பாரதீய ஜனதா கட்சி தொண்டர்களின் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மே 4 ஆம் தேதி கர்நாடகாவின் உடுப்பிக்கு வருவார் என்றும், கிட்டத்தட்ட 10 நாட்கள் கர்நாடக மாநிலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபடுவர் என்றும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிரதமருடன் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


கர்நாடக சட்டமன்ற தேர்தல்


கர்நாடக சட்டமன்ற தேர்தல் மே மாதம் 10-ந் தேதி நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13-ந் தொடங்கி நடைபெற்று வருகிறது. மனு தாக்கல் செய்ய நாளை (வியாழக்கிழமை) கடைசி நாள் ஆகும். தற்போது மனு தாக்கல் நிறைவு பெற உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. மேலும் மனுதாக்கல் முடிந்து போட்டிகள் தெரிய வந்த பின் களம் மேலும் சூடுபிடிக்கும். இந்த நிலையில் பிரதமர் மோடி கிட்டத்தட்ட 10 நாட்கள் கர்நாடக தேர்தலுக்காக பிரச்சாரம் நடத்த உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.



மோடியின் 10 நாள் பிரச்சாரம்


பிரதமர் மோடி வருகிற மே 1-ந் தேதி முதல் தனது பிரசாரத்தை தொடங்குவார் என்று கூறப்படுகிறது. சுமார் 10 நாட்கள் இங்கு பிரசாரம் செய்யும் அவர், கிட்டத்தட்ட 30 பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு ஓட்டு சேகரிப்பார் என்று கூறப்படுகிறது. குறைந்தது 15-20 பேரணிகளில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது பிரசார பயண திட்டம் இதற்காக வகுக்கப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு குறைந்தது 3 பிரசார கூட்டங்களில் பங்கேற்க திட்டமிடப் பட்டுள்ளது. அதே போல் உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தும் 10-க்கும் மேற்பட்ட பிரசார கூட்டங்களில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 


தொடர்புடைய செய்திகள்: IPL Points Table: திக்..திக்..பெங்களூருவில் சென்னை செய்த சம்பவம்.. ஐ.பி.எல். புள்ளிப்பட்டியலின் நிலை என்ன?


யோகி ஆதித்யநாத்


"மே 10-ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்குப்பதிவுக்கு முன்னதாக கர்நாடகாவில் பிரதமர் மோடி 15-20 பேரணிகளை நடத்துவார் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று பாஜக தலைவர் ஒருவர் ஏஎன்ஐயிடம் தெரிவித்தார். கடலோர மாவட்டத்தில் இந்து வாக்கு வங்கியை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பா.ஜ. கட்சி யோகி ஆதித்யநாத்தை நம்பியுள்ளது. 2018 சட்டமன்றத் தேர்தலில், ஆதித்யநாத் தென் மாநிலத்தில் பிரச்சாரம் செய்தார். கடந்த ஆண்டு உத்தரபிரதேசத்தில் பிஜேபியை தொடர்ந்து இரண்டாவது வெற்றிக்கு இட்டுச் சென்ற பின், மாநிலத் தேர்தல்களில் பா.ஜ.க.வின் நட்சத்திர பிரச்சாரகர்களில் ஒருவராக மாறி உள்ளார். கர்நாடகாவில் மே 10-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 13-ம் தேதி நடைபெறுகிறது.



சூடு பிடிக்கும் களம்


ஏற்கனவே சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னரே, மோடி 7 முறை கர்நாடகத்திற்கு வருகை தந்து பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு ஒருமுறை வந்த மோடி, பந்திப்பூர் வனத்திற்கு சென்றதும் குறிப்பிடத்தக்கது. அதோடு, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க. முன்னணி தலைவர்கள், பிற மாநில முதலமைச்சர்கள் என பல தலைவர்கள் கர்நாடகத்தில் பிரசாரம் செய்ய உள்ளனர். அதன் காரணமாக, வரும் நாட்களில் கர்நாடக சட்டமன்ற தேர்தல் களத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


உடுப்பியில் பிரம்மாண்ட நிகழ்வு?


பிரதமர் மோடியின் வருகையையொட்டி உடுப்பி நகரில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தலுக்கு முன்னதாக கர்நாடகாவின் கடலோர மாவட்டமான உடுப்பிக்கு பிரதமரின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. உடுப்பி சிக்மக்ளூரு மக்களவைத் தொகுதியில் எட்டு சட்டமன்றத் தொகுதிகளும், உடுப்பியில் நான்கு மற்றும் சிக்மக்ளூருவில் ஐந்து தொகுதிகளும் உள்ளன. 2018 சட்டமன்றத் தேர்தலில், 8ல் 7 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.