குழந்தைகளை குளிப்பாட்டி வாக்கு சேகரிக்கும் முதுகுளத்தூர் பேரூராட்சி திமுக வேட்பாளர்;
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக வரும் 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக இறுதிகட்ட பிரச்சார பணியில் வாக்கு சேகரிப்பதற்காக அரசியல் கட்சியினரும் சுயேச்சை வேட்பாளர்களும் மும்முரமாக களமிறங்கியுள்ளனர். வாக்குகளைப் பெறுவதற்கு வேட்பாளர்கள் பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றனர். அதில் ஒரு வகையாக, ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 6-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் இளம் வயது வேட்பாளர் பட்டதாரியான சதீஷ்குமார் தான் போட்டியிடும் ஆறாவது வார்டு பகுதியில் தனியாக வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.
இதில் குறிப்பாக, பெண்களின் வாக்குகளை கவரும் வகையில் அந்த பகுதியில் வசிக்கும் குடும்பத்தினரை சேர்ந்த குழந்தைகளுக்கு சோப்புப்போட்டு நன்றாகக் குளிக்க வைத்து தங்கள் வீட்டுக் குழந்தைகளை பராமரிப்பதுபோல அந்த குழந்தைகளை துண்டால் தலையை துவட்டி விட்டு பின்னர் குழந்தைகளுக்கு பவுடர் அடித்து, அழகுபடுத்தி அந்த குழந்தைகளின் பெற்றோரிடம் ஒப்படைத்து நூதனமான முறையில் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து திமுக சார்பில் போட்டியிடும் தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு வாக்கு சேகரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.
வாக்கு சேகரிப்பு கிளம்பும் முன் தனது வீட்டில் இருந்து வெளியே வருவதற்கு முன்னதாக, கொரானா தொற்று பரவல் விதிமுறைகளை கடைப்பிடித்து, பாதுகாப்பாக முகக்கவசம் அணிந்து கையுறையுடன் சமூக இடைவெளி விட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சதீஷ்குமார் இன்னமும் திருமணம் ஆகாதவர் என்றாலும்கூட, திருமணமாகி குழந்தை குட்டி பெற்றவரைப் போல குழந்தைகளின் மீது அக்கறை காட்டி வாக்கு சேகரிப்பது அப்பகுதி வாக்காளர்களை மிகவும் கவர்ந்துள்ளது.
இதே போல, அபிராமம் பேரூராட்சியில் போட்டியிடும் மகளுக்காக தந்தையும், தந்தைக்காக மகளும் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் திமுகவில் போட்டியிடுவது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் இரண்டாவது வார்டில் திருமணம் ஆகாத இளம் வயது பெண் பட்டதாரி திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார். அதேபோல அங்குள்ள 1வது வார்டில் அவருடைய தந்தையும் திமுக சார்பில் போட்டியிடுகிறார். இவர்கள் இருவருமே திமுக சார்பில் போட்டியிடுவதால் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து 1-வது வார்டில் போட்டியிடும் தந்தைக்காக மகளும் வாக்கு சேகரிக்கிறார். அதேபோன்று இரண்டாவது வார்டில் போட்டுயிடும் மகளுக்காக தந்தை கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து வீதி வீதியாக வீடு வீடாகச் சென்று ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் பாராட்டி ஆளும் கட்சியின் சாதனைகளை எடுத்துக்கூறி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு தீவிரமாக இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் இவர்கள் இருவரும் தந்தை மகள் என்பதால், ஒருவருக்கொருவர் இணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், திமுக மேலிடத்தில் மட்டுமில்லாமல் அடித்தட்டு வரை குடும்ப அரசியல் என எதிர்கட்சியினர் விமர்சிக்கின்றனர். உள்ளூர் கட்சி நிர்வாகிகள் எத்தனையோ பேர் இருக்க ஒரு பேரூராட்சியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேருக்கு திமுகவில் சீட் வழங்கி இருப்பதால் எதிர்க்கட்சியினர் இவ்வாறு விமர்சனம் செய்கின்றனர்.