ஸ்டைல், கெத்து, மாஸ் என தனக்கான தனி பாணியில் தமிழ் சினிமாவில் கலக்கிவருபவர் ரஜினி. கே.பாலச்சந்தரால் சினிமாவில் அறிமுகமான ரஜினி ஆரம்பத்தில் கமலுடன் பல படங்களில் இணைந்து நடித்தார். தில்லு முள்ளு,ஜானி, முள்ளும் மலரும், போன்ற பல படங்கள் ரஜினியின் ஹீரோ அந்தஸ்தை உயர்த்தியது. அதன் பின் தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக உயர்ந்தார் ரஜினி. அவருக்கான அத்தனை ரசிகர்களுக்கும் காரணம் அவரது ஸ்டைல்தான் என்று தமிழ் சினிமாவே சொல்லும். அப்படி ஒரு பிரத்யேக ஸ்டைலை தனக்கென உருவாக்கிக்கொண்ட அவர் அதனால் எட்டிய உயரம் கணக்கிடமுடியாதது. இப்படி பட்ட ஸ்டைலை பலர் அப்படியே காப்பி அடித்து பெரிய ஆள் ஆகிவிடலாம் என்று எண்ணுவார்கள் தான். அதுபோல 90களின் சினிமாக்களில் வரும் சிறுவர்கள் அனைவரும் ரஜினி போலவே நடப்பார்கள், தலையை சிலுப்புவார்கள், முக பாவனைகள் வைத்துக்கொள்வார்கள், வசன உச்சரிப்பில் காபி அடிப்பார்கள். சிறுவர்கள் மட்டுமின்றி பல துணை நடிகர்களும் அதனை செய்துள்ளனர். ஆனால் பெரிய ஹீரோக்கள் பலரும் அவரை அதிகமாக காப்பி நடித்துள்ளனர், அதில் முக்கியமான, மிகவும் பேசப்பட்ட நடிகர்களின் எந்த ஸ்டைல் எதனுடைய காப்பி என்பது பற்றி பார்க்கலாம். இதில் எப்போதுமே முதல் இடத்தில் இருப்பது அவரது முன்னாள் மருமகன் தனுஷ் தான். அவருடன் அதிகம் பேசி பழகியதாலோ என்னவோ அவருக்கு அவருடைய நடை, பேச்சு, பாவனைகள் பல ஒட்டிக்கொண்டன. 




  • ரஜினியின் முரட்டுக்களை திரைப்படத்தில் 'சீவிடுவேன்' என்ற டயலாக் பேசுவார் ரஜினி. அன்றைய காலகட்டத்தில் அது மிகவும் பிரபலமாக இருந்தது. அதனை மாரி திரைப்படத்தில், 'செஞ்சிடுவேன்' என்றும், ஆடுகளம் திரைப்படத்தில், 'கொண்டேபுடுவேன்' என்றும் மாற்றி அதே மாடுலேஷனில் பேசி இருப்பார். 

  • முள்ளும் மலரும் திரைப்படத்தில், 'கெட்ட பையன் சார் இந்த காளி' என்று பேசியிருப்பார். அதே மாடுலேஷனில் சிரித்துக்கொண்டே வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் 'நான் கொஞ்சம் பேட் பாய் சார்' என்று பேசியிருப்பார்.

  • மாப்பிள்ளை திரைப்படத்தில் வாய்க்குள்ளிருந்து சிகரெட்டை எடுத்து புகைப்பார். அதனை அப்படியே காப்பி செய்து அஞ்சான் திரைப்படத்தில் ஒரு குச்சியை வைத்து சூர்யா செய்வார். முதலில் இதிலும் சிகரெட் தான் வைத்திருந்தார்களாம், ரசிகர்களுக்கு தவறான படிப்பினையாக இருக்கும் என்று குச்சியாக மாற்ற சொல்லியிருக்கிறார் சூர்யா.

  • அருணாச்சலம் திரைப்படத்தில் ஹேண்ட் பேக்கை திருடிவிட்டு ஓடும் ஒருவனை ஒரு கோலி சோடா எடுத்து குடித்துவிட்டு பாட்டிலை விட்டு அடித்து பிடிப்பார் ரஜினி. அதேபோல் கில்லி திரைப்படத்தில், விஜய் ஒரு கோகோகோலா குடித்துவிட்டு பாட்டிலை விட்டு அடித்திருப்பார். அப்போது விஜய் கோகோகோலாவின் பிராண்ட் அம்பாஸிடராக இருந்ததால் இதுபோன்ற ஸீன் வைத்தார்கள். 

