சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த பிரதீப் என்ற மாணவன் தனியார் கல்லூரியில் நான்காம் ஆண்டு இளங்கலை மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பயின்று வருகிறார். இவர் தனது வீட்டிலிருந்து கல்லூரி செல்லும் பயண நேரத்தையும், செலவையும் குறைப்பதற்காக தனது சொந்த முயற்சியில் பிரத்யேகமாக அனைத்து வசதிகளுடன் கூடிய பேட்டரி வாகனம் ஒன்றை வடிவமைத்துள்ளார். இந்த வாகனத்திற்கு 2 மணி நேரம் சார்ஜர் செய்தாலே சுமார் 45 கிலோமீட்டர் தூரம் வரை இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் 40 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 



இந்த வாகனத்தில் நின்று கொண்டும், அமர்ந்துகொண்டும் பயணிக்கும் வகையிலும் புதுவிதமாக பல்வேறு வசதிகளுடன் உருவாக்கியுள்ளார். இந்த பேட்டரி இருசக்கர வாகனத்தில் கைரேகை பதிவு செய்தால் மட்டுமே வாகனத்தை இயக்கும் வகையில் புதுவித தொழில்நுட்பத்தை வாகனத்தில் புகுத்தியுள்ளார். மேலும் குரல் பதிவை கொண்டு பாடல்கள் ஒலிபரப்பு செய்தல், வண்ண விளக்குகளால் இரவு நேரத்தில் ஒளிக்கும் விதமாகவும் தயாரித்து உள்ளார். இந்த வாகனத்தை தயாரிப்பதற்காக வெறும் முப்பதாயிரம் ரூபாய் மட்டுமே செலவு செய்ததாக மாணவர் பிரதீப் உருவாக்கியுள்ளார். இந்த வாகனத்தை சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எடுத்து வந்து அனைத்து இடங்களுக்கும் மாணவர் பிரதீப் இயக்கி பார்ப்பவர்களை கவர்ந்தார். 



பின்னர் வாகனம் குறித்து கூறிய மாணவர் பிரதீப், “எனது வீட்டில் இருந்து தினம் தோறும் 10 கிலோமீட்டர் வரை பேருந்தில் நின்றபடி கல்லூரிக்கு சென்று வந்தேன். எனவே தானாக ஒரு பேட்டரி வாகனத்தை கண்டுபிடித்து அதில் கல்லூரிக்கு செல்ல திட்டமிட்டேன். இதனை தயாரிக்க இரண்டு வார காலம் அவகாசம் எடுத்துக் கொண்டது. இதற்கான செலவுகளை எனது பெற்றோர் எனக்கு வழங்கினார். இந்த பேட்டரி வாகனம் இரண்டு மணி நேரம் சார்ஜ் செய்தால் சுமார் 55 முதல் 60 கிலோ மீட்டர் வரை பயணிக்க முடியும். மேலும் இந்த வாகனம் 150 எடை வரை தாங்க கூடியது” என்று கூறினார்.


மேலும், கல்லூரிக்கு தினந்தோறும் நின்றபடி சென்றதால் இந்த வாகனத்தை நின்றபடி இயக்கவும், தேவைப்பட்டால் அமர்ந்து பயணிக்கும் வகையில் வடிவமைத்து உள்ளதாக தெரிவித்தார். இந்த வாகனம் மூலம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் குறைந்த செலவில் வடிவமைத்து இருப்பதாகவும், கல்லூரி முடித்துவிட்டு இதுபோன்று புதிய வாகனங்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட உள்ளதாகவும் மாணவர் தெரிவித்தார். இது மட்டுமில்லாமல் இந்த வாகனத்தை எங்கு சென்றாலும் வாகனங்களை பிரித்து பாதுகாப்பாக எடுத்துச் சென்று பின்னர் மீண்டும் சேர்த்து பயன்படுத்தலாம் என்று கூறுகிறார்.


 


Car loan Information:

Calculate Car Loan EMI