சென்னை புத்தக காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.


45ஆவது சென்னை புத்தக காட்சியை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் புத்தக அரங்குகளை நேரில் சென்று பார்வையிட்டார். இதனைத்தொடர்ந்து, 6 பேருக்கு கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதுகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.


இன்று முதல் மார்ச் 6ஆம் தேதி வரை காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை 19 நாட்கள் புத்தக காட்சி நடைபெறவுள்ளது. சுமார் 800 அரங்குகளில் ஒரு லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள்  காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படும். புத்தகக் காட்சிக்கான நுழைவுச்சீட்டினை www.bapasi.com என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும், புத்தக காட்சியை பார்க்க மாணவர்களுக்கு டிக்கெட் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு 10 ரூபாய் நுழைவு கட்டணமாக பெறப்படும். புத்தகம் வாங்க வரும் வாசகர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக சிறப்பு மருத்துவ முகாமும் நடைபெறுகிறது. புத்தகங்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். இணையத்தில் இதுவரை 40 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனாவின் இரண்டாவது அலை ஓய்ந்ததை அடுத்து நிலைமை சகஜ நிலைக்கு திரும்பிக்கொண்டிருந்தது. ஆனால் திடீரென ஒமிக்ரான் வைரஸ், கொரோனா மூன்றாவது அலை என உருவானதால் தமிழ்நாட்டில் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு, தினசரி இரவு நேர ஊரடங்கு என கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு விதித்தது.


மேலும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிவாளர் சங்கம் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் நடக்கும் புத்தக கண்காட்சிக்கும் கொரோனா காரணமாக தமிழ்நாடு அரசு தடை விதித்தது.


இந்தச் சூழலில் வைரஸ் பரவல் குறைந்ததால் கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு தளர்த்தியது. அதன்படி, பிப்ரவரி 16ஆம் தேதியிலிருந்து மார்ச் மாதம் ஆறாம் தேதிவரை புத்தக கண்காட்சியை நடத்திக்கொள்ள தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.


சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடக்கும் புத்தக கண்காட்சியை தமிழ்நாடு அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அதேசமயம், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கைக்குழந்தைகளுக்கு அனுமதி இல்லை எனவும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி நுழைவு டிக்கெட் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண