தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது, அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி, நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், விருந்தாசலம், வடலூர், திட்டக்குடி ஆகிய 6 நகராட்சிகள், அண்ணாமலைநகர், காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை குறிஞ்சிப்பாடி, புவனகிரி, கங்கை கொண்டான், பெண்ணாடம், ஸ்ரீஷ்ணம், சேத்தியாததோப்பு, லால்பேட்டை, மங்கலம்பேட்டை, தொரப்பாடி, மேல்பட்டாம்பாக்கம், கிள்ளை ஆகிய 14 பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அனைத்து கட்சியினரும் கூட்டணி கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வேட்பாளர் பட்டியல்களை அறிவித்த வண்ணம் உள்ளனர். அதே போல் திமுக சார்பிலும் இது வரை நான்கு பாகங்களாக திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

 



 

இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடலூர் நகராட்சி தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு மாநகராட்சி முதல் தேர்தல் நடைபெறுகிறது இந்த நிலையில் திமுக,அதிமுக இடையே முதல் மேயர் வேட்பாளர் யார் என்ற கேள்வியும் விவதாமும் என கடும் போட்டி நிலவுகிறது, மேலும் இதே போல் திட்டக்குடி, வடலூர் புதிதாக நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது.

 



 

இந்த நிலையில் கடந்த இருபத்தி எட்டாம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கப்பட்டு நேற்றுவரை வேட்புமனு தாக்கல் மாவட்டத்தின் மாநகராட்சி மற்றும் அனைத்து நகராட்சி, பேரூராட்சிகளில் பரபரப்பாக நடைபெற்று வந்தது, இந்த நிலையில் கடைசி நாளான நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் குவிந்தனர், இதில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகத்திற்கு வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்களுடன் குறைந்த அளவு நபர்களே வர வேண்டும் எனவும், வேட்பு மனு தாக்கல் செய்யும் அறைக்குள் வேட்பாளர் மட்டுமே செல்ல வேண்டும் என காவல்துறையினர் பலமுறை எச்சரித்தும் காவல்துறையினர் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.



 

வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளான நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 1305 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர், மேலும் கடலூர் மாநகராட்சியில் நேற்று ஒரே நாளில் 151 பேரும்,  6 நகராட்சிகளில் நேற்று ஒரே நாளில் மொத்தம் 614 பேரும், பேரூராட்சிகளில் மொத்தம் 540 பேரும் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர். மேலும் இதுவரை மொத்தமாக மாநகராட்சியில் 351 நபர்களும், 6 நகராட்சிகளில் 1090 நபர்களும், பேரூராட்சிகளில் 1114 நபர்களும் என மாவட்டம் முழுவதும் 2556 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.