கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட கவுண்டம்பாளையம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக, அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் பரப்புரை மேற்கொண்டார். பின்னர் தேர்தல் பணிமனை அலுவலகத்தில் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கோவையின் பல்வேறு இடங்களில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த நபர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கின்றனர். இதனை தட்டிக்கேட்டால் பாஜகவினரை மிரட்டுகின்றனர். அவர்கள் மீது புகார் கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்கவில்லை. பணம் கொடுப்பதை தடுக்கும் போது கைகலப்பு ஏற்படும் சூழல் நிலவுகிறது.
நேற்று 70-வது வார்டில் பணம் பட்டுவாடா செய்பவர்களை பிடித்து ஒப்படைத்துள்ளோம். கடந்தமுறை சட்டமன்ற தேர்தலில் கோவையில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத திமுக, அதை கௌரவ பிரச்சினையாக எடுத்துக்கொண்டு இந்த முறை விதிகளை மீறி செயல்படுகின்றது. உடனடியாக கோவை மாவட்டத்தில் இருக்கும் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வெளியேற்றப்பட தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு தொழில் செய்யும் பலரை வெளியூர்கார்ர்கள் மிரட்டல் விடுக்கின்றனர். வெளியூர்காரர்களை மிரட்டினால் வாக்கு சீட்டின் வழியாக பதில் சொல்லப்படும்.
சிறுவாணி அணையின் முழு கொள்ளவு எட்டுவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. குடிநீர் பிரச்சினையை கூட சரி செய்ய முடியவில்லை. இதை பற்றி கண்டு கொள்ளாத திமுக அரசு மக்களிடம் பொய் வாக்குறுதி கொடுக்கின்றனர். பா.ஜ.க வேட்பாளர்கள் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். நாளை முழுவதும் மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கின்றார். கோவையில் இருக்கும் விலங்கியல் பூங்கா முழுமையாக செயல்பட மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், அது இடமாற்றம் செய்யப்படுகின்றது திமுகவினர் மிரட்டல், பணம் ஆகியவற்றில் மட்டுமே கவனமாக இருக்கின்றனர். மக்களின் தேவைகளின் மீது கவனம் செலுத்தாமல் கடைசி நேரத்தில் அதிகார பலத்தால் வாக்காளர்களை மிரட்டி வெற்றி பெற வேண்டும் என திமுகவினர் எண்ணுகின்றனர்.
கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நான் பிரச்சாரத்திற்கு செல்லவில்லை என்பது தவறு. தேசிய தலைவராக இருப்பதால் அனைத்து பகுதிகளுக்கும் செல்லவேண்டி இருப்பதால் ஒரு தொகுதியில் மட்டும் கவனம் செலுத்த முடியாது. நாளை கடைசி நாள் கோவை தெற்கு தொகுதியில் முழுமையாக பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறேன்” என அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை அறிய :ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்