தஞ்சாவூர் மாநகராட்சி 51-வது வார்டில், திமுக சார்பில் மருத்துவர் அஞ்சுகம் பூபதி போட்டியிடுகிறார். முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் பூபதியின் மகளான இவர், ஏற்கெனவே 2016 சட்டப்பேரவைத் தேர்தலில், தஞ்சாவூரில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட அனுபவமும் உள்ளவர். தற்போது தஞ்சாவூர் திமுக மத்திய மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளராக இருக்கிறார்.
இவரது கணவர் வெற்றிக்குமார், திராவிடர் கழகத்தில் மாநில இளைஞரணி துணைச் செயலாளராக இருக்கிறார். இவர்களுக்கு ஏற்கெனவே மூன்றரை வயதில் கயல் என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான அஞ்சுகம் பூபதிக்கு, தஞ்சாவூர் மாநகராட்சி தேர்தலில் 51ஆவது வார்டில் போட்டியிட திமுக தலைமை வாய்ப்பு வழங்கியது. பிப்ரவரி 25 ஆம் தேதி, இவருக்கு குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போதிலும், ஓய்வெடுக்காமல் தினமும் காலை, மாலை என இரண்டு வேளையும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் பிப்ரவரி 12ஆம் தேதி காலை வழக்கம்போல் பிரச்சாரத்துக்கு கிளம்பிய, அஞ்சுகம் பூபதிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பிற்பகலுக்கு மேல் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இந்நிலையில், தஞ்சை மாநகராட்சிக்கான தேர்தலில் திமுக அதிக இடங்களை கைப்பற்றும் பட்சத்தில், அஞ்சுகம் பூபதியே மேயராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது தஞ்சை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதால் வெளியில் சென்று வாக்கு சேகரிக்க முடியாமல், தனது கட்சியினர், கணவர் வெற்றிசெல்வன் ஆகியோர் வாக்கு சேகரித்து வந்தனர்.
இதனால் தற்போது அஞ்சுகம் பூபதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 51 ஆவது வார்டு பகுதியில் தாயிக்காக மூன்று வயது மகள் கயல் தந்தையுடன் சேர்ந்து வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். செல்லும் இடங்களில் துண்டுபிரசுரம் வழங்கி கையெடுத்து குழந்தை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது அப்பகுதி பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. வாக்கு சேகரிப்பின் போது, குழந்த கயல், தனது அம்மாவுக்கு குழந்தை பிறந்துள்ளது, அதனால் வரமுடியவில்லை. எங்க அம்மாவுக்கு ஒட்டு போடுங்கள் என்று வாக்காளர்களிடம் குழந்தையாக கைகூப்பி, துண்டு பிரசுரங்களை வழங்கி கேட்டார். வாக்காளர்களும் குழந்தையை தனது தாயிக்காக வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டிருப்பதால், பெண்கள், கயலை உச்சிமுகர்ந்து, கண்டிப்பாக உங்க அம்மாவுக்கே ஒட்டு போடுகிறோம் என கயலின் கன்னத்தை பிடித்து முத்தம் கொடுத்து, வாழ்த்தினர். குழந்தை கயல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதால், அப்பகுதியில் கட்சியினர், பொது மக்களும் திரண்டு பார்வையிட்டனர்.