கும்பகோணத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கும்பகோணம் மாநகராட்சி உறுப்பினர்களுக்கான தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து விட்டு பேசுகையில், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வாக்குப்பதிவு வருகிற 19 ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. ஒவ்வொரு முறையும் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்படும் போதெல்லாம் தேர்தலில் வெற்றி பெற திமுகவினர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவது குறுக்கு வழியில் திட்டமிடுவது வழக்கம். திமுகவினர் தேர்தலில் வெற்றிபெற என்ன திட்டமிட்டாலும் அதை அதிமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் முறியடிக்க வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலில் திமுக எப்போதுமே நேர்மையாக தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றது கிடையாது. கடந்த முறை நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலை அதிமுக அரசு ஜனநாயக முறைப்படி நடத்தி முடித்தது. மக்களிடம் அதிக செல்வாக்கை பெற்ற வேட்பாளர் எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் அதிக வாக்குகளைப் பெற்றிருந்தால் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் திமுக அரசு நேர்மாறாக செயல்படும். எனவே அதிமுக நிர்வாகிகள் கவனமுடன் செயல்பட வேண்டும். எனவேதான் அதிமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு பெறப்பட்டுள்ளது. எனவே இந்த முறை உள்ளாட்சித் தேர்தலில் திமுகவினர் செய்யும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். திமுக தலைவர் ஸ்டாலின் பேசுவது அனைத்தும் பொய். ஆனால் நான் பொய் பேசுவதாக கூறிவருகிறார். ஸ்டாலின் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் எதையும் இதுவரை நிறைவேற்றவில்லை. பதவி ஏற்று 9 மாத காலத்தில் மக்களைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல் சொன்ன வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் இருந்து வருகிறார்.
குடும்பத் தலைவியாக அனைவருக்கும் மாதம்தோறும் ரூபாய் 1000 உதவித் தொகை தருவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் இதுவரை அது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் தற்போது உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வீடுவீடாக மாதம் தோறும் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கப்படும் என துண்டு பிரசுரம் கொடுத்து மக்களை ஏமாற்றி வருகிறார். ஓட்டு போடும் வரை மக்களை பார்த்துவிட்டு போட்டு வாங்கியதும் வீட்டிலுள்ள தங்களது மக்களை பார்க்கும் கட்சி தலைவராக தான் திமுக தலைவர் ஸ்டாலின் இருந்து வருகிறார்.
இதேபோல் மாதம்தோறும் சமையல் எரிவாயு ரூபாய் 100 மானியம் வழங்குவதாக வாக்குறுதி கொடுத்திருந்த திமுக தலைவர் இதுவரை அதை பற்றி பேசவே இல்லை. மாணவர்கள் வாங்கியிருந்த கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி கொடுத்திருந்தார். ஆனால் இதுவரை அது குறித்தும் எந்த பேச்சும் இல்லை. பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதாக கொடுத்த வாக்குறுதியில் பெட்ரோல் விலையை மட்டும் ரூபாய் 3 குறைத்துவிட்டு டீசல் விலையை குறைக்காமல் அதுகுறித்து சட்டசபையில் அதிமுக சார்பில் கேள்வி எழுப்பியதற்கு மத்திய அரசு தான் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என தற்போதைய முதலமைச்சர் தெரிவித்தார். ஆனால் மத்திய அரசு தற்போது பெட்ரோல் டீசல் விலையை குறைத்து உள்ள நிலையில் இந்தியாவின் 25 மாநிலங்களில் குறைந்துள்ள பெட்ரோல் டீசல் விலை தமிழகத்தில் மட்டும் குறைக்க படாமல் இருந்து வருகிறது. இதனால் மற்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்க நீட் தேர்வை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்தியது அதிமுக. கிராமப்புற அரசு பள்ளிகளில் படித்த ஏழை எளிய மாணவ மாணவிகள் அரசின் உள் இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க வசதியாக 7.5 சதவீத இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தது அதிமுக. இதன்மூலம் தமிழகத்தில் தற்போது 541 மாணவ மாணவிகள் எந்தவித கல்விக்கட்டணம் விடுதி கட்டணம் இல்லாமல் மருத்துவம் பயின்று வருகின்றனர். டெல்டா பகுதி விவசாயிகள் நலன் கருதி விவசாயம் செழிக்க மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் கிடைக்க அதிமுக அரசு நடவடிக்கை எடுத்தது. விஞ்ஞான முறைப்படி விவசாயம் செய்யக்கூடிய விவசாயிகள் தமிழகத்தில் உள்ளனர். நானும் ஒரு விவசாயி. விவசாயிகள் தங்களது நிலங்கள் பறிபோகும் என்ற அச்சத்தில் இருந்த போது காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அதிமுக அரசு அறிவித்து விவசாயிகளையும் விவசாய நிலங்களையும் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொண்டது.