  • சிவாஜி திரைப்படத்தில் ரஜினி பபுல்கம் தூக்கி போட்டு வாயில் பிடிக்கும் வித்தையை பயன்படுத்தி இருப்பார். அதனை அப்படியே காப்பி செய்து விஜய் தெறி மற்றும் பிகில் திரைப்படங்களில் செய்திருப்பார். ஆனால் அதற்கு விஜய் ரசிகர்கள் அந்த வித்தையை சச்சின் திரைப்படத்திலேயே செய்துவிட்டதாக கூறியிருத்தனர். அப்படி பார்த்தால் ரஜினி 1989 ஆம் ஆண்டு மாப்பிள்ளை திரைப்படத்திலேயே அதனை செய்துவிட்டார். அது ப்ரபலமாக பேசப்பட்டது சிவாஜி திரைப்படம்தான்.

  • பாபா திரைப்படத்தில் வில்லன்கள் விளையாடும் வாலிபாலை வைத்தே சண்டை செய்திருப்பார், அதே போல சத்யம் திரைப்படத்தில், விஷால் அதை அப்படியே செய்தார். ஆனால் விஷாலை ட்ரோல் செய்த எவரும் ரஜினி செய்தபோது ட்ரோல் செய்யவில்லை. இத்தனைக்கும் ரஜினி செய்வது இன்னும் நம்பமுடியாதபடிதான் இருக்கும், அதற்கு காரணம் ரஜினிக்கு இருந்த மாஸ் இமேஜ், மற்றும் இப்போது போல அந்த காலத்தில் ட்ரோல் என்பது பெரிதாக இல்லாததும்தான். 

  • படையப்பா திரைப்படத்தில் சட்டையில் உரசி நெருப்பு வர வைக்கும் கட்சியை, பரமசிவன் படத்தில் விவேக் செய்திருப்பார். இங்கிலீஷ்காரன் திரைப்படத்தில் வடிவேலு செய்திருப்பார்.

  • சூப்பர்ஸ்டார் திரைப்படத்தின் காட்சிகளை, ஸ்டைலை அப்படியே செய்து வெற்றிகண்டவர்கள் இருக்கும் நேரத்தில் அவர் படங்களை அப்படியே புதுப்பித்து ரீமேக் செய்து நடித்த நடிகர்களும் இருக்கிறார்கள். அதே டைட்டில் கூட வைத்துள்ளனர். அதில் முதல் படம் அஜித் நடிப்பில் வெளிவந்த பில்லா திரைப்படமும், இரண்டாவது மிர்ச்சி சிவா நடிப்பில் வந்த 'தில்லு முள்ளு' திரைப்படமும் ஆகும்.



இப்படி பல படங்கள் சொல்லிக்கொண்டே போகலாம், அதில் சிம்பு அவரது மிகப்பெரிய ஃபேன் என்பதால், எல்ல திரைப்படங்களிலும் அவருடைய ரெபரன்ஸ் வரும் காட்சிகளை எங்காவது வைத்துவிடுவார். அதற்கு ஒரு படி மேல் ராகவா லாரன்ஸ், அவர் ரஜினியின் பக்தர், அனைத்து திரைப்படங்களிலும் ரஜினியின் சாயலுடன் தான் நடிப்பார், அவருடைய திரைப்பட ரெபரன்ஸ்கள் வைப்பார். இவ்வளவு பேர் ரஜினியிடம் இருந்து தூண்டுதல் பெற்றிருந்தாலும், ரஜினிக்கு இதெல்லாம் எங்கிருந்து கிடைத்தது என்றால் அதில் பெரும்பாலானவை நடிகர் திலகம் சிவாஜி கணேசனிடம் இருந்துதான். அவரது நடையை அப்படியே எடுத்துக்கொண்டதாக கூறுவார்கள். பின்னர் சிகரெட் பிடிக்கும் ஸ்டைலை கன்னட நடிகர் அம்பரிஷிடம் இருந்து எடுத்துக்கொண்டதாக ரஜினி அவரே மேடையில் கூறி இருக்கிறார்.