கர்நாடக மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை அடுத்து, கட்சித் தலைவர்களும் மூத்த தலைவர்களும் தங்களின் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். அவற்றின் தொகுப்பை இப்போது பார்க்கலாம்.


அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே


இது பொதுமக்களின் வெற்றி. மோசமான நிர்வாகத்துக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். எங்களின் அனைத்து தலைவர்களும் ஒற்றுமையாக வேலை பார்த்துள்ளனர். மக்கள் எங்களின் வாக்குதிகளுக்காக வாக்கு அளித்துள்ளனர். 


புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்எல்ஏக்களையும் இன்று மாலை பெங்களூரு வருமாறு கூறியுள்ளோம். கட்சி தலைமை, நிர்வாகிகளை அனுப்பிய உடன் அடுத்தகட்டப் பணி தொடங்கும். இந்தக் கூட்டத்தில் கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்று தீர்மானிக்கப்படும்.


காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா


இது காங்கிரஸ் கட்சியின் மாபெரும் வெற்றி. பாஜக ஆட்சியால் சலித்துப்போன கர்நாடக மக்கள், மாற்றம் வேண்டி எங்களுக்கு வாக்களித்துள்ளனர். பாஜகவின் வெறுப்பு அரசியலுக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர். சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியின் பிரச்சாரமே வெற்றிக்கு முக்கியக் காரணம். ராகுல் காந்தியின் பாத யாத்திரை, கட்சிக்காரர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. 


இந்த வெற்றி, நாடாளுமன்றத் தேர்தலுக்கான அச்சாணியாக இருக்கும். அனைத்து பாஜக அல்லாத கட்சிகளும் ஒன்றுசேர்ந்து பாஜகவைத் தோற்கடிக்கும் என்று நம்புகிறேன். அதேபோல ராகுல் காந்தி நாட்டின் பிரதமர் ஆவார் என்றும் நம்புகிறேன். 


காங்கிரஸ் தலைவர் ஹரிபிரசாத்


2024ஆம் ஆண்டு (நாடாளுமன்றப் பொதுத் தேர்தல்) மற்றும் வரப்போகும் 3 மாநிலத் தேர்தலுக்கான தெளிவான செய்தி இது. பாஜக வெளியேறியே ஆக வேண்டும். புதுப் பாதையை அல்ல, தெளிவான பாதையையே கர்நாடக மக்கள் தேர்வு செய்துள்ளனர். கர்நாடகாவுக்கு மட்டும் பிரதமர் 20 முறை வந்துள்ளார். எந்த ஒரு பிரதமரும் இத்தனை முறை தேர்தல் பிரச்சாரம் செய்ததில்லை. 


மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி


கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் முடிவை ஏற்று கொள்கிறேன்.


ஆனந்தக் கண்ணீர் வடித்த கர்நாடக காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார்


காங்கிரஸ் கட்சியினரின் ஒட்டுமொத்த உழைப்புக்கு கிடைத்த வெற்றி இது. வெற்றிக்கு காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் மக்கள்தான் காரணம். மக்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


பாஜக முதல்வர் வேட்பாளர் பசவராஜ் பொம்மை


எங்களின் பயணத்தில் இந்த முடிவுகளை எடுத்துக்கொள்வோம். கட்சியின் கட்டமைப்பை மறுசீரமைப்பு செய்து, மக்களவைத் தேர்தலில் மீண்டு வருவோம். 


முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா


தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொள்கிறோம். மக்கள் கொடுத்த இந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன். எதிர்க் கட்சியாக இருந்து மக்களுக்காகத் தொடர்ந்து செயல்படுவோம். 


காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம்



இனி இந்திய மக்கள் விழித்து கொள்வார்கள் என நம்புகிறேன் .