தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெறுகிறது. தருமபுரி மாவட்டத்தில் ஒரு நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளுக்கான 192 இடங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் கடைசி நாள் என்பதால் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கலில் அளித்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுக சார்பில் தருமபுரி நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் மனு தாக்கல் செய்தனர்.

 


 

தொடர்ந்து 33 வேட்பாளர்களும் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் சந்தித்து ஆசி பெற்று, தருமபுரி நகராட்சியில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் கே. பி.அன்பழகன்,  தருமபுரி நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் அதிமுகவிற்கு பெரும் ஆதரவு  உள்ள காரணத்தினால் அதிமுக வெற்றி பெறும் எனவும் மேலும் திமுக மீது மக்களுக்கு அதிருப்தி உள்ள காரணத்தினால் தமிழகம் முழுவதும் அதிமுக அமோக வெற்றி பெறும்.

 



 

தருமபுரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் அதிமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றது போல, தருமபுரி  மாவட்டத்துக்கு உட்பட்ட 10 பேரூராட்சிகளிலும் அதிமுக வெற்றி பெறும்.  தமிழகம் முழுவதும் ஆளுகின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அதிருப்தி அதிகமாகி உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என தெரிவித்தார்.