தஞ்சை  மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஆவணம் பெரியநாயகிபுரம் ஊராட்சியில், பொதுமக்கள் பயன்பாட்டிற்கான நவீன இசிஜி மையம்  தொடங்கி வைக்கப்பட்டது.  இம்மையத்தை, பேராவூரணி வட்டார மருத்துவ அலுவலர் வி.சௌந்தர்ராஜன் தொடங்கி வைத்தார். பெரியநாயகிபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் வத்சலா முத்துராமன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அன்சத் நிஷா அபுபக்கர் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில்,  கிராம சுகாதார செவிலியர் மரகதம், ஆவணம் ரியாஸ், பொறியாளர் பன்னீர் செல்வம், கணேசன், அடைக்கலம், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கணேசன், தையல்நாயகி, மீனாட்சி, ஊராட்சி செயலாளர் சங்கீதா உள்ளிட்ட ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் தொடக்க நாளன்று நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் பரிசோதனை செய்து பயனடைந்தனர். மேலும்  ரத்த அழுத்தப் பரிசோதனை, சர்க்கரை அளவு பரிசோதனையும் இலவசமாக செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவர் வத்சலா முத்துராமன் கூறுகையில், ஊராட்சி மன்ற அலுவலகத்தின் ஒரு பகுதியில், கிராம தன்னார்வலர்கள் மூலம் ரூ. 60 ஆயிரம் நிதி திரட்டப்பட்டு, இசிஜி இயந்திரம், ரத்த சர்க்கரை அளவு பரிசோதனை செய்யும் இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது.  தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தலின்படி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ரமேஷ் குமார் ஆலோசனையின்படி, செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் தினசரி வந்து மருத்துவ பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம் எங்கள் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களின் நலனில் அக்கறை செலுத்துகிறோம். முன்கூட்டியே பரிசோதனை செய்வதன் மூலம் மாரடைப்பு, சர்க்கரை நோய் தாக்கம் கட்டுப்படுத்தப்படும்.   




தற்போது சில காலமாக இளம் வயதுடைய இளைஞர்களின் நிலைமை மிகவும் கேள்வி குறியாகி வருகிறது. உணவுகள் மற்றும் பழக்க வழக்கங்களால் அவர்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுவதால், அவர்கள் மன நிலை மாறி விடுகிறது. இது போன்ற இளைஞர்களுக்கு ஹார்ட் அட்டாக் போன்ற நோய்கள் வருவதால், உயிருக்கே ஆபத்து ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, இளைஞர்கள் மட்டுமில்லாமல் அனைவரும் உடல் நலத்துடன் சுகமாக வாழ வேண்டும் என்பதற்காக இசிஜி இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.



இதற்காக ஊராட்சி மன்ற பெண் உறுப்பினருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இசிஜி எடுத்துக்கொள்ளலாம். ஏதேனும் அவசர தேவையாக இருந்தால், 24 மணி நேரத்தில் எந்த நேரத்திலும் எடுத்து கொள்ளலாம்.  இப்பகுதியில் பெரும்பாலானோர் ஏழை, கூலி விவசாயிகளாக இருப்பதால், அவர்களுக்கு விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர். இனி வரும் நாட்களில் மாதந்தோறும் ஒவ்வொருவரும் இசிஜி எடுக்கப்படும். இதனால் வெளியில் எடுக்க சென்றால், ரூ. 250 ஆகும் அதனால் பொது மக்கள் சிரமம் ஏற்படக்கூடாது என்பதற்காக இலவசமாக அமைத்துள்ளோம் என்றார்.  ஊராட்சி மன்ற தலைவரின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.