நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் நெல்லை டவுண் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசுகையில், அதிமுகவை தொடங்குவதற்கு அச்சாணியாக, அஸ்திவாரமாக திருநெல்வேலி மாவட்டத்தில் தான் எம்ஜிஆர் தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்று தாமரை கொடியை ஏற்றிய வரலாறு திருநெல்வேலி மாவட்டத்திற்கும் அதிமுகவிற்கும் உண்டு. எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் 16 ஆண்டுகளாக முதல்வராக கட்சியின் தலைவராக இருந்த ஜெயலலிதா பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை கொண்டு வந்தார். 2011, 2016 சட்டமன்ற தேர்தலில் சொன்ன வாக்குறுதிகளை நூற்று நூறு  நிறைவேற்றிய ஒரே தலைவர் ஒரே முதலமைச்சர் ஜெயலலிதா தான். ஏழைகளுக்கு ஐந்தரை லட்சம் கான்கீரீட் வீடுகள் கட்டி கொடுத்தார்.




பத்து ஆண்டு காலம் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நல்லாட்சி நடைபெற்றது. 2021லும் அதிமுக ஆட்சி தான் அமையும் சூழல் நமக்கு ஏற்பட்டது. ஆனால் எப்பவும் போல திமுக அளித்த பொய்யான வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்தார்கள். நான் முதல்வரானால் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என்று ஸ்டாலின் சொன்னார். நீட் தேர்வு ரத்து செய் வேண்டும் என்றால் சட்டமன்றத்தில் மசோதோ கொண்டு வந்து அங்கீகரிக்கப்பட்டு ஜனாதிபதி கையெழுத்து போட வேண்டும். முதல்வர் கையெழுத்து போட்டால் எப்படி நீட் ரத்து செய்ய முடியும்? 10 மாதம் ஆகிறது ஆனால் நடக்கவில்லை.


தாய்மார்களுக்கு வங்கி கணக்கில் மாதந்தோறும் ஆயிரம் ருபாய் என்று சொன்னார். பத்து மாதம் ஆகிவிட்டது, இன்னும் கொடுக்கவில்லை. மாணவர்களின் கல்விக் கடன் ரத்து என சொன்னார்கள் ரத்து செய்யவில்லை. ஐந்து பவுண் நகை தள்ளுபடி என்ற வாக்குறுதியை நம்பி பாவம் மக்கள் குழந்தைகள் கழுத்தில் காதில் கிடந்ததை கழட்டி அடகு வைத்தார்கள். 50 லட்சம் பேர் அடகு வைத்தார்கள், தேர்தலுக்கு பிறகு தகுதியுள்ளவர்களுக்கு மட்டும் தான் தள்ளுபடி என்று சொல்கிறார்கள். 13 லட்சம் பேர் தான் தகுதியுடையவர்கள் என்று கணக்கெடுத்துள்ளனர். எனவே 37 லட்சம் பேர் கடனாளியாக உள்ளனர், இவர்களை கடனாளியாக ஆக்கிய பொறுப்பு திமுக என்ற அவல ஆட்சியை சாரும்,.




இந்த ஆட்சியில் எந்த திட்டமும் வரவில்லை. என்ன செய்ய வேண்டும் என்ற நிர்வாக குழப்பத்தில் உள்ளனர். எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் ஒரு அவல ஆட்சி தான் நடைபெறும்.  7 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் தரமான பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. அது தான் நல்ல ஆட்சிக்கு அடையாளம், இப்போது திமுக கொடுத்துள்ள பொங்கல் தொகுப்பை சாப்பிடவே முடியாது. தரமற்ற பொருட்களை மக்களுக்கு விநியோகித்த அவல ஆட்சி தான் திமுக. இந்த பொருட்களை மாட்டுக்கு வைத்தால் மாடே முறைக்கிறது திமுகவின் அவல ஆட்சியை பார்த்து. இந்த தேர்தலை பொறுத்தவரை யார் ஆட்சி நல்ல ஆட்சி என்று எடை போட்டு பார்க்கும் காலமாக இந்த தேர்தல் இருக்கிறது. பெண்களுக்கு ஜெயலலிதா தான் 50% இட ஒதுக்கீடு கொடுத்தார். இந்த தேர்தலை பொறுத்தவரை தொண்டர்கள் நிற்க கூடிய தேர்தல், அவர்களை வெற்றி அடைய செய்ய வேண்டிய கடமை அனைவருக்கும் இருக்கிறது, எனக்கு பிறகும் பல நூறாண்டுகள் கழகம் தான் ஆட்சி அமையும் என ஜெயலலிதா சொன்னார், அவர்களின் கனவு நினைவாக நல்ல வாய்ப்பாக இந்த தேர்தல் அமைந்துள்ளது. மக்களை ஏமாற்றி மக்கள் விரோத அரசு நடைபெற்று கொண்டிருக்கிறது. எனவே வரும் தேர்தலில் ஒரு நல்ல தீர்ப்பு கிடைக்கும் உறுதியாக அனைவரும் 100/100 வெற்றி பெறுவார்கள் என்ற சாதகமான நிலை உருவாகியுள்ளது” என்று பேசினார்.


கூட்டத்துக்கு பிறகு மம்தா பானர்ஜி தலைமையிலான எதிர்க்கட்சிகள் மாநாட்டிற்கு ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது குறித்து கேட்டபோது, முதலில் 10 மாதங்களுக்கு முன்பு ஆட்சிக்கு வந்த ஸ்டாலின் தமிழக மக்களுக்கு சொன்னதை செய்து விட்டு அதன் பிறகு அகில இந்திய அரசியல் கால் பதிக்கட்டும் என்றார், தொடர்ந்து சட்டமன்றத்தை முடக்கினாலும் 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியது குறித்து கேட்டபோது பாவம் அது அவரது ஆசையாக இருக்கட்டும் என்று தெரிவித்தார்.