கும்பகோணத்தில் தனது சொந்த ஆட்டோவை காக்கி சட்டையுடன் ஒட்டி வந்து, மேயர் பதவியை ஏற்றுக் கொண்டார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த க.சரவணன்


தமிழகத்திலேயே இரண்டு மாநகராட்சிகள் கொண்ட மாவட்டம் தஞ்சாவூர். தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கும்பகோணம் மாநகராட்சியில் முதன் முறையாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.


இதில் மொத்தமுள்ள 48 வார்டுகளில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 2, விடுதலை சிறுத்தைகள் கட்சி 1, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1, திமுக 38 வார்டுகளில் வெற்றி பெற்றனர். சுயேட்சையும், அதிமுகவினரும் தலா மூன்று இடங்களில் வெற்றி பெற்றனர். கும்பகோணம் மாநகராட்சியில் மேயர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு ஓதுக்கீடு செய்தது திமுக தலைமை. இதையடுத்து  காங்கிரஸ் கட்சியின் சார்பில் 17- வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆட்டோ ஓட்டுநரான க.சரவணன் (42) என்பவரை, மேயர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் தலைமை அறிவித்தது.




இதையடுத்து  காலை சரவணன் தனது சொந்த ஆட்டோவில், ஆட்டோ ஓட்டுநர் சீருடையான காக்கி சட்டை அணிந்தவாறு ஆட்டோ ஒட்டுனர்களுடன் கும்பகோணம் காவேரி நகரில் உள்ள மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலிருந்து 50-க்கும் மேற்பட்ட ஆட்டோவில் கட்சியினருடன் ஊர்வலமாக மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தார். அங்கு திமுக மற்றும் கூட்டணி கட்சியில் இருந்த காங்கிரஸ், சிபிஎம், விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி உறுப்பினர்கள், சுயேட்சை உறுப்பினர்கள் மூவரும் என 45 பேர் கலந்து கொண்டனர். அதிமுகவின் மூன்று உறுப்பினர்களும் மேயர் தேர்தலுக்கான கூட்டத்துக்கு வரவில்லை.




இதையடுத்து ஆணையர் செந்தில்முருகனிடம் மேயர் வேட்பாளரான சரவணன் தனது வேட்புமனுவை வழங்கினார். வேறு யாரும் மேயர் பதவிக்கு போட்டியிடாததால், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக ஆணையர் அறிவித்தார். பின்னர் மேயருக்கான இருக்கையில் அமரவைத்து, அவருக்கு வெள்ளியால் ஆன செங்கோலை வழங்கி  ஆணையர் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் மேயர் சரவணன் தலைமையில் முதல் மாமன்றக்கூட்டம் நடைபெற்றது. இதில் அனைவருக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. கூட்டம் முடிந்ததும் வெளியே வந்த மேயர் சரவணனை, திமுக மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் லோகநாதன்,  எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் மற்றும் ஏராளமான திமுகவினர், காங்கிரஸ் கட்சியினர் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.




பின்னர் நிருபர்களிடம் சரவணன் கூறுகையில்  கும்பகோணம் மாநகர மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில், சிறப்பாக செயல்பட மாமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு வழிநடத்துவேன். அனைத்து வார்டுகளிலுள்ள குறைகளை உடனடியாக தீர்த்து வைப்பேன் என்றார். கும்பகோணம் மாநகராட்சியின் துணை மேயருக்கு யாரும் போட்டியிடாததால், வேட்புமனு தாக்கல் செய்த திமுகவைச் சேர்ந்த சு.ப.தமிழழகன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அவரு துணை மேயருக்கான இருக்கையில் அமர வைக்கப்பட்டார். அப்போது அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வாழ்த்து தெரித்து பரிசு வழங்கினார். அதே போல் மேயருக்கும் அமைச்சர் வாழ்த்து தெரிவித்து பரிசு வழங்கினார்.