கடவுளான பிரம்ம தேவன் கயிலாயத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானை காணச்சென்றார். அவரிடம் உலகத்தை அழிக்கக்கூடிய பிரளயம் காலம் எனும் ஊழி வெள்ளம் வர உள்ளது. (ஊழி வெள்ளம் என்பது உலகத்தையே அழிக்கக்கூடிய சுனாமி போன்றது).பிரளய காலத்தில் வேதம் முதலிய பொருட்கள் யாவும் அழிந்துவிடும் என்றும், சிருஷ்டி பீஜம் (படைப்பதற்கு உரிய மூலப்பொருள்) அழிந்து விட்டால் எப்படி நான் எனது படைப்பு தொழிலை மேற்கொள்ள முடியும் என சிவபெருமானிடம் கவலையுடன் பிரம்மதேவர் முறையிட்டு அதற்கு தாங்கள் தான் ஒரு உபாயம் தெரிவிக்கவேண்டும் என சிவபெருமானிடம்வேண்டினார்.


அதற்கு சிவபெருமான் அமுதத்தையும், மண்ணையும் சேர்த்து பிசைந்து மாயமாகிய குடத்தை செய்து அதனுள் அமுதத்தை நிரப்பி, அதனுள் தான் அளிக்கும் விதையாகிய சிருஷ்டி பீஜத்தை வைத்து, வேதம், ஆகமம், புராணம், இதிகாசங்களை அதன் நான்கு புறமும் வைத்து, அதில் நிறைய அமுதத்தை சேர்த்து, குடத்தின் மேல் மாவிலை, தேங்காய், வில்வம், பூணூல், தர்ப்பை முதலியவற்றை சேர்த்து அத்துடன் 12 ராசிகள், 27 நட்சத்திரங்களையும் கும்பத்தில் அடக்கி அதற்கு சிறப்பு பூஜை செய்து அக்குடத்தை ஒரு உறியில் வைத்து மகாமேருமலையில்  ஓர் இடத்தில் வைக்க கூறினார். ஊழி வெள்ளம் ஏற்படும்போது அதற்கு வேண்டுவனதை நாம் செய்திடுவோம் என சிவபெருமான், பிரம்மனிடம் கூறினார்.




பிரளய வெள்ளத்தின் போது மகாமேரு மலையில் வைக்கப்பட்ட சிருஷ்டி பீஜம் அடங்கிய குடம் மிதந்து தென்திசை நோக்கி செல்லும். அப்போது அந்த இடத்தில் தான்(சிவபெருமான்) தோன்றி வேண்டுவதை நிறைவேற்றுவோம் எனக்கூறி பிரம்மதேவனை அனுப்பி வைத்தார்.சிவபெருமான் கூறியபடியே பிரம்மதேவனும் மகாமேருமலையில் சிருஷ்டிபீஜம், அமுதம் அடங்கிய மாயமாகிய குடத்தை வைத்து சிவபெருமானின் திருவருளை எதிர்நோக்கி காத்திருந்தார்.


அதனையடுத்து சில நாட்களில் உலகத்தை அழிக்க பிரளயம் உருவாகி ஏழு கடல்கள் யாவும் ஒன்றாய் கலந்து உலகை மூழ்கடித்தது. பெருவெள்ளம், மழை, காற்று ஆகியவற்றால் அனைத்து ஜீவராசிகள், மலைகள் முதலான அனைத்தும் மூழ்கி உலகமே அழிந்தது.அப்போது சிவபெருமான் அருளியபடி தென்திசை நோக்கி அமுதம் நிரம்பிய குடம்(கலசம்) சுழன்று, சுழன்று மிதந்து வந்து திருக்கலயநல்லூர் எனும் இடத்தில் வந்தது. அப்போது அதன் மேல் இருந்த மாவிலை,தருப்பை திருக்கலசநல்லூர் தலத்தில் விழுந்து சிவலிங்கமாகின.மீண்டும்  வடமேற்கு திசையில் சென்று ஓர் இடத்தில் அந்த குடம்  தங்கியவுடன் ஊழி வெள்ளம் வடிந்தது. பிரம்மனும்,தேவர்களும் அதனைப்பின்தொடர்ந்து வந்தனர்.




அப்போது சிவபெருமான் கிராதமூர்த்தியாக (வேடரூபத்தில்) எழுந்தருளி சற்று தொலைவிலிருந்து அம்பு எய்தி அந்த அமிர்த குடத்தை உடைத்தார். அப்போது மாயகுடம் இரண்டாக உடைந்து  வைக்கப்பட்டிருந்த அமிர்தம் ஆறாய்ப் பெருகி எண் திசையிலும் பெருகிச்சென்றது. அதே போல்  தேங்காய், வில்வம், உறி உள்ளிட்ட அனைத்தும் சிதறி விழுந்தன.இறைவன் அருளால் அமுத குடத்தில் இருந்த அமுதம் ஆறாய் பெருகி நான்கு திக்கிலும், எட்டு கோணமும் ஐந்து குரோச தூரத்திற்கு சென்றது. கலசத்திலிருந்து .கும்பத்தின் வாயில் விழுந்த இடம் குடவாயில்( குடவாசல் என்று அழைக்கப்படுகிறது). இந்த அரிய நிகழ்ச்சி நடைபெற்ற திருத்தலம் கும்பகோணம் என்கிறது தலபுராணம்.


