பெருங்காயம்.. நம் சமையலறையின் ராஜா. பெருங்காயத்தின் மனத்திற்காகவும் சுவைக்காகவும் அதனை நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். 


பொதுவாக எல்லோருக்குமே பெருங்காயத்தில் நிறைய மருத்துவ குணம் இருப்பதை நாம் அறிவோம். ஆனால் பெருங்காயம் என்றால் அது செரிமானப் பிரச்சனைகளுடன் மட்டுமே தொடர்புப்படுத்தப்படுகிறது. நிச்சயமாக செரிமானப் பிரச்சினைகளுக்கான தீர்வைத் தாண்டியும் நிறைய மருத்துவ குணங்கள் பெருங்காயத்தில் உள்ளது.


பெருங்காயம் எப்படி தயாரிக்கிப்படுகிறது?


பெருங்காயத்தின் தாவரவியல் பெயர் `பெருலா அசபொட்டிடா’. ஆங்கிலத்தில் அசபொட்டிடா (Asafoetida) என்று அழைப்பார்கள். இது குட்டையாக மரம் போல வளரும் தாவரம். ஆப்கானிஸ்தான், ஈரான் நாடுகளில் மட்டும்தான் பெருங்காயம் அதிக அளவில் விளைகிறது. இந்த நாடுகளில் இருந்தே உலகெங்கும் ஏற்றுமதியாகிறது. இத்தாவரம் பூக்கள் பூக்கும் பருவத்தில் தண்டை வெட்டினால் அதிலிருந்து பிசின் வடியும். அந்த பிசினிலிருந்துதான் பெருங்காயம் தயாரிக்கப்படுகிறது. இப்படித்தான் உண்மையான பெருங்காயம் தயாரிக்கப்படுகிறது. ஆனால், சந்தையில் நமக்குக் கிடைக்கும் பெரும்பாலான பெருங்காயங்கள் ஒரு வகையான அராபிய பிசின் 60%, மைதா 30%, பெருங்காய வாசனை தரும் ஒரு வித எசன்ஸ் 10% என்று கலந்து தயாரித்து விற்கப்படுகிறது.


பெருங்காயத்தால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?


பெருங்காயத்தில் பால் பெருங்காயம், சிவப்புப் பெருங்காயம் என இரண்டு வகைகள் உள்ளன. பெருங்காயத்தில் உள்ள காரமும், கசப்பும் தான் நமது நரம்புகளைத் தூண்டுகிறது. பெருங்காயம் அனைத்து விதமான அஜீரண கோளாறுகளுக்கும் சிறந்த மருந்தாக இருக்கிறது. குடலில் உள்ள கிருமிகளை அழிக்கிறது. பெருங்காயத்தில் புரதம் நிறைவாக இருக்கிறது. அசைவு உணவு சாப்பிடாதவர்கள் தாராளமாக பெருங்காயத்தை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் பெருங்காயம் நரம்பு, மூளை இயல்பாக செயல்பட உதவுகிறது.


பல் வலி வந்தால் உடனே எல்லோரு சமையலறையில் கிராம்பைத் தேடுவார். இனி பெருங்காயத்தையும் பயன்படுத்திப் பாருங்கள். கட்டிப் பெருங்காயத்தை சிறு துண்டுகளாக வெட்டி அதனை வானலியில் இட்டு வறுத்து அதனை வலியுள்ள பல்லில் வைத்தால் நிவாரணம் கிடைக்கும்.


ஆஸ்துமா பிரச்சினையில் மூச்சுத் திணறல் ஏற்படும்போது, அதை அணலில் போட்டு அந்தப் புகையை சுவாசிக்க சுவாசப் பிரச்சினை குணமாகும். தலைவலியை சரிசெய்ய மன அழுத்ததினால் ஏற்படும் ஹிஸ்டீரியாவை குணப்படுத்த பெருங்காயம் பயன்படுகிறது. பெருங்காயத்தில் உள்ள வேதிப் பொருட்கள் மார்புச் சளியை குணப்படுத்துகிறது. கக்குவான் இருமலுக்கும் இது அருமருந்தாக இருக்கிறது. பெருங்காயத்தின் இலைகள் குடல் புழுக்களை அகற்றுகிறது. வியர்வையால் ஏற்படும் துர்நாற்றத்தையும் குறைக்கிறது. உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, ரத்தத்தின் அடர்த்தியை குறைத்து சீரான சுழற்சியை உறுதி செய்கிறது. முட்டையின் மஞ்சள்கருவுடன் பெருங்காயத்தை சேர்த்து சாப்பிட்டால் வறட்டு இருமல் நீங்குகிறது.


ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும் பெருங்காயம் பாக்டீரியா, பூஞ்சை, நுண்கிருமிகள் எதிர்ப்புத் திறன் கொண்டது.