நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சியினர் பிரச்சாரத்தில் தீவிரமாக தொடங்கி உள்ளனர். முதற்கட்டமாக அதிமுக  ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம்  தனது பிரச்சாரத்தை காஞ்சிபுரத்தில் தொடங்கினார். தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேர்தலின்போது வாக்காளர்களை கவர வேட்பாளர்கள் பல வித்தியாசமான முறைகளை கையில் எடுப்பார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பொது மக்களைக் கவர தொன்றுதொட்டு, அரசியல்வாதிகள் பயன்படுத்தி வரும் மிக முக்கியமான ஒன்று ஆடலும் பாடலும் நிகழ்ச்சி.


அதேபோல கட்சியின் முக்கிய தலைவர் வருவதற்கு முன்னால் கூட்டத்தை கலையாமல் பார்த்துக் கொள்வதற்கு மேடைப் பேச்சாளர்களை வைத்து பேசினாலும், தொண்டர்கள் மற்றும் மக்களின் கவனத்தை சிதறவிடாமல் தலைவர் வரும்வரை காத்திருக்க வைத்திருக்க இருக்கும் சுலபமான வழி ஆடல் பாடல் நிகழ்ச்சி தான். தொண்டர்களை குஷிப்படுத்தும் விதம் மறைந்த தலைவர்களின் வேடமணிந்து கட்சியின் கொள்கை பாடல்களுக்கு நடனம் ஆடுவது வழக்கம்.




அதிமுகவை பொறுத்தவரை மறைந்த தமிழக முதலமைச்சர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் வேடமணிந்து, நடன கலைஞர்கள் ஆடிப்பாடி பொது மக்களை கலை விடாமல் பார்த்துக் கொள்வர்கள். அதுபோல் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற  ஓ. பன்னீர்செல்வம் கலந்துகொண்ட கூட்டத்தில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா இணைந்து நடித்த பாடல்கள் ஒளிபரப்பப்பட்டது.  அதற்கேற்றார்போல் நடன கலைஞர்கள் ஆடிப்பாடி பொது மக்களை மகிழ வைத்தனர். மிக குறிப்பாக " நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க", ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து உள்ளிட்ட பாடல்களை பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் ரசித்து பார்த்தனர்.


 






அதிமுகவை சேர்ந்த பெரும்பாலான மூத்த தொண்டர்கள் அந்த பாடல்களை ரசித்து கை தட்டி தாளம் போட்டு தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதிமுக தொண்டர்களை சேர்ந்த பலரும் தங்களுடைய செல்போன்களில், அந்த ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை பின்பு பார்க்கலாம் என பதிவும் செய்து கொண்டனர். சில மூத்த தொண்டர்கள் செய்த அலப்பறைகள் அதிமுகவை சேர்ந்த சில தொண்டர்கள் மத்தியிலேயே சிரிப்பலையை  ஏற்படுத்தியது. என்னதான்ஆன்லைன் பிரச்சாரம், வீடியோ கான்பிரன்ஸ் பிரச்சாரம் என டெக்னாலஜி வளர்ந்து வந்தாலும், மூத்த தொண்டர்களுக்கு ஆடலும் பாடலும் நிகழ்ச்சி தான் என்றும் மகிழ்ச்சி தரும் என்பதை அந்த காட்சிகள் உணர்த்தின. இதன்பிறகு குறிப்பிட்ட நேரத்திற்கு வந்த அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கினார்.