சேலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பரப்புரையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் மாநகராட்சி பகுதியில் போட்டியிடும் 60 வேட்பாளர்கள் ஆதரித்து சேலம் கோட்டை பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், சேலம் மாநகராட்சியில் உள்ள 60 கோட்டங்களிலும் அதிமுக வெற்றி பெற்று, சேலம் மாநகராட்சி அதிமுகவின் கோட்டை என நிரூபிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், “பொய் வாக்குறுதி அளித்துவிட்டு ஆட்சிக்கு வந்த திமுகவினர், ஆட்சிக்கு வந்ததும் மக்களை மறந்து விட்டனர். எதிர்பார்ப்புடன் இருந்த தமிழக மக்கள் அதிமுக அரசை ஏமாற்றி விட்டது.
தன்னை விளம்பரம் செய்து கொள்ளவே கவனம் செலுத்துகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். 2011 சட்டமன்றத் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் 11 இடங்களில் 10 இடங்களில் வெற்றி பெற்று பலம் வாய்ந்தவையாக திகழ்கிறோம்.
திமுக அறிவித்த 525 வாக்குறுதிகளில் 70 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஸ்டாலின் சொல்கிறார். மகன் உதயநிதி ஸ்டாலின் 90 சதவீதம் என்கிறார்.
ஏற்கனவே நான் சொன்னது போல பொய் பேசுவதற்கு ஸ்டாலினுக்கு நோபல் பரிசு தர வேண்டும். கடந்த தேர்தலில்தான் உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வந்தார். "விளையும் பயிர் முளையிலேயே தெரியும்" என்பதற்கேற்ப பொய்யை மட்டுமே உதயநிதி பேசி வருகிறார். திமுக கட்சி இல்லை கம்பெனி. அதனுடைய எம்.டி வடநாட்டில் இருக்கிறார். அவர் என்ன சொல்லுகிறாரோ அதைத்தான் ஸ்டாலின் செய்கிறார்.
உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வு ரகசியத்தை கூறுவதாக கூறி நீட் தேர்வு ரத்து செய்யும் வரை போராடுவதே அந்த ரகசியம். மாணவர்களுக்கு கல்விக்கடன் ரத்து என தேர்தல் நேரத்தில் திமுகவினர் சென்ற இடங்களிலெல்லாம் பிரச்சாரம் செய்தனர். ஆனால் இதுவரை அது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.
திமுக-காங்கிரஸ் கூட்டணியின் போது கொண்டு வரப்பட்டதுதான் நீட். இரண்டு ஆண்டு காலமாக நீட்டை வைத்து காலம் கடத்தி விட்டனர் திமுக. ஊடகங்கள் முன்னிலையில் நீட் தேர்வு குறித்து விவாதிக்க நானும் ஓபிஎஸ் -யும் தயார். ஸ்டாலின் தயாரா.?
அனிதாவிற்கு பிறகு எத்தனையோ பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினே பொறுப்பு. சேலம் மாவட்டத்தில் அதிமுக எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை என ஸ்டாலின் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் பேசுகிறார்.
நீட் தேர்வில் வெற்றி பெறும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவர் கனவை நினைவாக்கும் வகையில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவர் கனவு நாணவாக்கியுள்ளது. அதிமுக ஆட்சியின் போது தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்து எந்த அரசும் செய்யாத சாதனையை படைத்தது அதிமுக அரசு.
இந்தியாவிலேயே முதன்மையான முதலமைச்சர் என ஸ்டாலின் தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார். இந்தியாவிலேயே பொய் பேசுவதில் முதன்மையானவர் ஸ்டாலின் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்” என்று கடுமையாக விமர்சித்தார். “திமுக ஆட்சிக்கு வந்தவுடன் எதிர்பார்ப்புடன் இருந்த அரசு ஊழியர்கள் நிதி நிலையை காரணம் காட்டி அகவிலைப்படி வழங்கப்படமாட்டாது என என திமுக அரசு அறிவித்தது. அரசு ஊழியர்களுக்கும் அனைத்து இளைஞர்களுக்கும் நாமம் போட்ட கட்சிதான் திமுக. தேர்தல் அலுவலர்களாக செல்லும் அரசு ஊழியர்கள் நடுநிலையோடு நடந்துகொள்ள வேண்டும்” என்றார்.
“அம்மா மினி கிளினிக் மூடப்பட்டது. அம்மா என்ற பெயரே இருக்கக்கூடாது என நினைக்கிறார் ஸ்டாலின். திமுக சதி திட்டம் தீட்டுவதாக செய்தி வருகிறது. அனைத்து சதி திட்டத்தையும் அதிமுக முறியடிக்கும். தெம்பு, திரானி, தில்லு இருந்தால் ஜனநாயக முறைப்படி தேர்தலை சந்திக்க வேண்டும்” என்று எடப்பாடி பழனிசாமி எச்சரித்தார்.