கரூர் மாவட்ட பஞ்சாயத்து  துணை தலைவர் தேர்தல் ஐந்தாவது முறையாக சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி ஒத்திவைக்கப்பட்டது. கரூர் மாவட்ட பஞ்சாயத்து தலைவராக அதிமுகவை சேர்ந்த கண்ணதாசன் உள்ளார். துணை தலைவராக 8வது வார்டு அதிமுக கவுன்சிலர் தானேஷ், முத்துக்குமார், இருந்தார் அவர் பதவியை ராஜினாமா செய்தார். 




 


8வது வார்டு இடைத்தேர்தலில் திமுகவைச் சேர்ந்த கண்ணையன் வெற்றி பெற்றார். இதனால் 12   வார்டு கொண்ட மாவட்ட பஞ்சாயத்தில் திமுகவின் பலம் நான்காக உயர்ந்தது. பின்னர் அதிமுக 2 கவுன்சிலர்கள் தங்கள் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். இதனால் திமுக, அதிமுக தலா 6 கவுன்சிலர்கள் வீதம் சம பலம் பெற்றது. இதைத் தொடர்ந்து துணை தலைவர் பதவிக்கு( 22.10. 2021)அன்று தேர்தல் அறிவிக்கப்பட்டது.  பின்னர் அதைத் தேர்தல் அலுவலர் ஒத்தி வைத்தார். அதன் பின்னர் மூன்று முறை துணைத்தலைவர் தேர்தல் அறிவிப்பு வெளியானது. ஆனால் போதுமான கவுன்சிலர்கள் வராததால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
 


தேர்தல் அதிகாரியான கலெக்டர் பிரபுசங்கர் 8ம் தேதி தேர்தல் நடக்கும் அன்று கூட்டத்திற்கு வரும் கவுன்சிலர்களை மட்டும் கொண்டு தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தார். இதனிடையே அதிமுக கவுன்சிலர்கள் 6 பேரும் கடத்தப்பட்டதாக போலீசாருக்கு புகார் கிடைத்தது. ஆனால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட அனைத்து கவுன்சிலர்களையும் அதிமுக மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கர் கலெக்டர் மற்றும் ஏடிஎஸ்பி ஆகியோர் முன்பு நேற்று முன்தினம் இரவு நேரில் ஆஜர் படுத்தினார். 


அவர்கள் தங்களை யாரும் கடத்தவில்லை என்று எழுத்துப்பூர்வமாக தெரிவித்தனர். ஏற்கனவே அறிவித்தபடி 8ம் தேதி மதியம் 2:30 மணிக்கு கரூர் கலெக்டர் அலுவலகக் கூடுதல் கட்டிடத்தில் உள்ள கூட்ட அரங்கில் தேர்தலை நடத்தும் ஏற்பாடுகளை மாவட்ட பஞ்சாயத்து அலுவலக செயலாளர் குருவம்மாள் செய்திருந்தார். தேர்தல் அலுவலர் பிரபு சங்கர் தலைமையில் தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. 


 




தேர்தல் தொடங்குவதற்கு 10 நிமிடம் முன் மறைமுக தேர்தல் நடவடிக்கைகள் கரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டரின் கடிதம் அடிப்படையில் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது என்ற அறிக்கையின் அறையின் வாசலில் ஒட்டப்பட்டது. சில நிமிடங்கள் கழித்து அதிமுக மாவட்ட கவுன்சிலர்கள் திருவிக, கண்ணதாசன், வசந்தா, இந்திரா, ரமேஷ், சிவானந்தம் ஆகியோர் ஒரே காரில் கூட்ட அரங்கிற்கு வந்தனர். அங்கு பூட்டி இருக்கவே அரங்கின் வாயிலில் ஆறு பேரும் அமர்ந்து கொண்டு தேர்தல் ரத்துக்கான காரணம் தெரிய வேண்டும் என தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களிடம் மாவட்ட பஞ்சாயத்து செயலாளர் குருவம்மாள் கலெக்டரின் அறிவிப்பை அளித்தார். பின்னர் அனைவரும் வெளியேறினர். திமுக கவுன்சிலர்கள் தேர்தலில் பங்கு கொள்ள வரவில்லை.


 தேர்தல் குறித்து அதிமுக மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டியில், “எஸ்பியின் அறிக்கை அடிப்படையில் தேர்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். எஸ்பி-யின் அறிக்கையில் திமுகவும் அதிமுகவும் சம பலத்துடன் இருப்பதால் மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் பிரச்னை ஏற்படலாம். அதனால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை வரும் என்று தெரிவித்துள்ளார். சட்டம்-ஒழுங்கு சரி இல்லை என்று இந்த அரசே எஸ்பி மூலமாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்து தேர்தலை தள்ளி வைக்கின்றது. இந்த இடைவெளியில் ஒரு கவுன்சிலரையாவது திமுகவில் சேர்க்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.






இந்த நிலை நீடித்தால் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிடம் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம். தேர்தலை ஒத்திவைக்க காவல்துறையும் துணை போகிறது. அதிமுக கவுன்சிலர்கள் மீது வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார். யாரும் கட்சி மாற மாட்டார்கள். நியாயமாக தேர்தல் நடத்துங்கள், யார் வெற்றி பெற்றாலும் ஏற்கிறோம். தேர்தலை நடத்தாமல் தள்ளி வைப்பது எவ்வகையில் நியாயம்” என்றார். ஏடிஎஸ்பி கண்ணன், டிஎஸ்பி தேவராஜ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.