கொரோனா காலத்தில் பல தமிழ்க் கலைஞர்களை தமிழ்நாடு இழந்துள்ளது. எஸ்.பி.பாலசுப்ரமணியம், விவேக் என இதில் எதிர்பாராத சில இழப்புகள் மக்கள் மனதில் நீங்காத வடுவை ஏற்படுத்தியுள்ளன. இவர்களில் விவேக் தனது சுவாரசியமான பிரசாரம் தொனிக்கும் நகைச்சுவை நேர்காணல்களுக்குப் பெயர் போனவர்.
பிரபல தொலைக்காட்சி சானல் ஒன்றுக்கு அவர் அளித்த சுதந்திரதினச் சிறப்புப் பேட்டி ஒன்றின் ஒரு பகுதி தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.



தொகுப்பாளர்: படத்துல ஒரு சீன்ல போர்ட்ல எழுதிக் காண்பிச்சுட்டு இப்போ தெரியுதா? இப்போ தெரியுதா? அப்படினு கேட்பிங்க. அந்த சீன்ல நீங்க சொல்லவரக் கருத்து என்ன?


விவேக்: அது திருடப்பட்ட சீன். 



தொகுப்பாளர்: என்னது திருடினிங்களா? 


விவேக்: ஆமாம் என் பொண்ணுக்கிட்டேர்ந்துதான் அந்த சீனை எடுத்தேன். ஒருமுறை எதோ எழுதிட்டு இருக்கும்போது ‘இது எவ்ளோ பெரிசா எழுதினாலும் எனக்குத் தெரியாது. ஏன்னா அந்த மொழியே எனக்குத் தெரியாது’ அப்படின்னு சொன்னாங்க. இந்தியில் எவ்வளவு பெரிசா எழுதினாலும்  எனக்குப் பார்க்கத்தான் தெரியுமே தவிர அது புரியாது. எல்லாம் எனக்குத் தெரிஞ்சாலும் எனக்குப் படிக்கத் தெரியாதது எவ்வளவு பெரிய அறியாமை. ‘கற்றவர்களுக்கு இருப்பதுதான் கண் கல்லாதவர்களுக்கு அது முகத்தில் இரண்டு புண் அப்படினு வள்ளுவரே சொல்லியிருக்காரே. அதனால என் பொண்ணு சொன்னதை வைச்சுதான் இந்த காமெடி சீன் எழுதினோம். 




பார்வையாளர்களில்  ஒருவர்: நீங்க இப்படித்தான் ஒரு படத்துல திருவள்ளுவர் படத்தைக் காண்பிப்பிங்க பிள்ளைங்க டி.ராஜேந்தர்னு சொல்லுவாங்க.அடுத்த தலைமுறைக்கு தமிழ் பற்றி எப்படி விழிப்புணர்வு கொண்டு வரலாம்? 



விவேக்:  பிரசாரம் இல்லாத கலையும் கலை இல்லாத பிராசரமும் வீண். இரண்டையும் சரியான விகிதத்தில் கலந்து கொடுக்கும்போது அது கலை வடிவிலான பிரசாரமும் பிரசார வடிவிலான கலையாகவும் மாறும். இந்த நிகழ்விலும் நாம் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறோம்.இது வெறுமனே நேர்காணல் கிடையாது. இங்க ஒருத்தருக்கு ஒருத்தர் நகைச்சுவையா சில கருத்துகளை பரிமாறிக்குறோம். தமிழ்தான் உலகத்திலேயே மூத்த மொழினு நிருபனமாகி இருக்கு. இந்தப் பெருமையெல்லாம் உணராமலேயே இருக்கோம்.


மற்றொன்று. வேம்பு, மஞ்சள், மாட்டு சாணம் மருத்துவ குணம் உடையதுனு சர்வதேச அளவுல நிருபிக்கப்பட்டுருக்கு. ஆனால் தமிழர்கள் நாம அதை பல நூற்று ஆண்டுகாலமாகப் பயன்படுத்திட்டு வந்திருக்கோம். உலகத்துக்கே மருத்துவம் சொல்லிக் கொடுத்துட்டு இருக்கோம். ’கஞ்சி குடுப்பதற்கிலார் அதன் காரணம் இன்னதென்ற அறிவும் இலார்’ அப்படின்னு பாரதியார் சொல்லியிருக்கார். வறுமைக்குக் காரணம் என்னவென்று தெரிந்துகொள்ளவேண்டும் என அவர் அறிவுறுத்தியிருப்பார். அது வறுமைக்கு மட்டும் அல்ல நாம் யார் என்பதை தெரிந்துகொள்வதற்கும் பொருந்தும்.