவர்கள் யாரும் இப்பகுதியில் நிற்க கூடாது, வெளியில் செல்லுங்கள் என்று கூறி, தனது கேமராவில் பதிவு செய்வதற்காக எடுத்துக்கொண்டே, உங்கள் பெயர் என்ன என்று எஸ்ஐ கேட்டார். அதற்கு அவர், உதயநிதி என்று கூறியவுடன், செல்போனை வைத்து விட்டு, அப்பகுதியை விட்டு எஸ்ஐ வெளியேறினார்.