திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 10 பேரூராட்சிகளில் வருகின்ற 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக, பாமக மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் தற்போது தீவர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலை நகராட்சியில் தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது 25 ஆவது வார்டின் வேட்பாளர் முனியம்மாளை ஆதரித்து பிரச்சாரத்தை தொடங்கினார். 26 வார்டில் தி.மு.க வேட்பாளர் பிரகாஷ்சை ஆதரித்து பேசினார். 28வது வார்டில் திமுக வேட்பாளர் கோபி சங்கரை ஆதரித்து பேசினார். 


திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில்:- தேனி மலையில் 3 ஆயிரம் குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டது திமுக ஆட்சியில் தான். அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் இப்பகுதி மக்களுக்கு என்ன செய்யப்பட்டது. சுடுகாடு பிரச்சனையில் போராடியவர்களை காவல்துறையினர் அழைத்துச் சென்றவர்களை வழக்கு இல்லாமல் விடுதலை செய்ய ஏற்பாடு செய்தேன். இங்கு எதிர்கட்சியில் நிற்பவர் வந்தாரா தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும் என்பார்கள். அதுபோல் தேனி மலைக்கு ஏதாவது ஒன்று என்றால் என் தசை ஆடும் என்றார். இங்கு உள்ள மக்களுக்கு ஜாதி சான்று, உதவித்தொகை, சாலை, மின்விளக்கு வசதி, ரேஷன் கடையை இரண்டாக பிரிப்பது உள்பட 12 கோரிக்கைகளை சொல்லி இருக்கிறீர்கள். திமுக வேட்பாளருக்கு ஓட்டு போடுங்கள் நான் செய்கிறேன். இந்த இரண்டு வார்டுகளிலும் நிற்கும் திமுகவினர் வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். உதயசூரியனில் இங்கு நிற்பதற்கு 100 நபர்கள் வரிசை கட்டி நின்றனர். அதில் இரண்டு நபரை நிற்க வைத்து மீதி 98 நபரை சமாதானம் படுத்தினோம்.



ஆனால் அதிமுகவில் நிற்பதுக்கு ஆட்கள் இல்லாததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எல்லா இடத்திலும் நிற்பதற்கு திமுக ஒன்றும் ஆளில்லாத கட்சி அல்ல. தொண்டர்கள் அதிகம் உள்ள கட்சிதான் இந்த கட்சி. அதிமுக வில் வேட்பாளராக நிற்கும் டாக்டர் பழனி தன்னிடம் கோடி கோடியாக பணம் இருப்பதால் மக்களை ஏமாற்றி விடலாம் என்று நினைக்கிற அந்த ஏமாற்று பேர்வழிக்கு சொல்கிறேன். இது ஒரு நாள் கூத்து. நிரந்தரமாக 5 ஆண்டுகாலம் ஆட்சியை பயன்படுத்திக்கொள்ள மக்கள் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும்.


எதிர்கட்சிக்காரன் யாரிடம் சென்று மனு தருவான் என்னிடம் வந்து கொடுப்பானா அல்லது முதலமைச்சரை சந்தித்து இந்த வார்டு பிரச்சினை பற்றி பேச முடியுமா எதிர்கட்சிகாரன் தன்னிடம் வசதி இருக்கிறது என்ற காரணத்தினால் தன்னிடம் கோடி கோடியாய் பணம் இருக்கிறது என்ற காரணத்தினால் நடத்துகிற ஒரு நாள் கூத்து இது. அதிமுக வேட்பாளர் மோட்டார் சைக்கிள் வாங்கித் தருகிறேன் என்று கூறுவதை இப்போதே நிறைவேற்று. ஆர்.கே.நகர் மாதிரி ஏமாற்று வேலையா ஜனநாயகத்தை காசு கொடுத்து வாங்கி விட முடியுமா தேனிமலை மக்கள் ஏமாந்து விட மாட்டார்கள். நீதான் ஏமாந்து விடுவாய். கீதா முருகன், ஏழுமலை ஆகியோரின் வெற்றி உறுதியாகிவிட்டது. ஓட்டு எண்ணும் போது கீதா முருகன், ஏழுமலை ஆகியோர் வெற்றி பெற்றார்கள் என்று தான் வரும்.இதற்கு நான் சத்தியம் செய்கிறேன்.



எதிர் கட்சிக்காரன் கூட நீ போகிறானே அவன் எனக்கு ஓட்டு  போடுகிறானா இல்லையா என பார். நான் எழுதி வேண்டுமானாலும் கொடுக்கிறேன். யார்? யார்? உன்னுடன் இருக்கிறார்கள் என காவல்துறையினரிடம் ரிப்போர்ட் வாங்கியிருக்கிறேன். உன்னுடன் இருப்பவர்களில் பாதிக்குமேல் எங்களுடைய ஆட்கள் தான் ஏதோ பிழைப்பு ஓட்டடும் என நாங்களே அனுப்பி இருக்கிறோம். என்னை மாதிரி கூடலூரில் ஏர் ஓட்டி சம்பாதித்த பணமா அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் பழனியை பார்த்து உனக்கு எப்படி பணம் வந்தது என்று தெரியாதா எப்படி எப்படியோ வந்த பணம் நடக்கட்டும் தேனிமலை மக்கள் சாப்பிடட்டும் என்றார்.


மேலும் சாத்தனூர் அணை மூன்றாவது குடிநீர் திட்டம் செயல்படுத்தியும் திருவண்ணாமலைக்கு தண்ணீர் பிரச்சனைகள் உள்ளது. எனவே 170 கிலோமீட்டர் தூரமுள்ள காவிரியில் இருந்து திருவண்ணாமலைக்கு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் கொண்டு வர ரூபாய் 5,700 கோடியை தமிழக முதல்வர் ஒதுக்கீடு செய்து விட்டார். மே மாதம் வந்து அவர் இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட உள்ளார். இதே போல் ரூபாய் 15 கோடியில் மாட வீதி முழுவதும் சிமென்ட் சாலைகள் போடுவதற்கான டெண்டர் அடுத்த வாரம் விடப்படுகிறது. சொன்னதை செய்துள்ளேன் அந்த யோக்கியதை எவனுக்காவது உண்டா திருவண்ணாமலை வளர்ச்சி பெற, பலரும் பாராட்டக்கூடிய நகராக உருவாக்கிட உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் என்று இவ்வாறு அவர் பேசினார்.