அமுத கும்பம் தங்கிய இடம் கும்பேசம் என்றும், அதில் சார்த்தப்பட்ட வில்வம் ஒதுங்கிய இடம் நாகேசம், உறி சிவலிங்கமாக மாறிய இடம் சோமேசம், குடத்தில் வைத்த தேங்காய் விழுந்த இடம் அபிமுகேசம், பெருமான் குடத்தை வில்லால் சிதைத்த இடம் பாணபுரேசம், கும்பத்திற்கு அணிவித்த பூணூல் சிதறிய இடம் கௌதமேசம் என்னும் சிறப்புப்பெற்ற திருக்கோயில்கள் ஆகின.அத்தகைய சிறப்புடைய இந்நகரில் பிரம்ம தேவனால் தோற்றுவிக்கப்பட்ட மகாமக பெருவிழா உலகம் தோன்றியது முதல்  12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமகபெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.வடக்கே அலகாபாத், ரிஷிகேஷ், ஹரித்வார், உஜ்ஜயினி, நாசிக் போன்ற ஊர்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாகும்பமேளா நடைபெற்று வருகிறது. ஆனால் தெற்கே  தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமக பெருவிழா கும்பகோணத்தில்  நடைபெறுகிறது.




இப்பெருவிழா ஜீவநதிகளின் பாவங்களையும், முப்பத்துமுக்கோடி தேவர்களின் பாவங்களை போக்கி புண்ணியம் தருவதாகும். இங்கு மகாமக தீர்த்தவாரியின்போது கங்கை,யமுனை,நர்மதா, சரஸ்வதி, காவேரி, கோதாவரி, துங்கபத்ரா, கிருஷ்ணா, சரயு ஆகிய 9 புண்ணிய நதிகள் சங்கமாகி நீராட வருவதாலும், இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன்,வாயு, குபேரன், ஈசானன் ஆகிய அஷ்ட திக்கு பாலகர்களும், பிரம்மதேவனால் ஏற்படுத்தப்பட்ட பிரம்ம தீர்த்தம், நாக, தீர்த்தம் ஆகிய புண்ணிய தீர்த்தங்களில்  இங்கு புனித நீராடவருவதாக ஐதீகம் என்பதால் இந்த மகாமக திருக்குளம் புனிதத்தன்மை வாய்ந்ததாக போற்றப்படுகிறது.


இத்தகைய சிறப்பு பெற்ற மாசி மக விழாவினை முன்னிட்டு,கும்பகோணத்தில் உள்ள 6 சிவாலயங்களில் மாசிமக திருவிழா நேற்று கொடியேற்றத்துடன்  தொடங்கியது.கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர், காசி விஸ்வநாதர், காளஹஸ்தீஸ்வரர், அபிமுகேஸ்வரர், வியாழசோமேஸ்வரர், கவுதமேஸ்வரர் ஆகிய 6 சிவன் கோயில்களில் மாசிமக பெருந்திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.இதையொட்டி கோயில்களில் விழா பந்தல் அமைக்கப்பட்டு, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. 6 ந்தேதி இரவு பூர்வாங்க பூஜைகள் நடத்தப்பட்டு நேற்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டது.


 பின்னர் அனைத்து சுவாமி- அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்றது. பஞ்சமூர்த்தி சுவாமிகள் சிறப்பு மலர் அலங்காரத்தில் கொடி மரம் முன் எழுந்தருளினர். அப்போது வேத பாராயணம், திருமுறைகள், சிறப்பு நாதஸ்வரம் முழங்க விழா கொடியேற்றினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.மாசி மகத் திருவிழாவின் முதன்மையான கோயிலாக கருதப்படும் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் கொடியேற்றத்தின் போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து இரவு அதிகும்பேஸ்வரர் கோயிலில் 10 நாதஸ்வர, மேள கலைஞர்களின் இன்னிசை முழக்கத்துடன் பஞ்சமூர்த்தி சுவாமிகள் இந்திர விமானத்தில் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.




விழாவின் சிறப்பம்சமாக வரும் 11-ம் தேதி கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலிலிருந்து 63 நாயன்மார்கள் வீதியுலாவும்,12-ம் தேதி ஓலைச்சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும். 15-ம் தேதி  காலை தேரோட்டம் நடைபெறவுள்ளது.16-ம் தேதி மாலை அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர், காசி விஸ்வநாதர், வியாழ சோமேஸ்வரர் ஆகிய 4 கோயில்களில் தேரோட்டம் நடைபெறுகிறது.விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் பிப்.17-ம் தேதி மகாமகம் குளத்தில் மதியம் 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் மாசிமக தீர்த்தவாரி வைபவம் நடைபெறுகிறது. அப்போது குளத்தின் நான்கு கரைகளிலும் பக்தர்கள் புனித நீராட உள்ளனர். அந்த நேரத்தில் 12 சிவாலயங்களில் இருந்து பஞ்சமூர்த்தி சுவாமிகள் வீதியுலாவாக புறப்பட்டு  மகாமக குளத்தின் கரைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தவாரி அருளுகின்றனர்.


இந்நிலையில், கொடிமரத்தில் காடா துணியால் ஏற்றப்பட்ட கொடியை, சிவாச்சாரியார்கள், முறுக்கி மேலே ஏற்றி கொண்டு இருந்தனர்.அப்போது துணியால் ஏற்றப்பட்ட கொடி, கொடிமரத்தின் உச்சிக்கு செல்லும் போது, திடிரென இரண்டாக கிழிந்து தொங்கியது. இதனையறியாத சிவாச்சாரியார்கள், கொடியை ஏற்றினர்.  வருடந்தோறும்  உலக புகழ்பெற்ற மாசி மக விழாவின் போது, கொடி ஏற்றுவதற்காக தரமான காடா துணியை புதியதாக வாங்கி வந்து, அதில், ரிஷப வாகன ஒவியங்களை வரைந்து, பாதுகாப்பாகவும்,பத்திரமாக வைத்து ஏற்றுவார்கள். ஆனால் தற்போது வாங்கியுள்ள துணி தரமானதா என்பதையும், புதியதாக வாங்கப்பட்டதா என விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.