செங்கல்பட்டு நகராட்சி

 

33 வார்டுகளை கொண்ட செங்கல்பட்டு நகராட்சியில் 60 ஆயிரத்து 204 வாக்காளர்கள் உள்ளனர். செங்கல்பட்டு நகராட்சியை பொருத்தவரை கடைசியாக நடந்த 2006, 2011 நகர மன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் திமுக ஆகியவை மாற்றி மாற்றி கைப்பற்றின. தற்பொழுது நீண்ட நாட்களுக்குப் பிறகு நகர மன்ற தேர்தல் நடைபெறுவதால் திமுக , அதிமுகவிற்கு இடையே செங்கல்பட்டு நகராட்சி கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது. இதற்கு முன் நடந்த இரண்டு தேர்தலிலும், நகர்மன்ற தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 


 

 

பிரபல ரவுடி குரங்கு குமார்

 

செங்கல்பட்டில் அசைக்கமுடியாத பிரபல ரவுடியாக இருந்து வந்தவர்தான் "குரங்கு குமார்" . தமிழகத்தில் குரங்கு குமாரை தெரியாத பிரமுகர்களே கிடையாது, என்ற அளவிற்கு குரங்கு குமார் செங்கல்பட்டு பகுதியில் கொடிகட்டி பறந்தார். குரங்கு குமாரின் அண்ணன்கள் இருவரும் செங்கல்பட்டு பகுதியில் முக்கிய ரவுடிகளாக இருந்து வந்தனர். அந்த செல்வாக்கை பயன்படுத்தி செங்கல்பட்டை தான் முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். ஒரு கட்டத்தில் குரங்கு குமாரை காவல்துறையினர் அவரை என்கவுண்டர் செய்ய திட்டமிட்டு இருந்தனர். அப்பொழுதுதான் திருந்தி வாழ நினைத்த குமார். தன்னை தற்காத்து கொள்வதற்காக அரசியலுக்குள் நுழைந்தார்.

 


 

அதிமுகவின் நகரச் செயலாளரான குரங்கு குமார்

 

கட்ந்த 2006ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் செங்கல்பட்டு நகராட்சியில் 13 ஆவது வார்டு மக்கான் சந்துப்பகுதியில் போட்டியிட்டு கவுன்சிலரனார் குமார். இதனையடுத்து, செங்கல்பட்டு  நகர்மன்றத் துணை  தலைவர் பதவியை எளிதாக கைப்பற்றினார். செங்கல்பட்டு, அதிமுக நகரச் செயலாளரான குமாருக்கு கட்சி வட்டாரத்தில் செல்வாக்கு கூடத் தொடங்கியது. கட்சிப் பணியை செங்கல்பட்டு நகர பகுதியில் வேகமாக செய்து வந்தார் குரங்கு குமார். செங்கல்பட்டை அதிமுகவின் கோட்டையாக மாற்ற பணிகளை மேற்கொண்டு வந்த குமாரின், மனதில் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற ஆசை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2007ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி  நகர்மன்றத் துணைத் தலைவராக இருந்த பொழுதே குரங்கு குமார் முகம் சிதைத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில்  ரவுடி ரவி பிரகாஷ் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர் .



 

 

குரங்கு குமாரை போட்டுத் தள்ளிய ரவி பிரகாஷ்

 

செங்கல்பட்டு அடுத்த திருக்கச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி பிரகாஷ். குரங்கு குமாருக்கும் ரவி பிரகாஷ்க்கும் ஏற்கனவே ஒரு கொலை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது. இதன் அதேபோல் குரங்கு குமார் இடத்தை பிடிக்க ரவி பிரகாஷுக்கு ஆசை இருந்து வந்தது. இதன் காரணமாகவே குரங்கு குமார் கொலை நடைபெற்றது. இதனையடுத்து ரவி பிரகாஷ் திமுகவின் நகர செயலாளரானார். இதனையடுத்து "குரங்கு குமாரிடம் இருந்து வந்த நகர்மன்றத் துணைத் தலைவர் பதவியையும் திமுக நகர செயலாளரான ரவி பிரகாஷ் கைப்பற்றினார். இந்த நிலையில் கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி திமுக நகரச்செயலாளர் ரவி பிரகாஷை 20 பேர் கொண்ட கும்பல் குரங்கு குமாரை போலவே முகம் சிதைத்து கொன்றது.  

 

மீண்டும் களத்தில்



 

இந்நிலையில் மறைந்த குரங்கு குமாரின் மகனான M.K. சுரேஷின் மனைவி சிந்தியா செங்கல்பட்டு நகராட்சியில் 12வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். தற்போது குரங்கு குமாரின் மகன் M.K.சுரேஷ் அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்ட  மாணவரணி துணை செயலாளராக இருந்து வருகிறார். மீண்டும் அதிமுக செங்கல்பட்டு நகராட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக குரங்கு குமார் மகன் களத்தில் குதித்து இருப்பதாகக் கூறப்படுகிறது. முன்னாள் நகர மன்ற துணைத் தலைவரின் மருமகள் நேரடியாக மீண்டும் தேர்தலில் போட்டியிட இருப்பது செங்கல்பட்டு நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

குரங்கு குமாரின் புகைப்படம் மூலம் பரப்புரை

 

தேர்தல் பரப்புரையில் நோட்டீஸ் மற்றும் பேனர்களில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் குரங்கு குமார் எடுத்துக் கொண்ட புகைபடம் மற்றும் குரங்கு குமார் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவி செய்யும் போது எடுத்த புகைப்படம் ஆகியவற்றை பயன்படுத்தி  முன்னிலைப்படுத்தி தேர்தல் பரப்புரையில் இறங்கி உள்ளனர்.