கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி, நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விருத்தாசலம், வடலூர், திட்டக்குடி, சிதம்பரம் ஆகிய 6 நகராட்சிகள், அண்ணாமலைநகர், கிள்ளை, காட்டுமன்னார் கோவில், பரங்கிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, கங்கைகொண்டான், பெண்ணாடம், ஸ்ரீமுஷ்ணம், லால்பேட்டை, மங்கலம்பேட்டை, தொரப்பாடி, மேல்பட்டாம்பாக்கம், சேத்தியாத்தோப்பு ஆகிய 14 பேரூராட்சிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலையொட்டி 715 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு 7 மணிக்கு துவங்கியது பதட்டமான வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த தேர்தலில் 5 லட்சத்து 87 ஆயிரத்து 188 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 715 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் 159 பதற்றமான வாக்குச்சாவடிகள், 250 மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எனவும் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் மிகவும் பதற்றமான 250 வாக்குச்சாவடி மையங்களில் வெப் கேமரா, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் இன்று காலை 7.15 மணி அளவில் கடலூர் மாநகராட்சியில் உள்ள செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் மனைவியுடன் வந்து கடலூர் மாவட்ட ஆட்சியர் வாக்கு அளித்தார். பின்னர் அவர் கூறுகையில் மாவட்டம் முழுவதும் வாக்குபதிவு தொடங்கி உரிய பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது எனவும், எந்த வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கும் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டாலும் உடனடியாக சரி பார்க்க படும் எனவும் தெரிவித்தார்.
கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் 5-வது வார்டு வாக்குப்பதிவு இயந்திரம் துவங்கியவுடன் பழுதானதால் வாக்காளர்கள் தங்கள் வாக்கினை செலுத்தி வந்தவர்கள் அரை மணி நேரம் காத்திருந்தனர் அதிகாரிகள் வாக்குப்பதிவு இயந்திரத்தை சரி செய்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அரைமணி நேரம் தாமதத்துக்குப் பிறகு மீண்டும் வாக்குப்பதிவு துவங்கியது. இதே போல் கடலூர் மாவட்டத்தில் 8 இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதான நிலையில் அவை சரி செய்யப்பட்டு தற்போது மீண்டும் அனைத்து இடங்களிலும் வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது.
கடலூர் மாநகராட்சி 5வது வார்டு, பண்ருட்டி நகராட்சியின் 28 வது வார்டு, விருத்தாசலம் நகராட்சி 5வது வார்டு, சிதம்பரம் நகராட்சி 14வது வார்டு, மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி 12வது வார்டு, அண்ணாமலைநகர் பேரூராட்சி 12வது வார்டு, லால்பேட்டை பேரூராட்சி 13வது வார்டு, வடலூர் நகராட்சி 15வது வார்டு ஆகிய 8 இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது. 10 முதல் 30 நிமிடங்களில் பழுதுகள் நீக்கப் பட்டு அனைத்து இடங்களிலும் தற்போது வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.