திருச்சி மாநகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், காந்தி மார்க்கெட் அருகில் மரக்கடை பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலை முன்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசுகையில்...




‛‛கேப்டன் உடல்நலத்துடன் உள்ளார். திருச்சி செல்கிறேன் என்று அவரிடம் கூறினேன். வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதாகவும் கூறினார். வெற்றி வீரர்களால், உங்களை அவர் சந்திக்கவிருப்பதாக கூறினார். திமுக கூட்டணி ஒருபக்கம், அதிமுக ஒரு பக்கம், நாங்கள் ஒரு பக்கம், தவிர சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகிறார். யாருக்கு ஓட்டளிப்பது என்கிற குழப்பம் மக்களுக்கு இருக்கும். மக்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன், ‛யார் வந்தால் உங்களுக்கு நல்லது நடக்கும்’ என்பதை சிந்தித்து வாக்களியுங்கள்.


பல உள்ளாட்சி பகுதிகள் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறது. சாக்கடையும், குப்பையுமாய் வார்டுகள் உள்ளது. திருச்சி மாநகராட்சியின் அனைத்து வார்டுகளுக்கும் நான் சென்றிருக்கிறேன். அவ்வளவு மோசமாக உள்ளது. சமயபுரம் விழாவிற்கு மஞ்சள் புடவையோடு மகளிர் கால் நடையாக நடந்து வருகிறார்கள். அவர்களை பார்க்கும் போது, திருச்சியில் மகளிர் மாநாடு நடத்திய மஞ்சள் மயமானதை நினைத்து பார்க்கிறேன். பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து உங்களை ஏமாற்றி வெற்றி பெறுகிறார்கள். 


இங்கு போட்டியிடும் வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள் இல்லை. சொந்த உழைப்பில் வெற்றி பெற்றவர்கள். உண்மையின் சிகரங்களாக இங்கு போட்டியிடுகிறார்கள். மக்களுக்காக உழைக்கும் குறிக்கோளுடன் நிற்கும் வேட்பாளர்கள் தேமுதிகவினர். மக்கள் சிந்தித்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். நீங்கள் எத்தனையோ பேருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளீர்கள். இந்த முறை எங்களுக்கு வாய்ப்பு வழங்குங்கள். 


 


தேமுதிக வெற்றி பெற்றவுடன், நகரில் கண்காணிப்பு கேமரா பொருத்துவோம், காந்தி மார்க்கெட் முதல் மலைக்கோட்டை வரை ஷேர் ஆட்டோ வசதி செய்தி தரப்படும். வியாபார பகுதியில் கழிப்பறை வசதி செய்து தருவோம். கல்வி கடன், வங்கி கடன், முத்ரா கடன் அனைத்தும் வாங்கித் தரப்படும். வெற்றி பெறும் முன்னரே பல்வேறு உதவிகளை மக்களுக்கு செய்யும் தேமுதிக வேட்பாளர்கள், வெற்றி பெற்றால் இன்னும் பல நன்மைகள் செய்வார்கள். நாய் தொல்லையில் இருந்து மக்களை காப்பாற்றுவோம், திருச்சி மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் நாய் தொல்லைகளால் மக்கள் அவதியுறும் நிலையில், உரிய நடவடிக்கை எடுத்து மக்களை பாதுகாப்போம். திமுகவும், அதிமுகவும் மாறி மாறி குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சொன்னதை செய்யும் கட்சியாக இருப்போம். பொய் வாக்குறுதிகளை கொடுக்க மாட்டோம். திமுக கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை, இப்போது வந்து வாக்குறுதியை விரைவில் நிறைவேற்றுவோம் என்கிறார்கள்; விரைவில் தேர்தல் வந்ததால், அந்த வாக்குறுதியை அவர்கள் தருகிறார்கள்,’’ என்று பிரேமலதா பிரச்சாரம் செய்தார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண