தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 22-ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஒருவர் தேர்தல் வாக்குறுதிகளை பத்திரப்பதிவு செய்து ஜெராக்ஸ் எடுத்து விநியோகம் செய்து வருகிறார்.
தமிழ்நாட்டில் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதால் இந்த தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளும், அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதனை அடுத்து, சென்னை வடபழனி / கோடம்பாக்கம் வார்டு 131-ல் போட்டியிடும் பாஜக போட்டியாளர் கிருத்திகா நூதன முறையில் பிரச்சரம் செய்து வருகிறார்.
”பி.காம் படித்திருக்கும் நான் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறேன். என்னை வெற்றி பெறச் செய்தால் நேர்மையான முறையில் முழு நேரம் மக்கள் சேவை செய்வேன்” என்ற வாசகங்கள் அடங்கிய பிரச்சார அறிக்கையை மக்களுக்கு வழங்கி வருகிறார். மேலும், 10 ரூபாய் மதிப்பாலான பாண்டு பேப்பரில் தனது தேர்தல் வாக்குறுதிகளை குறிப்பிட்டுள்ளார். 16 குறிப்புகள் கொண்ட அந்த வாக்குறுதி பட்டியலை ஜெராக்ஸ் எடுத்து மக்களுக்கு வழங்கி வருகிறார். ஒவ்வொரு தேர்தலிலும் இப்படி புதுவிதமான தேர்தல் பிரச்சார யுக்தையை வேட்பாளர்கள் கையில் எடுத்து வருவது வழக்கமாகிவிட்டது. மக்களின் நம்பிக்கையை பெற வேட்பாளர் கிருத்திகா பாண்டு பேப்பர் மூலம் பிரச்சாரம் மேற்கொண்டிருக்கிறார்.
தேர்தல் நடத்தை விதிகளின்படி, அரசியல் கட்சிகளின் தேர்தல் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் ஏனைய பிரச்சாரங்கள் அனைத்தையும் வாக்குப்பதிவு முடிவுபெறும் நேரத்தில் இருந்து 48 மணி நேரத்திற்கு முன்பாக, அதாவது 17.2.2022 மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்