சேலம் மாவட்டம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர், நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கோவை மாநகர பகுதியில் கரூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ரவுடிகள் வரவழைக்கப்பட்டு கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டு வன்முறையை ஏற்படுத்த திமுகவினர் முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.


கடந்த சிலநாட்களாகவே ரவுடிகள், குண்டர்கள் கோவை மாநகரில் சுற்றித்திரிவதாக அதிமுக புகார் அளித்தனர், குறிப்பாக,


"முன்னாள் அமைச்சர் வேலுமணி நேரடியாக கோவை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையாளர் ஆகியோரிடம் புகார் அளிக்கப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறிய அவர், ரவுடிகள் குண்டர்களுக்கு ஆதரவாக கோவை மாநகர காவல்துறை செயல்படுவதாகவும் காவல்துறையின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது" என்றும் தெரிவித்தார்.



தேர்தல் அமைதியான முறையில் நடக்க வேண்டுமெனில் கோவையில் தங்கியிருக்க கூடிய ரவுடிகள் குண்டர்கள் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என்றும் 


கோவையில் தேர்தல் பணியில் ஈடுபட்டவர்கள் மீது பொய்வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் காவல்துறை துணையோடு ஹாட்பாக்ஸ் வழங்கப்பட்டு வருகிறது.


இதுதொடர்பாக புகார் அளித்தும் கண்டுகொள்ளவில்லை


அரசும், தேர்தல் ஆணையமும் தலையிட்டு கோவையில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை அதிமுகவின் கோட்டை ; சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றதை பொறுத்துக்கொள்ள முடியாமல் திமுக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு தேர்தல் பரப்புரையில் பேசிய உதயநிதி ஸ்டாலின் வேலுமணிக்கு சாவுமணி அடிப்போம் என நாகரீகமின்றி பகிரங்கமாக பேசி இருப்பதாக சுட்டிக்காடிய அவர், வாய் இருக்கிறது என்பதற்காக பேசினால் எங்களுக்கும் பேசத்தெரியும் என்றும் எச்சரித்தார். அதிகார போதையில் அநாகரீகமாக பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் அவர் தெரிவித்தார். 


ஜனநாயக முறைப்படி மக்களை சந்திக்க திமுகவிற்கு தைரியம் இல்லை என்று விமர்சித்த எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையம் திமுகவின் கைப்பாவையாகயும்; காவல்துறை ஏவல்துறையாக செயல்பட்டு வருகிறது என்றும் குற்றம்சாட்டினார்.


கோவை மட்டுமின்றி பல மாவட்டங்களில் இதுபோலதான் நடக்கிறது. ஜனநாயக முறைப்படி தேர்தலை சந்தித்து வெற்றிபெற வேண்டும்; தில்லுமுல்லு செய்தி தேர்தலில் வெற்றிபெறலாம் என திமுகவினர் நினைப்பதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்றார்.


மேற்கு வங்கத்தை போல் சட்டமன்றத்தை முடக்குவோம் என்று கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி மேற்கு வங்கத்தை போல சட்டமன்றத்தை முடக்குவோம் என நான் சொல்லவில்லை; பத்திரிகையில் வந்த செய்தியைதான் கூறினேன்; தவறான வழியில் ஒரு அரசாங்கம் செல்லும் போது பிற அரசுகளோடு ஒப்பிட்டு பேசுவது வழக்கம் என்று விளக்கம் அளித்தார். முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.