நெல்லை மாவட்டத்தில் காலை முதல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது, குறிப்பாக நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி தனது வாக்கினை பதிவு செய்தார், தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு கூறும் பொழுது, நெல்லை மாவட்டத்தில் 17 பேரூராட்சி, 3 நகராட்சி, 1 மாநகராட்சி என அனைத்து இடங்களிலும் காலை 7 மணி முதல் அமைதியான முறையில் தேர்தல் நடந்து வருகிறது. தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிகளில் காவல்துறையினர் பணியமர்த்தப்பட்டு தீவிர கண்காணிப்பு நடந்து வருகிறது, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டுள்ளது,
100 பதற்றமான வாக்குச்சாவடிகளில் நுண் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு கண்காணிப்பு பணிகள் நடந்து வருகிறது, 218 வாக்குச்சாவடிகளில் Live web Stream அமைக்கப்பட்டு மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறையிலும், அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர் கட்டுப்பாட்டு அறையிலும், மாநில தேர்தல் ஆணையம் நேரடி கண்காணிப்பிலும் இருந்து வருகிறது, அதே போல வாக்குப்பதிவு இயந்திரங்களில் சிறு சிறு கோளாறு ஏற்பட்டதை உடனுக்குடன் சரிசெய்து வாக்குப்பதிவு மீண்டும் நடந்து வருகிறது, வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்படும் கோளாறுகளை சரிசெய்ய 6 பெல் நிறுவன பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர், ஏர்வாடி, மணிமுத்தாறு பகுதிகளில் இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறுகள் உடனடியாக சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது,
நெல்லை மாவட்டத்தில் அமைதியான முறையில் நியாயமான முறையில் தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது, மாஞ்சோலை உள்ளிட்ட மலை கிராமங்களில் நடைபெறும் வாக்குப்பதிவை வனத்துறை மற்றும் காவல்துறை வயர்லஸ் கருவி உதவியுடன் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் அனைத்து விதமான தொழில் நுட்ப ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, தேர்தலை சிறப்பான முறையில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
முன்னதாக நெல்லை மாவட்டம் ஏர்வாடி நகர பஞ்சாயத்து 15-வார்டுகளுக்கான வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்த நிலையில் வாக்குச்சாவடி எண் 2 பெண்களுக்கான பூத்தில் வாக்குபதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது, இதனால் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டு சிறிது நேரத்தில் சரிசெய்யப்பட்டது, இதனால் பெண்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது, அதேபோல வள்ளியூர், மணிமுத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்குப்பதிவில் ஒரு மணி நேரம் தாமதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது,
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்