இளம் வாக்காளர்களை மட்டுமே பார்த்து வந்த நமக்கு இம்முறை நிறைய இளம் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். குறிப்பாக, 20 வயதை தொடாத வேட்பாளர்கள், பலர் இம்முறை உள்ளாட்சியில் களமிறங்கியுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகராட்சியில் மொத்தம் 24 வார்டுகள் உள்ளன. இதில் 29,383 வாக்காளர்கள் உள்ளனர், பிப்ரவரி 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இறுதி நாளான இன்று வேட்புமனுத்தாக்கல் சூடுபிடித்தது. அனைத்து கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் ஆர்வத்துடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தனர். தனித்து போட்டியிடும் தேமுதிக சார்பில், கொடைக்கானலில் இன்று வேட்பாளர்கள் இறுதிநாளில் மனுத்தாக்கல் செய்தனர்.
அதில் 7 வது வார்டுக்கான வேட்பாளராக தேமுதிக சார்பில் 19 வயதான ஜீவஸ்ரீ மனுத்தாக்கல் செய்தார். 620 வாக்குகள் கொண்ட அந்த வார்டில் முக்கிய கட்சிகள் பலரும் போட்டியிடும் நிலையில், தேமுதிக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள ஜீவஸ்ரீ, கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சில நாட்களுக்கு முன்பு தான் வாக்காளர் அட்டை பெற்ற அவர், தற்போது தேர்தலில் களம் காண்கிறார். அதுமட்டுமல்லாமல், உள்ளாட்சியில் தனக்கான முதல் ஓட்டை, தனக்கு பதிவு செய்ய உள்ளார்.
தேமுதிக வேட்பாளர்களுடன் சென்று மனுத்தாக்கல் செய்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
‛‛தேர்தலில் வெற்றி பெறுவேன் என்கிற நம்பிக்கை உள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றால் அரசு திட்டங்களை மக்களுக்கு எடுத்து செல்வதற்கு தயாராக உள்ளேன். மக்களுக்கு சேவை ஆற்றுவதற்கு இளைஞர்கள் முன் வர வேண்டும். நான் அதற்காக தான் அரசியலுக்கு வந்துள்ளேன். மக்களின் ஆதரவுடன் வெற்றி பெறுவேன்,’’ என்றார்.
கல்லூரி மாணவி களமிறங்கியிருக்கும் நிலையில், அவருக்கு ஆதரவாக சில மாணவர்கள் களமிறங்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே போல் மாணவியின் துணிச்சலான முயற்சிக்கு பலரும் தங்களின் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
இதோ மாணவியின் வேட்புமனுத்தாக்கல் மற்றும் அவரது பேட்டி வீடியோவாக...!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்