கடலூர் மாநகராட்சியில் ஆளுங்கட்சியினர் பணபட்டுவாடா  செய்வதாக குற்றம்சாட்டி மாநகராட்சி அலுவலகம் முன் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டம்

 

தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது, அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி, நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், விருந்தாசலம், வடலூர், திட்டக்குடி ஆகிய 6 நகராட்சிகள், அண்ணாமலைநகர், காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை குறிஞ்சிப்பாடி, புவனகிரி, கங்கை கொண்டான், பெண்ணாடம், ஸ்ரீஷ்ணம், சேத்தியாததோப்பு, லால்பேட்டை, மங்கலம்பேட்டை, தொரப்பாடி, மேல்பட்டாம்பாக்கம், கிள்ளை ஆகிய 14 பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் கடலூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளிலும் போட்டியிட திமுக, அதிமுக, விசிக, அமமுக, மக்கள் நீதி மையம் என பல்வேறு கட்சிகளும் கடந்த 28 ஆம் தேதி முதல் கடைசி நாள் வரை பல்வேறு கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் ஆர்வமாக வேட்புமனு தாக்கல் செய்தனர். தற்பொழுது கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகளில் 286 பேர் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். இதற்கான இறுதி கட்ட பிரச்சாரம் நேற்றுடன் பிரச்சாரம் முடிவடைந்தது.

 



 

 

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று திடீரென கடலூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்த நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் சாமி ரவி மற்றும் கட்சியை சார்ந்த உறுப்பினர்கள் 20 பேர் கடலூர் மாநகராட்சி அலுவலகம் வாசலில் அமர்ந்து மாநகராட்சியின் தேர்தல் அதிகாரிகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர், பின்னர் ஆளுங்கட்சியை சேர்ந்த நபர்கள் அவர்களது வார்டுகளில் சுதந்திரமாக பண பட்டுவாடா செய்து வருகின்றனர் என குற்றம் சாட்டி தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் புதுநகர் காவல் ஆய்வாளர் போராட்டம் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

 



 

ஆனால், அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் தேர்தல் அதிகாரிகள் வந்து பேச்சு வார்த்தை நடத்தி தாங்கள் வைத்த குற்றச்சாட்டிற்கு உரிய நடவடிக்கை எடுத்தால் தான் போராட்டத்தை கை விடுவோம் என கூறினார், இந்த நிலையில் சம்பவ இடத்திர்க்கு வந்த கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் பேச்சு வார்த்தையில் அப்பொழுது, பண பட்டுவாடா குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் முறையாக புகார் அளிக்குமாறு கேட்டுக்கொண்டார், மேலும் முறையாக புகார் அளித்ததும் அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதன் பின்னர் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து களைந்து சென்றனர். நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று மாநகராட்சி அலுவலகம் முற்றுகை இடபட்ட சம்பவம் பரபப்பை ஏற்படுத்தி உள்ளது.