தேர்தல் வந்தாலே.... சுவாரஸ்யங்களுக்கு பஞ்சம் இருக்காது. சில நேரம் சுவாரஸ்யம் தானா உருவாகும். பல நேரம் சுவாரஸ்யம், உருவாக்கப்படும். இப்போது நாம் பார்க்கப் போவதும், சுவாரஸ்யம் உருவாக்கப்பட்ட செய்தி தான். வேட்பு மனுத்தாக்கல் கடைசி நாளான இன்று, வேட்பு மனுத்தாக்கல் செய்ய பலரும் ஆர்வம் காட்டினார். இன்னும் சொல்லப் போனால், இறுதி நாளில் தான் அதிகம் பேர் மனுத்தாக்கல் செய்தனர்.
திருச்சி மாநகராட்சியில் 49 வது வார்டு அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மகாலட்சுமி மலையப்பன், தனது ஆதரவாளர்கள் மற்றும் கட்சியினருடன் வேட்புமனுத்தாக்கல் செய்ய வருகை தந்தார். உற்சாகமாக திரண்டு வந்த அதிமுகவினர், பட்டாசுகளை வெடித்து அவருடன் ஊர்வலமாக வந்தனர். இதைத் தொடர்ந்து அவர்களிடம் எல்லாம் வாழ்த்துக்களை பெற்ற வேட்பாளர் மகாலட்சுமி, உள்ளே சென்று மனுத்தாக்கல் செய்தார். பின்னர் தொண்டர்களிடம் வந்து மீண்டும் வாழ்த்துக்களை பெற்றார்.
சரி அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், பிரச்சாரத்திலேயே எனது கவுன்சிலர் பணியை தொடங்கப் போகிறேன் என்று கூறி, ஏற்கனவே தயார் நிலையில் இருந்த துடைப்பத்தை எடுத்து சாலையை பெருக்கத் தொடங்கினார். அவர் பெருக்கியது எதுவும் இல்லை... அவரை வரவேற்க வெடிக்கப்பட்ட பட்டாசுகளின் குப்பை தான்.
சாலையில் வெடித்து சிதறிக்கிடந்த குப்பைகளை, உடனே சுத்தம் செய்யத் தொடங்கிய மகாலட்சுமி, அந்த குப்பையை போட்டதே நாம் தான் என்பதை மறந்து, போட்டோவுக்கும், வீடியோவுக்கும் போஃஸ் கொடுத்தார். அவர் மட்டுமல்லாமல், அவருடன் வந்தவர்களும், ஏன்... பட்டாசு வெடித்தவர்களும் உடன் நின்று போஃஸ் கொடுத்தனர். அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் நடந்த இந்த கூத்தை, அனைவருமே பார்த்து, கடந்து சென்றனர்.
குப்பை போட்டதை குறை சொல்றதா... அதை பெருக்கி சுத்தம் செய்ய முயற்சிப்பதை பாராட்டுறதான்னு தெரியலேயே... என் திகைத்துப் போனவர்கள் இருக்கத்தான் செய்தார்கள். எஞ்சியிருக்கும் பிரச்சார நாட்கள் எப்படி போகுமோ?
இதை விட பெரிய கொடுமை இருந்தது.... குப்பையே இல்லாத ரோட்டையும் அவர் பெருக்கினார். இதோ அந்த வீடியோ...
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்