ராமநாதபுரம் நகராட்சி 10 வார்டு  பாஜக வேட்பாளர் நாகராஜன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் "ராமநாதபுரம் நகராட்சி தேர்தலில் 10வது வார்டில் பாஜக சார்பாக போட்டியிடுகிறேன். எவ்வித சரியான காரணம் இல்லாமல் எனது வேட்பு மனுவை நிராகரித்து விட்டனர். மேலும் எனது வேட்புமனுவில் சிறு சிறு பிழைகளை சுட்டிக்காட்டி தேர்தல் அதிகாரி எனது வேட்புமனுவை நிராகரித்துவிட்டார். 

 

சிறு திருத்தம் செய்ய கூடிய அளவில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டி எனது வேட்பு மனுவை நிராகரித்தது ஏற்கத்தக்கதல்ல.எனவே எனது வேட்பு மனுவை நிராகரித்த உத்தரவை நீக்கி, மனுவை ஏற்றுக்கொண்டு வருகிற 19ஆம் தேதி நடைபெற உள்ள ராமநாதபுரம் நகராட்சி தேர்தலில் வார்டு 10ல் பாஜக சார்பாக போட்டியிட அனுமதி அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

 

இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள் மனுதாரர் தமிழக தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

 



 







தமிழ்நாடு முழுவதும் சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கப்படுவதில்லை- தமிழக அரசு மதுரை கிளையில் தகவல்

 

தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் பகுதியை சேர்ந்த கண்ணன் மற்றும் திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் வடக்கு பகுதியை சேர்ந்த முத்துராமன் மேலும் சிலர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தனித்தனியே மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.அதில், "தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் தாலுகா, அண்ணாமலை புதூர் பகுதியில் சேவல் சண்டை போட்டி நடத்த திட்டமிட்டுள்ளோம். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் சேவல் சண்டை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

 

சேவல் சண்டை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இதில் சேவல் கால்களில் கத்தி கூர்மையான எந்த ஒரு பொருளும் மாற்றப்படாமல் வெறும் கால்களில் சேவல் சண்டையானது நடத்தப்படும். சேவல் சண்டை நடத்தப்படும் இடத்தில் சேவல்களுக்கு காயம் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக அதனை சரிசெய்ய விலங்கியல் மருத்துவர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.எனவே, தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் தாலுகா, அண்ணாமலை புதூர் பகுதியிலும், திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியிலும் சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்க வேண்டும்." என கூறியிருந்தனர்.

 

இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஷ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.தமிழக அரசு தரப்பில் தமிழ்நாடு முழுவதும் சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டது.இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், சேவல் சண்டை தொடர்பான வழக்குகளுடன் இந்த வழக்கையும் பட்டியலிட்டு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை முதன்மை அமர்வுக்கு மாற்ற உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 24-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.