தமிழ்நாட்டின் தென்கோடியில் அமைய பெற்றுள்ள, தூத்துக்குடி மாவட்டம் ஒரு துறைமுக நகரமாகும். இது தமிழகத்தின் 10ஆவது மாநகராட்சியாக (தூத்துக்குடி மாநகராட்சி), ஆகஸ்ட் 5, 2008-ல் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியினால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.




தூத்துக்குடி மாநகராட்சியில்  உள்ள 60 வார்டுகளிலும் 1,57,763 ஆண்கள், 1,64,570 பெண்கள், 55 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 3,22,388 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 319 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.  




தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர், மநீம, சுயேச்சை என 443 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தூத்துக்குடி மாநகராட்சி 20 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் கீதாஜீவனின் சகோதரர் ஜெகன் பெரியசாமி மேயராக தேர்வு செய்யப்படலாம் என கூறப்படுகிறது. 20 வது வார்டுக்கு உட்பட்ட போல்பேட்டை, செல்வநாயகபுரம், டி.எம்.சி காலனி, நந்தகோபாலபுரம் பகுதியில் 6300 வாக்காளர்கள் உள்ளனர். இன்றுடன் வாக்கு சேகரிப்பு நிறைவடைய உள்ள நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 20 வது வார்டு பகுதியில் வீதி வீதியாக சைக்கிளில் சென்று இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு உள்ளார் அமைச்சர் கீதாஜீவனின் சகோதரரும் மேயர் வேட்பாளருமான ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சியின் 60 வது வார்டுகளில் போட்டியிடும் கட்சி மற்றும் சுயேச்சைகள் தங்களது இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.




அதேபோல் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி. சண்முகநாதனின் மகன் எஸ்.பி.எஸ் ராஜா தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 59 வது வார்டில் முதல்முறையாக தனது தேர்தல் களத்தை சந்திக்கிறார். 59வார்டுக்கு உட்பட்ட எம்.தங்கம்மாள்புரம், சூசைநகர், சண்முகபுரம், அபிராமி நகர், ஸ்பிக், டாக், கனநீர் ஆலை குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பை மேற்கொண்டு வரும் இவர் அதிமுக சார்பில் மேயர் வேட்பாளராக இருக்கலாம் என கூறப்படுகிறது.இன்றுடன் வாக்கு சேகரிப்பு நிறைவடைய உள்ள நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 59வது வார்டு பகுதியில் வீதி வீதியாக சென்று அதிமுக சார்பில் மேயர் வேட்பாளராக கருதப்படும் எஸ்.பி.எஸ் ராஜாவும் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளார். 





தூத்துக்குடி மாநகராட்சி உள்ளாட்சியில் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை மழைநீர் வடிகால் மற்றும் பாதாள சாக்கடை திட்டம் ஆகியவற்றை முழுமையாக நிறைவேற்றாதது தான். பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படும் இந்த பணிகளால் ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின்போது தூத்துக்குடி மாநகராட்சி மழைநீரில் மிதக்கும் நிலை ஏற்படுகிறது. தற்போது அப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையிலும் கூடுதலாக தொடங்கப்பட்ட ஸ்மார்ட் சிட்டி பணிகளால் பாதாள சாக்கடை திட்டம் மீண்டும் மந்தமாக நடைபெறுகிறது. ஆகவே உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் தூத்துக்குடி மாநகராட்சியில் மழை வெள்ளம் தேங்காமலிருக்க நிரந்தர தீர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.




தூத்துக்குடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டாலும் மாநகராட்சிக்கு தேவையான அம்சங்கள் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை. அந்தவகையில், மாவட்டத்தில் நிகழும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை தீர்த்திடவும், குற்றசம்பவங்களில் விரைந்து விசாரணையை முடிக்கவும், நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சீர்செய்யவும், காவல் ஆணையரகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்படுகிறது


தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலை பொறுத்தவரை ஆளும் கட்சி என்ற அடிப்படையில் திமுக முன்னிலை வகித்து வந்தாலும் அதிக இடங்களை கைப்பற்றி மேயர் பதவியை கைப்பற்றுவோம் என அதீத நம்பிக்கையில் உள்ளனர்,இருமுறை மேயர் பதவியை கைப்பற்றியது போல் இப்போதும் ஹாட்ரிக் அடிப்போம் என்கின்றனர் அதிமுகவினர்.ஆனாலும் பொதுமக்களின் எதிர்பார்ப்பு இன்னும் சென்றடையவில்லை என தெரிகிறது, இதனை சரி செய்யும் வகையில் நாளை முதல் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.