ஹைட்ரோகார்பன் திட்டங்களைக் கொண்டு வந்தது திமுக அரசு. அதனை தடுத்து நிறுத்தி விவசாயிகளையும் விவசாய நிலங்களையும் பாதுகாத்தது அதிமுக அரசு. காவிரி நதிநீர் பங்கீடு குறித்த பிரச்சனையில் பல ஆண்டுகாலமாக அதிமுக சார்பில் சட்ட போராட்டம் நடத்தி வெற்றி பெற்று அதனை அரசிதழில் வெளியிட்டது அதிமுக அரசு. இதேபோல் புயல் மழை பல்வேறு இயற்கை சீற்றங்களால் எப்போதெல்லாம் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர் அப்போதெல்லாம் அவருக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்கி விவசாயிகளை பாதுகாத்தது அதிமுக அரசு. பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் சாகுபடி செய்யப்பட்டு சேதமடைந்த பயிர்களுக்கு இந்தியாவிலேயே அதிக இழப்பீடு தொகை பெற்றுத் தந்தது அதிமுக அரசு. நான் முதலமைச்சராக இருந்த போது மட்டும் 13 ஆயிரத்து 200 கோடி ரூபாய் இழப்பீடு பெற்று தரப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக தஞ்சை திருவாரூர் நாகை மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் அனைத்தும் சேதமடைந்தன. இவற்றை அதிமுக சார்பில் நாங்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தோம். முதலமைச்சராக இருக்கும் ஸ்டாலினும் ஆய்வு செய்தார் ஆனால் அதற்கான இழப்பீடு தொகை வழங்கவே இல்லை.
அதிமுக ஆட்சியில் எப்பொழுதெல்லாம் புயல் மழை போன்ற இயற்கை சீற்றங்களால் பயிர்கள் சேதமடைகின்றன அப்போதெல்லாம் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போதைய திமுக அரசுக்கு விவசாயிகளைப் பற்றி எந்த கவலையும் இல்லை. விவசாயிகள் மின்கட்டணத்தை ஒரு பைசா குறைக்க சொல்லி போராடிய போது அவர்களை குருவி சுடுவது போல் சுட்டு வீழ்த்தியது திமுக அரசாங்கம். ஏழை எளிய மக்கள் பொங்கலை சிறப்பாக மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்பதற்காக பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூபாய் 2500 வழங்கியது அதிமுக அரசு. ஆனால் தற்போது திமுக அரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு தரமற்ற பொருட்களை பொதுமக்களிடம் கொடுத்து அவர்களை ஏமாற்றிய துடன் எந்தவித பணமும் வழங்கவில்லை. தேர்தல் வாக்குறுதியில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்ட நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என கூறியிருந்த நிலையில் ஆட்சி அமைந்த பிறகு தகுதியானவர்களுக்கு மட்டுமே நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என மாற்றி பேசி வருகின்றனர். இது விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே திமுகவினர் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகின்றனர்.தற்போது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயராக அதிமுக உறுப்பினரை தேர்ந்தெடுக்க அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்குகளை செலுத்த வேண்டும் என்றார்.