தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19 ஆம் தேதி நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து பிப்ரவரி 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. கடந்த 4 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், தற்போது அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், பாஜக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
சென்னையில் நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீடு வீடாக சென்று பரப்புரை மேற்கொண்டார். அப்பொழுது சென்னை பாரீஸ் நகரில் உள்ள 55 வது வார்டில் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டபோது, அங்குள்ள ஹோட்டலில் வேலை பார்த்த மாஸ்டர் ஒருவர்," உங்களால் முடிந்தால் ஒரு தோசை ஊத்தி காமியுங்கள் பார்ப்போம் என்று சவால் விட்டார்.
அதற்கு அண்ணாமலை, அப்படி நான் தோசை ஊத்திவிட்டால் நீங்கள் பாஜகவிற்குதான் வாக்கு அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார். தொடர்ந்து அந்த தோசை மாஸ்டரும் சரி என்று பதிலளிக்க, சவாலை ஏற்றுக்கொண்டு வேட்டியை மடித்துக்கொண்டு தோசைக்கல் அருகில் சென்றார்.
முதலில் தோசைக்கல்லை சுத்தம் செய்த அண்ணாமலை, பின்பு மெதுவாக ஒரு கப் மாவு எடுத்து மெல்லிய தோசையை ஊற்றினார். பின்பு அந்த மெல்லிய தோசையை வட்டமாக மடித்து மாஸ்டரிடம் வழங்கினார். அந்த தோசையை பெற்றுக்கொண்ட மாஸ்டர் சாப்பிட்டுவிட்டு சூப்பர் என்று சிக்னல் காமித்து, பாஜகவிற்கு வாக்கு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, இந்த புகைப்படத்தை மகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அண்ணாமலை, எனது சுமாரான தோசைக்கு சூப்பர் என்று மாஸ்டர் சொல்லி தம்ப்ஸ் அப் செய்தார். அவரது வாக்குகளையும் பாஜகவிற்கு அளிப்பதாக வாக்கும் அளித்தார் என்று பதிவிட்டிருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்